பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிஹார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, குடியரசுத் தலைவர் வேட்பாளரை இறுதி செய்வது தொடர்பாக பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று (திங்கள்கிழமை) நடந்தது.
சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர், பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிஹார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
23-ல் வேட்புமனு:
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ராம்நாத் கோவிந்த் வரும் 23-ம் தேதி தாக்கல் செய்வார் என அமித் ஷா அறிவித்தார்.
பாஜகவின் தேர்வு குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வேட்பாளர் தேர்வை அனைவரும் ஒப்புக்கொள்வர் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
ராம்ராத் கோவிந்த் ஒரு தலித் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் பயணத்துக்கு முன்..
பிரதமர் மோடி போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய 3 நாடுகளுக்கு வரும் 24-ம் தேதி தனது சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். அதற்கு முன்பாக பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டும் என கட்சி மேலிடம் முடிவு செய்தது.
அதன்படி, குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வுக்காக அமைக்கப்பட்ட அமித் ஷா, அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு, ராஜ்நாத் சிங் ஆகியோர் அடங்கிய குழுவினர் பாஜக வேட்பாளரை தேர்வு செய்து அறிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் அடுத்த மாதம் 25-ம் தேதி முடிகிறது. அதற்கு முன்னர் ஜூலை 17-ம் தேதி புதிய குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது.
Adwani ji. The most powerful leader rejected by Modi ji
ReplyDelete