"உங்க பொண்ணை நம்ம ஸ்கூல் டாய்லெட்டைப் பயன்படுத்த சொல்வீங்களா சார்?" - ஆசிரியருக்கு மாணவியின் கேள்வி!
கற்றல் என்பது உரையாடல்களில் இருந்துதான் தொடங்குகிறது என்பார்கள். ஆனால், நமது கல்விச் சூழல், ஆசிரியர் கூறுவதை மாணவர்கள் கேட்கும்விதமாவே உள்ளது. இது, ஒரு வழிப்பாதை போன்றது அல்லவா. மாணவர்கள், தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் இடமாகப் பள்ளிக்கூடம் இருந்தால்தான் மகிழ்ச்சியோடு கற்பார்கள்.
பள்ளி என்பது மாணவர்கள் கல்வி கற்கும் இடம் மட்டுமல்ல; ஆசிரியர் எனும் வழிகாட்டியை, நண்பர்கள் எனும் பெரும் உறவைப் பெறும் இடமும்கூட. ஆசிரியர் வழிகாட்டியாக இருப்பதோடு, தோழமையுடன் நடந்துகொண்டால், பள்ளியைவிட இனிமையான இடம் வேறு என்ன இருக்கப்போகிறது? ஆனால், ஆயிரம் ஆசிரியர்களில் தோழமையோடு பழகும் ஆசிரியர்கள் மிகச் சொற்பமானவர்களே. அவர்களில் ஒருவர்தான், மணிமாறன்.
திருவாரூர் மாவட்டம், மேல ராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர். இந்தப் பள்ளியில் மாணவர்களின் கருத்துகளை அறிந்துகொள்ள ஒரு பெட்டி இருக்கிறது. அதைப் பற்றிய பேச்சுடன் ஆரம்பித்தார் மணிமாறன்.
"மாணவர்கள் நினைத்தவற்றை ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்ளும் சூழல் வேண்டும். அதற்கான தொடக்கப்புள்ளியே இந்தக் கருத்துச் சுதந்திரப் பெட்டி. 'மனித உரிமைக் கல்வி நிறுவனம்' நடத்திய பயிற்சி ஒன்றில் பங்கேற்றபோது இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். பல பள்ளிகளிலும் இருக்கும் வழக்கமான புகார் பெட்டி போன்றதல்ல. இது, தங்கள் உணர்வுகளை மாணவர்கள் பகிர்ந்துகொள்ளும் பெட்டி. பள்ளிக்குள் தனக்கு ஏற்படும் மகிழ்ச்சி, அவமானம், சோகம், பள்ளியின் குறைபாடு, ஆசிரியர் பற்றி என எதுவாக இருந்தாலும் இந்தப் பெட்டியில் எழுதிப் போடலாம். தன் அடையாளம் இல்லாமலும் கடிதங்களைப் போடலாம். இதை மனித உரிமைக் கல்வி நிறுவனத்தில் பயிற்சிபெற்றதால் நான் மட்டுமே திறக்கலாம். இதில் இடப்படும் கருத்துகளை எவ்வாறு எதிர்கொள்வது எனப் பயிற்சி பெற்றிருக்கிறேன். அதில், முக்கியமான சிலவற்றைச் சொல்கிறேன்.
பெட்டியிலிருந்து எடுக்கப்படும் கடிதத்திலுள்ள கருத்துகளை விருப்பு, வெறுப்பின்றி அணுக வேண்டும், யார் எழுதியிருப்பார் என்கிற ஆராய்ச்சி கூடாது. எழுதியவரின் அடையாளம் தெரிந்தாலும், பொதுவெளியில் காட்டிக்கொள்ளக் கூடாது. கடிதம் எழுதியவரைத் தனிமைப்படுத்தக் கூடாது. சமூக நோக்கத்துடன் அந்தக் கருத்தை அலச வேண்டும். அந்தக் கடிதத்தை சக ஆசிரியர்களிடம் காண்பிக்கக் கூடாது. தேவையெனில் எழுதியிருக்கும் கருத்துக் குறித்து விவாதிக்கலாம். எழுதப்பட்டிருக்கும் பிரச்னைக்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பெட்டியில் வந்த கருத்துகள் என்னையே செதுக்கிக்கொள்ளவும் பயன்படுகிறது.
உதாரணமாக, எங்கள் பள்ளிக் கழிவறை உடைந்து சரியான பராமரிப்பின்றி இருந்தது. அது குறித்து நானும் அக்கறையின்றி இருந்தேன். ஒரு நாள் இந்தப் பெட்டியில் ஒரு கடிதம் இருந்தது. 'சார், நம்ம ஸ்கூல் டாய்லெட் ரொம்ப மோசமாக இருக்கு. அதைப் பயன்படுத்தவே பயமாவும் அருவெறுப்பாகவும் இருக்கு. அதை நீங்க கவனிச்சு இருக்கீங்களா? உங்க பொண்ணை அந்த டாய்லெட்டைப் பயன்படுத்த விடுவீங்களா? அதனால், ஸ்கூல் டாய்லெட்டை சரி பண்ணிக்கொடுங்க ப்ளீஸ். - இப்படிக்கு கீழ்படித்த மாணவி' என்று எழுதியிருந்தது. அதைப் படிச்சதும் பெரும் அதிர்ச்சி. என் மகளைக் குறிப்பிட்டு எழுதியிருந்தது இன்னும் நெருக்கமாக உணரவைத்தது. இத்தனை நாளாக கவனிக்காமல் இருந்துவிட்டோமே என்கிற குற்றவுணர்ச்சி ஏற்பட்டது. உடனே, வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வலியுறுத்தி, கழிவறையைப் புதுப்பித்தோம். ஒருவேளை இந்தக் கருத்துச் சுதந்திரப் பெட்டி இல்லாதிருந்தால், இந்த விஷயம் எனக்குப் புரிஞ்சே இருக்காது.
