மதுரையில்
இடம் தேர்வு செய்வதில் அதிகாரிகள் 'கோட்டை' விட்டதால் 3 கோடி ரூபாயில்
அறிவிக்கப்பட்ட 'ஆசிரியர் இல்லம்' திட்டம் நிரந்தரமாக கைவிட்டு போகும்
சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சட்டசபையில் 110
அறிவிப்பின் கீழ் 'கோவை, மதுரை மாவட்டத்திற்கு 3 கோடி ரூபாயில் ஆசிரியர்
இல்லங்கள் கட்டப்படும்,' என்று அறிவித்தார்.
இதற்கான நிதியும் 2016ல் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மதுரை ஒத்தக்கடை புதுத்தாமரைப்பட்டி அருகே 3 ஏக்கரில் ஆசிரியர் இல்லம் கட்ட மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்வித்துறைக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இதை ஆய்வு செய்த அப்போதைய கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், 'நகரில் இருந்து துாரம் என்பதால் இதைவிட அருகில் இடங்கள் உள்ளதா' என ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
மாற்று இடங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், மதுரையில் இடம் தேர்வு செய்யப்படாததால் மானிய கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பில் இத்திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அவர்கள் கூறுகையில், "புதுத்தாமரைப்பட்டி இடத்தை தேர்வு செய்திருந்தால் தற்போது கட்டடப் பணி துவங்கியிருக்கும். இதுவரை இடம் குறித்து முடிவு செய்யப்படாததால் ஒதுக்கிய நிதி திரும்ப செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் இடம் தேர்வு செய்வதில் தமக்கு ஆதாயம் கிடைக்குமா என பார்த்து 'உள்குத்து' வேலைகளில் ஈடுபடுவதால் தான் சரியான இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்ய சிரமப்படுகின்றனர்," என்றனர்.
கல்வி அதிகாரிகள் கூறியதாவது:புதுத்தாமரைப்பட்டி இடம், நகரில் இருந்து துாரம் என்பதால் அதை தேர்வு செய்ய அதிகாரிகள் தயங்கினர். இதற்கிடையே ஜெய்ஹிந்துபுரம் மார்க்கெட் அருகே கல்வித்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் ஒரு ஏக்கருக்கும் குறைவாக இருந்ததால் அதை பொதுப்பணித்துறை ஏற்கவில்லை.மானியக் கோரிக்கைக்கு பின், 'விரைவில் ஆசிரியர் இல்லத்திற்கு இடம் தேர்வு செய்து பொதுப்பணித்துறைக்கு ஒப்படையுங்கள்,' என துறை இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை அருகே மற்றும் விமான நிலையம் செல்லும் பகுதியில் இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன, என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...