Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Always Health, Always Young!

எப்போதும் இளமை, எப்போதும் ஆரோக்கியம்..!!

எப்போதும் இளமை, எப்போதும் ஆரோக்கியம், எப்போதும் நீண்ட உற்சாகமான வாழ்வு வாழ முன்பெல்லாம் சொல்லப்பட்டு வந்த ஒரே வாசகம் `தினமும் ஒரு ஆப்பிள்' என்பது தான். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் போதும்... எந்த ஒரு டாக்டரையும் சந்திக்க வேண்டி இருக்காது என்று நம்பப்பட்டு வந்த காலம் இப்போது இல்லை. அழகும், ஆரோக்கியமும் நிறைந்த நீடித்த வாழ்க்கைக்கு ஒரு ஆப்பிள் மட்டும் போதாது என்று அறிவியல் நிபுணர்கள் முடிவுக்கு வந்துவிட்டார்கள். மூளையின் செயல்திறனைத் தூண்ட, இருதய நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்க, தோல் இளமையும் பூரிப்பும் நிறைந்து மின்ன மருத்துவ நிபுணர்கள் வேறு சில வழிகளை பரிந்துரைக்கிறார்கள்

. கீழே கொடுக்கப்பட்டவற்றை கவனித்துப் பயன்படுத்துங்கள்.

1-முடிந்தவரை சற்று எடை குறையுங்கள்

நான் சற்று எடை அதிகம். ஆனால் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேன் என்று சொல்பவர்களும் கூட எடை குறைத்தால் நல்லது. காரணம் எடை அதிகம் என்பது எதிரிலிருக்கும் ஆளை கிறங்கடிக்கும் ‘Hot’ லிஸ்டில் வராது. தவிர எடை அதிகம் எந்த நேரத்திலும் உங்கள் காலை ஆரோக்கியமற்ற குழியில் தள்ளிவிடும். சிகரெட்டுக்கு அடுத்தபடியாக எடை அதிகமாக இருக்கிற காரணம்தான் வாழ்நாளைக் குறைக்கிற விஷயத்தில் முன்னணியில் இருக்கிறது என்கிறார்கள்.

கூடவே கொழுப்புச் செல்களால் உருவாகும் ஹார்மோன் நீரிழிவு நோயை உருவாக்குவதில் அதிகம் பங்கு பெறுகிறது.

மிக சாதாரணமாக மூன்று கிலோ அதிக கொழுப்பு கூட உடலில் இன்சுலின் இயங்குதலை தடை செய்கிறது. கொழுப்புச் செல்களால் உருவாகும் `சைட்டோனகன்' என்கிற பொருள் இரத்தக் குழாய்களை பாதித்து, தடிக்க வைத்து இருதயத்தைப் பாதிக்கிறது. எல்லா மனிதர்களைவிட எடை அதிகம் இருப்பவர்களில் 75 சதவிகிதத்தினருக்கு வாழ்நாள் அளவு குறைகிறது என்று உறுதிப்படுத்துகிறார்கள். அதற்காக எடை குறைக்க மிக மிக வேகமாக உணவில் கை வைக்காதீர்கள். ஆரோக்கியமாக எடை குறைக்கும் வழிகளில் ஈடுபடுங்கள்.

2-மீன் பிடியுங்கள்

மேற்சொன்ன வழி என்பது உயிரோடு இருக்கும் மீனை தண்ணீரில் பிடியுங்கள் என்பதல்ல. தட்டில் சமைத்த மீனை ஒரு பிடிபிடியுங்கள். உலகின் பல்வேறு நாடுகளில் நீண்ட காலம் வாழ்ந்தவர்களை எல்லாம் ஆய்வு செய்ததில் அவர்கள் இருதயநோய், நீரிழிவு, கேன்ஸர், மூளை உறைவு போன்று எதிலும் பாதிக்கப்படாமல் இருந்தார்கள். இதற்குக் காரணம் அவர்கள் உணவில் இருந்த மீன். மீனில் இருந்த ஓமேகா 3 என்ற ரகசியம்! இது இரத்தத்தில் அதிக ப்ளேட்லெட்டுகளை உற்பத்தி செய்து நீண்டநாள் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகின்றது. உணவில் 3 கிராம் ஓமேகா 3, 50 சதவிகித ஹார்ட் அட்டாக்கைத் தடுக்கிறது. மோசமான டிரைகிளிசைரைட் அளவைக் குறைக்கிறது. ஆர்த்ரைடிஸ் வலியைப் பெரிதும் குறைக்கிறது. கேன்ஸர் உருவாவதைத் தடுக்கிறது, மூளை செயல்படும் வேகத்தைக் கூட்டுகிறது.

