‘‘ஒருசில வங்கிகள், வாடிக்கையாளர்களை விரட்டவே, சேவை கட்டணங்களை உயர்த்துகின்றன,’’ என, ரிசர்வ் வங்கி துணை கவர்னர், எஸ்.எஸ்.முந்த்ரா காட்டமாக தெரிவித்து உள்ளார்.
அவர், மும்பையில், பி.சி.எஸ்.பி.ஐ., எனப்படும், இந்திய வங்கி நடைமுறைகள் மற்றும் தர நிர்ணய வாரியத்தின் கூட்டத்தில், மேலும் பேசியதாவது: வாடிக்கையாளர்களுக்கு தேவையான வங்கிச் சேவைகள் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்தும் அதிகாரம் மட்டுமே, ரிசர்வ் வங்கிக்கு உள்ளது. மற்றபடி, வங்கிகள் பல்வேறு சேவைகளுக்காக, வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம், ரிசர்வ் வங்கிக்கு கிடையாது.
தப்பிக்க வேண்டாம்: வாடிக்கையாளர் கணக்கில், குறைந்தபட்ச சராசரி இருப்பை நிர்ணயிக்கும் அதிகாரம் வங்கிகளுக்கு உள்ளது. அது போல, பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தையும், அவை நிர்ணயித்துக் கொள்ளலாம். வங்கிகள், குறிப்பிட்ட பிரீமியம் சேவைகளுக்கு கட்டணம் வசூலிப்பதில், ரிசர்வ் வங்கிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், வங்கிகள், அடிப்படை கட்டணங்களை கூட, நியாயமற்ற வகையில் மிக அதிகமாக நிர்ணயித்து, வாடிக்கையாளர்களை வெளியேற்றக் கூடாது.
அதே சமயம், வாடிக்கையாளர்களுக்கு சேவையை மறுக்கவோ அல்லது அவர்கள் வங்கியை விட்டு வெளியேறுவதற்கோ, இக்கட்டணங்கள் தான் காரணம் எனக்கூறி, வங்கிகள் தப்பித்துக் கொள்ளக் கூடாது. ஒருசில வங்கிகள், இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதை, ரிசர்வ் வங்கி கவனித்து வருகிறது. வங்கித் துறை, இத்தகைய பாதையில் தான் செல்லத் துவங்கியுள்ளது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு, ‘வங்கிக் கணக்கு எண் போர்ட்டபிளிட்டி’ தான். இது நடைமுறைக்கு வந்தால், அதிக கட்டணம் வசூலிக்கும் வங்கியின் வாடிக்கையாளர், சொல்லாமல் கொள்ளாமல், மிக சுலபமாக, குறைந்த கட்டணம் வசூலிக்கும் வங்கிக்கு, தானே மாறி விடுவார்.
விதிமீறல்: ஒரு நிறுவனத்தின் மொபைல் போன் எண்ணை மாற்றாமல், வேறு நிறுவனத்தின் சேவையை பெறும் வசதி போல, வங்கித் துறையிலும் வர வேண்டும். நாட்டின் பெரும்பான்மையான மக்களிடம், தற்போது, ‘ஆதார்’ அடையாள அட்டை உள்ளது. அது போல, இணையம், மொபைல் போன் வாயிலான பணப் பரிவர்த்தனைகளும் அதிகரித்துள்ளன. அதனால், ‘வங்கிக் கணக்கு எண் போர்ட்டபிளிட்டி’ வசதியை சுலபமாக அமல்படுத்த முடியும்.
பெரும்பான்மையான வங்கிகள், பி.சி.எஸ்.பி.ஐ., விதிகளை கடைபிடிப்பதில்லை. இது தொடர்பான புகார்கள், கடந்த ஆறு ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளன. வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கும் கணக்கு புத்தகம் தொடர்பான விதிமுறைகளை, ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
‘வங்கி கணக்கு எண் போர்ட்டபிளிட்டி’ அதிக கட்டணம் வசூலிக்கும் பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு, ‘வங்கிக் கணக்கு எண் போர்ட்டபிளிட்டி’ தான். இது நடைமுறைக்கு வந்தால், அதிக கட்டணம் வசூலிக்கும் வங்கியின் வாடிக்கையாளர், சொல்லாமல் கொள்ளாமல், மிக சுலபமாக, குறைந்த கட்டணம் வசூலிக்கும் வங்கிக்கு, தானே மாறி விடுவார். -எஸ்.எஸ்.முந்த்ரா. துணை கவர்னர், ரிசர்வ் வங்கி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...