அடுத்து, ஒரு மாணவன் வீட்டுப் பாடம் எழுதலை. அவன் வகுப்பு ஆசிரியர் தண்டனை கொடுத்திருக்கார். இது நடந்து சில நாள்கள் கழித்து, ஒரு கடிதம் எழுதியிருந்தான். அதைப் படிக்கும்போதே நடுங்கிட்டேன். 'சார், நான் அன்னிக்கு வீட்டுப் பாடம் எழுதாது தப்புதான். ஆனா, அன்னிக்கு முதல் நாள் இரவு எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பயங்கரச் சண்டை. அம்மாவை அப்பா கடுமையா அடிச்சுட்டு வெளியே போயிட்டாரு. அம்மா அழுதுட்டே இருந்தாங்க. பக்கத்து வீட்டிலே இருந்தவங்க 'ஏதாச்சும் பண்ணிக்காதே'னு அம்மாகிட்ட சொன்னதைக் கேட்டேன். விடியற வரைக்கும் தூங்கவே இல்லை. அதனாலத்தான் வீட்டுப் பாடம் செய்யலை'னு எழுதியிருந்தான். அந்த மாணவனிடம் பேசித் தைரியம் சொன்னேன். அவன் பெற்றோரிடமும் பேசினேன்.
இப்படிப் பல கடிதங்கள், 'என் அப்பா வெளியூரில் இருக்கார். ரெண்டு நாளுக்கு ஒரு தடவை பேசுவார். நேத்துப் பேசும்போது, அம்மா போன்ல பேலன்ஸ் தீர்ந்துட்டதால நான் அப்பாவோடு பேசவே முடியல' என ஒரு மாணவி எழுந்திருந்தாள். உடனே என் போனிலிருந்து அவள் அப்பாவை அழைச்சுப் பேசவெச்சேன்.
சுவாரஸ்யமான இன்னொரு கடிதம் இருக்கு. 'சார், நம்ம ஸ்கூல்ல இருக்கிற பீரோ ரொம்ப பழசாயிட்டு. நாங்க பக்கத்துல போகும்போது எங்க மேல விழுந்துட்டா என்ன ஆகுறது? நீங்கதான் அநாவசியமா போலீஸ் ஸ்டேசன் போகணும்' என எழுதியிருந்தது. படிச்சு சிரிச்சாலும், உடனடியா அந்த பீரோவை மாற்றவும் முயற்சி எடுத்தேன். 'நான் இப்போ எட்டாவது படிக்கிறேன் சார். ஆறாவது படிக்கும்போது சில பொருள்களைத் திருடியிருக்கேன். இப்போ அப்படி செய்யறதில்லை. ஆனால், இப்பவும் நான் திருடுறதா என் ஃப்ரெண்ட்ஸ் சொல்றப்ப கஷ்டமா இருக்கு'னு ஒரு கடிதம். மாணவிகள் தங்களின் தனிப்பட்ட பிரச்னைகளையும் எழுதியிருக்காங்க. என் மனைவியும் இதே பள்ளியில்தான் வேலை செய்யறாங்க. ஒரு கடிதம் தனி கவரில் இருந்தது. கவர் மீது 'இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்க வேண்டாம். டீச்சரிடம் கொடுக்கவும்' என்று இருந்தது. என் மனைவியிடம் கொடுத்தேன். ஒரு மாணவி, மாதவிலக்கு பற்றிய சந்தேகத்தை எழுதியிருந்ததாக என் மனைவி கூறினார்.
ஒவ்வொரு மாணவருக்குள்ளும் சொல்வதற்கு எவ்வளவோ செய்திகள் இருக்கு. என் மீது புகார் சொல்லியும் கடிதங்கள் வந்திருக்கு. அந்த விஷயங்களில் என்னைச் சரிசெய்துகிட்டேன். மாணவர்களை இன்னும் நெருக்கமாக நேசிக்க, இந்தப் பெட்டி உதவுகிறது. எல்லாப் பள்ளிகளிலும் இதுபோன்ற கருத்துச் சுதந்திரப் பெட்டி இருக்கணும்" என்று நெகிழ்ச்சியுடன் முடிக்கிறார் ஆசிரியர் மணிமாறன்.
Sir oru aasiriyarai Mattum 6 public exam subject Karpika solli yenga +2 life yai spoil panna ninaiklrargal.11 bot zoo bio and 12 bot zoo bio. Nanga tennis pannuvathu.ungal school pol yentha pettiyyum Illai. Yengal MBBS kanavu yennavathu. Pavam aasiriyar. Yengaluku uthavungal. Reply soon sir. Innoru aasiriyar karpithal nantaga irukkum.
ReplyDelete