தோலை மினுமினுப்பாக்குகிறது. அதன் சுருக்கத்தைக் குறைக்கிறது. இவை தவிர மனஅழுத்தம், அல்சைமர் நோய், சில வகை கண் பிரச்னைகள் என எல்லாவற்றுக்கும் ஒரு மா மருந்துபோல மீன் கண் சிமிட்டுகிறது. சமீபத்திய ஒரு ஆய்வின்படி கர்ப்ப காலத்தில் மீன் சாப்பிடுகிற பெண்களுடைய குழந்தைகளின் மினி அதிகரிக்கிறது என்கிறார்கள். ஆக நல்ல மீன் சாப்பிடுங்கள். சைவர்கள் மாசுபடாத மீன் எண்ணெய் மாத்திரைகளைச் சாப்பிடுங்கள்.

3-தட்டில் வானவில்லை வரவழைத்து சாப்பிடுங்கள்

இது கேட்க அழகாக இருப்பது போலவே, சாப்பிட்டால் பார்க்கவும் நம்மை அழகாக மாற்றும். வானவில் என்றால் வேறொன்றும் இல்லை. பலநிற காய்கறிகள். அவ்வளவுதான். தட்டில் எத்தனை நிறத்தில் காய்கறிகள் கூடுகிறதோ அவ்வளவு ஆரோக்கியம் உங்கள் உடலிலும் கூடுகிறது என்று அர்த்தம். தாவரங்கள் உருவாக்குகிற வேதிப்பொருட்கள் அவற்றின் வளர்சிதை மாற்றத்தில் மட்டும் அடிப்படையாகப் பங்கு பெறுவதில்லை. அவற்றின் உயிர்வாழ்தலைக் காக்கவும் பங்கு பெறுகின்றன. தாவரங்களின் இதே செயல் நமக்குத் தேவைப்படுவதால் தாவர உணவின் வழி நமக்குக் கிடைக்கிற வேதிப்பொருட்கள் நமக்கும் அடிப்படை ஆகின்றன. இதனால் நோய் எதிர்ப்புத் திறன், தோல் ஆரோக்கியம் என பல்வேறு விஷயங்கள் மேம்படுகின்றன. ஆக அத்தனை நிறத்திலும் காய்கறிகள் சாப்பிடுங்கள்.

4- ஓட்ஸ் பருகுங்கள்

காலையில் டோஸ்ட், ஜூஸ் என அவசரப்பட்டதெல்லாம் விடுங்கள். அதைவிட ஆரோக்கியம் தரும் ஓட்ஸ் பருகுங்கள். இதில் இருக்கிற `பீட்டா குளகான்' என்கிற தாது நம் நோய் எதிர்ப்பு சக்தியில் அபார பங்கு வகிக்கிறது. தவிர ஓட்ஸ் என்பது சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளின் கலவை. இதனால் சுலப ஜீரணம் என்பதைத் தவிர்த்து நம் உடலில் இரத்த சர்க்கரையின் அளவை திறமையாக கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. தவிர ஒரு ஸ்பாஜ் போல ஜீரணத்தின் போது கொலஸ்டிராலின் மீது செயல்பட்டு அவற்றை வெளியேற்ற உதவுகிறது. இதனால் இருதய நோய்கள் குறைகின்றன. தவிர ஒரு பவுல் ஓட்ஸ் தருகிற கலோரி 455. நம் தினசரி தேவையின் பாதி நல்லவைகளை இந்த ஒரு கப் மட்டுமே கொடுத்துவிடுகிறது. ஒரு ஆய்வின்படி காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுகிறவர்கள் மதியம் சாப்பிடும்போது 30 சதவிகித கலோரி குறைவாகச் சாப்பிடுகிறார்கள். ஆக ஓட்ஸ் நேரடியாக உங்கள் இடுப்பில் கை வைத்து அளவைக் குறைக்கத் தொடங்கிவிடுகிறது.

