அரசுப் பள்ளிகளிலேயே
எல்லோரும் படிக்க வேண்டும் என்ற குரல் பலமாக ஒலித்துவருகிறது. குறிப்பாக,
அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்கிற
கருத்து சமீபகாலத்தில் பரவலாகப் பேசப்பட்டது. அப்படியிருக்க... தமிழகத்தைச்
சேர்ந்த இரண்டு அரசு ஊழியர்கள், தனியார் பள்ளியில் படித்துவந்த தங்கள்
பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கு மாற்றி மக்களுக்கு முன்னுதாரணமாக
மாறியிருக்கிறார்கள்.
"என்னைப் பார்த்து பலரும் முன்வருவார்கள்!"
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ்,
"நானும் கவர்மென்ட் ஸ்கூல்லதான் படிச்சேன். ஆனால், காலமாற்றத்துக்கு ஏற்ப
என் பையன் சாய்குருவைத் தனியார் பள்ளியில் சேர்த்திருந்தேன். இந்த
நிலையில், அரசு ஊழியரா இருக்கிற நாமளே நம்ம பிள்ளையைத் தனியார் பள்ளியில்
படிக்கவைக்கிறோமே என்கிற எண்ணம் மனசுக்குள்ளே ஓடிட்டே இருந்துச்சு.
வசதியானவர்களைப் பார்த்து ஏழைகளும் தங்களின் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில்
சேர்த்துடறாங்க. அப்புறம், ஃபீஸ் கட்டவே சிரமப்படுறாங்க. அதைப் பல
இடங்களில் பார்த்து வருத்தப்பட்டிருக்கேன். சமூகப் பொறுப்புள்ள பணியில்
இருக்கிற நாம், பலருக்கும் முன்னுதாரணமா மாறணும்னு நினைச்சேன்.
அதன்படி, சாத்தூர் அருகிலுள்ள படந்தால் கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய
தொடக்கப் பள்ளியில் என் பையனை மூன்றாம் வகுப்பில் சேர்த்திருக்கேன். அரசுப்
பள்ளியிலயே சிறப்பாகச் சொல்லிக்கொடுக்கிறாங்க. அதனால, பையனும்
குடும்பமும் மகிழ்ச்சியடைகிறோம். என்னோட இந்த முடிவைப் பலரும்
பாராட்டினாங்க. ஒரு சின்ன விதையை நட்டதாக நினைக்கிறேன். இதுபோல பலரும்
முன்வந்து தங்கள் பிள்ளைகளை கவர்மென்ட் ஸ்கூல்ல சேர்த்தால், கல்வி என்கிற
அடிப்படை உரிமை எல்லோருக்கும் தரமாகவும் இலவசமாகவும் கிடைக்கும்னு உறுதியா
நம்புகிறேன்" என்று புன்னகைக்கிறார்.
"என்னோட பொறுப்பை உணர்ந்திருக்கேன்!"
திருநெல்வேலி மாவட்டம், திருநாவுக்கரசு அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியின்
ஆசிரியையான கற்பகச்செல்வி, "கவர்மென்ட் ஸ்கூல்ல படிச்ச நான், இங்கே
நான்காம் வகுப்பு ஆசிரியையாக ஆறு வருஷமா வொர்க் பண்ணிட்டிருக்கேன். என்
ரெண்டு பசங்களும் தனியார் பள்ளியில் படிச்சிட்டிருந்தாங்க. மாணவர்
சேர்க்கையை அதிகப்படுத்த விடுமுறை காலத்தில் ஆசிரியர்கள் எல்லாம் ஒண்ணா
சேர்ந்து கிராமத்துக்குப் போய் அங்க இருக்கிற மக்களுக்கு அரசுப் பள்ளி
பத்தின விழிப்புஉணர்வை ஏற்படுத்துவோம். அப்படி பொதுமக்களைச் சந்திச்சுப்
பேசினபோது, 'உங்க பிள்ளைங்க எங்கே படிக்கிறாங்க?'னு கேட்டாங்க. 'தனியார்
பள்ளியில்'னு தயங்கிக்கிட்டே சொல்ல, 'முதல்ல உங்கப் பிள்ளைகளை கவர்மென்ட்
ஸ்கூல்ல சேர்த்துவிடுங்க. நாங்க நம்பிக்கையோடு வந்து சேர்க்கிறோம்'னு
சொன்னாங்க.
நியாயம்தானே? ஆசிரியையாகவும் அரசு ஊழியராகவும் இருக்கிற நானே இப்படிச்
செய்திருக்கேனேனு குற்றஉணர்வு உண்டாச்சு. உடனடியாக, என் பசங்களை நான்
வொர்க் பண்ற பள்ளியிலேயே சேர்த்தேன். இப்போ, பெரிய பையன் செல்வரத்தினம்
ஐந்தாம் வகுப்பும், சின்னவன் மோகன ரங்கவேல் மூன்றாம் வகுப்பும்
படிக்கிறாங்க. தினமும் என்கூடவே ஸ்கூலுக்கு வர்றாங்க. பசங்க சரியா
படிக்கிறாங்களான்னு என்னால இன்னும் நெருக்கமா கவனிக்க முடியுது. இந்த நல்ல
விஷயத்தை இவ்வளவு நாளா மிஸ் பண்ணியிருந்தாலும், இப்போ பெருமைப்படுறேன்.
தனியார் பள்ளியைவிட பல வகையிலும் கவர்மென்ட் ஸ்கூல்ல சிறப்பான கல்வி கொடுக்கிறோம்.
இனி விழிப்புஉணர்வு நிகழ்ச்சிக்குப் போகும்போது, தைரியமாப் போவேன். 'என்
பசங்க அரசுப் பள்ளியில்தான் படிக்கிறாங்க'னு கம்பீரமாகச் சொல்வேன். அதற்கான
முயற்சியைச் சிறப்பா செய்வேன்" என்று நம்பிக்கையுடன் சிரிக்கிறார்
கற்பகச்செல்வி.
god bless u
ReplyDeletegod bless u
ReplyDelete