பெங்களூரு: அகில இந்திய அளவிலான, 2016 யு.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள்
நேற்று வெளியானது. கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம் கெம்பகோடியை சேர்ந்த
கே.ஆர்.நந்தினி முதலிடம் பிடித்தார். இவரது தந்தை, ரமேஷ், அரசு
உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும், தாய், விமலா, தனியார் பள்ளி ஆசிரியையாகவும்
பணியாற்றி வருகின்றனர்.
கோலார் சின்மயா பள்ளியில், பள்ளி படிப்பை முடித்த நந்தினி, மூடபிதரி
ஆல்வாஸ் பி.யூ., கல்லூரியில் பி.யூ.சி., முடித்தார். இதன் பின்,
பெங்களூரின் எம்.எஸ்.ராமையா பொறியியல் கல்லுாரியில் பி.இ., சிவில்
பொறியியல் படிப்பில் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்வு பெற்றார்.
இதையடுத்து, கர்நாடகா அரசின் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் வாய்ப்பு
கிடைத்தது. டில்லியில் உள்ள கர்நாடகா பவனில், பொறியாளராக தன் பணியை
துவக்கினார்.
கடந்த முறை நடந்த யு.பி.எஸ்.சி., தேர்வில், 642வது இடம் பிடித்து,
ஐ.ஆர்.எஸ்., அதிகாரியாக தேர்வானார். இதன் மூலம், பரிதாபாத்தில் சுங்க
அதிகாரியாக பயிற்சி பெற்று வந்தார்.
இருந்தும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவதையே, தன் குறிக்கோளாக கொண்டிருந்ததால், 2016ல் மீண்டும், யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதினார்.
இதற்கான முடிவுகள், டில்லியில் நேற்று வெளியானது. அகில இந்திய அளவில்
முதலிடம் பிடித்து, ஐ.ஏ.எஸ்., ஆகும் தனது கனவை நனவாக்கியுள்ள, நந்தினியை,
முதல்வர் சித்தராமையா பாராட்டியுள்ளார். 17 ஆண்டுகளுக்கு பின், கர்நாடகாவை
சேர்ந்தவர், முதலிடம் பிடித்தது பெருமையாக உள்ளது என அவர்
குறிப்பிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...