சென்னை: ''இன்ஜினியரிங் கல்லுாரிகளின் கல்வி கட்டணம், இந்த ஆண்டு
உயர்த்தப்படும்,'' என, உயர் கல்வி செயலர், சுனில் பாலிவால் தெரிவித்தார்.
சென்னை, அண்ணா பல்கலையில், அவர் அளித்த பேட்டி: 'நீட்' தேர்வால், மருத்துவ
கவுன்சிலிங் தேதியை, அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. அதனால், இன்ஜி.,
கவுன்சிலிங் தேதியையும் உறுதி செய்வதில், தாமதம் ஏற்பட்டுள்ளது. 'நீட்'
தேர்வு முடிவு, ஜூன், 26க்குள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி
வெளியாகும் போது, சரியான தேதியை முடிவு செய்வோம்.
தேதி மாறலாம் : இந்த ஆண்டு, 52 ஆயிரத்து, 899 மாணவியர் உட்பட, 1.41 லட்சம்
பேர், இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், 71
ஆயிரத்து, 275 பேர் முதல் பட்டதாரிகள். தற்போதைய நிலையில், வரும், 27ல்
கவுன்சிலிங்கை துவக்க திட்டமிட்டுள்ளோம். மருத்துவ கவுன்சிலிங்குக்கு ஏற்ப,
தேதி மாறலாம். அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், இன்ஜினியரிங்
பாடத்திட்டம், இந்த ஆண்டு மாற்றப்படும். அதேநேரத்தில், 2012 ஜூலையில்,
இன்ஜி., கல்லுாரிகளுக்கான கல்வி கட்டணம் மாற்றப்பட்டது.
வசூலிக்க கூடாது : தற்போது, ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்ரமணியன் தலைமையிலான,
கட்டண நிர்ணய கமிட்டியில், புதிய கட்டணம் கோரி, கல்லுாரிகள்
விண்ணப்பித்துள்ளன; அவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு கட்டண
மாற்றம் வர வாய்ப்புள்ளது. ஆனால், கமிட்டி
நிர்ணயிக்கும் கட்டணத்தை விட அதிக கட்டணத்தை, கல்லுாரிகள் வசூலிக்கக்
கூடாது என, திட்டவட்டமாக தெரிவித்து உள்ளோம். இவ்வாறு சுனில் பாலிவால்
கூறினார்.
விரைவில் தரவரிசை : அண்ணா பல்கலையின் தன்னாட்சி அந்தஸ்து பெறாத, தனியார்
இன்ஜி., கல்லுாரிகள், பல்கலையின் உறுப்பு கல்லுாரிகள், அரசு கல்லுாரிகளின்,
மாணவர் தேர்ச்சி சதவீதம், ஒரு வாரத்திற்கு முன் வெளியானது. இந்நிலையில்,
தன்னாட்சி பெற்ற இன்ஜி., கல்லுாரிகள், அரசு கல்லுாரிகள் மற்றும் அண்ணா
பல்கலையின் நேரடி வளாக கல்லுாரிகளின் தரவரிசை பட்டியல் விரைவில் வெளியாகும்
என, உயர் கல்வி செயலர், சுனில் பாலிவால் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...