சென்னை:கையடக்க செயற்கைக்கோளை உருவாக்கிய, கரூர் மாணவருக்கு, சட்டசபையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சட்டசபையில், கேள்வி நேரம் முடிந்ததும், கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது:
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் உள்ள, கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்
பள்ளியில், பிளஸ் 2 படித்த மாணவர், முகமது ஷாருக் ரிபாத் ராஜ், கையடக்க
செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி உள்ளார்.இந்த செயற்கைக்கோளுக்கு, முன்னாள்
ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவாக, 'கலாம் சாட்' என, பெயரிடப்பட்டு, ஜூன், 22
மாலை, 3:30 மணிக்கு, அமெரிக்காவில் உள்ள, 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி
மையத்தில் இருந்து, வெற்றிகராக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த செயற்கைக்கோள், 64 கிராம் எடை உடையது; ஒரு லட்சம் ரூபாயில்
தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையை படைத்து, இந்தியாவிற்கும்,
தமிழகத்திற்கும் பெருமை தேடி தந்துள்ள, முகமது ஷாருக் ரிபாத் ராஜுக்கு,
இந்த சபை சார்பிலும், என் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும்,
வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதோடு, 57 நாடுகளைச் சேர்ந்த, 8,000 மாணவர்களை, 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி
மையம், தேர்வுக்காக அழைத்திருந்தது; அதில், இவரும் ஒருவர். அவருக்கு நிதி
உதவி செய்ய, அரசு பரிசீலிக்கும்.இவ்வாறு அமைச்சர் கூறியதும்,
எம்.எல்.ஏ.,க்கள் மேஜையை தட்டி, பாராட்டு தெரிவித்தனர்.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: அந்த மாணவருக்கு பாராட்டுக்கள். அமைச்சர்,
எந்த விதிமுறையின் கீழ், இதை அறிவிக்கிறார்; நீங்கள், எந்த விதியின் கீழ்
அனுமதி அளித்தீர்கள்?
சபாநாயகர் தனபால்: அதை விடுங்கள்.
அமைச்சர் செங்கோட்டையன்: அந்த மாணவருக்கு, முதல்வர் வந்ததும், உதவித் தொகை வழங்கப்படும்.
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்: எங்கள் மாவட்டத்தை சேர்ந்த மாணவருக்கு,
பாராட்டு தெரிவித்து, கட்சி சார்பில், ஒரு லட்சம் ரூபாய், நிதியுதவி வழங்கி
உள்ளோம்.இவ்வாறு விவாதம் நடந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...