சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட, ஆளுங்கட்சியினரின் ஆர்வமின்மையால் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் தொய்வு நிலவுகிறது.
உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம், கடந்தாண்டு அக்டோபரில் முடிந்ததையடுத்து, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. முறையான இடஒதுக்கீடு இன்றி, அவசர கோலத்தில் தேர்தல்
அறிவிக்கப்பட்டதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க., உட்பட சில அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப் பட்டது. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இடஒதுக்கீடு போன்ற பணிகளை விரைந்து முடித்து தேர்தல் நடத்தவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட, வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, வார்டு வாரியாக பட்டியல் தயாரிக்கும் பணி நடந்தது. தற்போது அ.தி.மு.க.,வில் நிலவும் உள்கட்சி மோதலால், அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், மாநில தேர்தல் அதிகாரியாக பொறுப்பு ஏற்ற மாலிக் பெரோஸ்கான், சில நாட்களுக்கு முன் திருச்சியில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். தொடர்ந்து, மண்டல வாரியாக கூட்டங்கள் நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.
இதற்கிடையில், முதல்வர் பழனிச்சாமி அரசை தக்க வைத்து கொள்வதில் முனைப்பு காட்டி வருகிறார். அமைச்சர்களும், அதே எண்ணத்தில் இருப்பதால் மற்ற பணிகளில் ஆர்வம் காட்டவில்லை. மதுரை உட்பட சில மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்காக ஓட்டுச்சாவடிகள் பட்டியல் வெளியிட்டதுடன் சரி; மற்ற பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் அலுவலர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி முடியும் தருவாயில் உள்ளது. இடஒதுக்கீடு மற்றும் வார்டுகள் பிரிப்பு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அரசு உத்தரவிடும் பட்சத்தில் உள்ளாட்சி தேர்தல்பணிகளில் அலுவலர்கள் தீவிரமாக இறங்க தயாராகவுள்ளனர், என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...