5- சந்தோஷக் கோப்பையைக் கையில் ஏந்துங்கள்

நாம் நினைப்பதில் என்ன இருக்கிறது என்று சிலர் நினைக்கலாம். நினைப்பு - எண்ணம் நம் உடலினுள் சர்க்கியூட்டை கவனித்துச் செயல்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. வருத்தம், மனஅழுத்தம் போன்றவற்றிற்கு உடல் நோய்களோடு நெருக்கமான தொடர்பு உண்டு என்பது பல்வேறு நிலைகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

1960-ல் மினிசோட்டாவில் நடந்த ஆய்வில் சிரிப்பவர்கள், வருத்தப்படுபவர்கள் இரு பிரிவினரும் முப்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், அடிக்கடி வருத்தப்படுபவர்கள் - எதிர்மறையாகச் சிந்திக்கிறவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு குறைந்திருத்தது. சந்தோஷமாக இருங்கள்.

6-குடும்பத்தினருடன் நெருக்கமாகுங்கள்

அமெரிக்காவின் அல்லயன்ஸ் ஆஃப் ஏஜிங் ரிசர்ச் நடத்திய ஆய்வில் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருப்பது ஆரோக்கியமாக வைத்திருக்கிறது என்று முடிவு கொடுத்திருக்கிறார்கள். இதற்கு அவர்கள் காரணமாகக் காட்டுவது ஸ்ட்ரெஸ் - மனஅழுத்தத்தை. குடும்பத்தினருடன் நெருக்கமாக இருக்கிறவர்களிடம் இந்த மனஅழுத்தம் அதை மிகமிகக் குறைக்கிறது என்கிறார்கள். இது இருதயநோய்கள், மனச்சோர்வு போன்றவற்றிற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. வாரத்திற்கு ஒரு நாள் போதும், ஆரோக்கியத்தின் சிரிப்பு கேட்கத் தொடங்கிவிடும்.

7-மூளைக்கு வேலை

குறுக்கெழுத்து, நெட்டெழுத்து என மூளையைத் தூண்டும் செயல்களில் ஈடுபடுங்கள். இது உங்கள் பிறந்தநாள் மெழுகுவர்த்திகளை அதிகப்படுத்தும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். செஸ் போல ஏதோ ஒன்றில் மடக்கி மடக்கி மூளைக்கு வேலை கொடுப்பதில் ஞாபகசக்தி அதிகரிக்கிறது. டிமன்ஷியா என்கிற மூளை மழுங்கடிப்பு நோய் ஏற்படும் அளவு குறைகிறது. சொடுக்கு, ஃபளீஸ் என ஏதோ ஒன்று... சட்டென்று தயாராகுங்கள்.

8-எந்த பார்ட்டியிலும் வைன்

ஏதோ ஒரு காரணம் சொல்ல எங்காவது ஏதோ ஒன்றைக் குடிப்பதற்கு பதில் சிவப்பு நிற வைன் மீது கை வையுங்கள். பல்வேறு ஆய்வுகளின்படி வைன் இருதய நோய்களைத் தடுக்கிறது. பற்சிதைவைத் தடுக்கிறது. மேல் சுவாசக் குழாயில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. தவிர வைனில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் என்கிற மகத்துவமான பொருள் அடர்ந்து இருக்கிறது. இது உங்கள் முதுமையைத் தடுக்கிறது. ஒரு டச்சு ஆய்வின்படி வாரத்திற்கு மூன்று முறை வைன் அருந்துபவர்கள் ஐம்பது சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருதயம், மற்ற காரணங்களால் இறக்கிறார்கள். ஆனால் மற்றொரு விஷயமும் இதில் இருக்கிறது. அளவே மருந்து.

9 -தேவை இரவுத் தூக்கம்

தொடர்ந்து இரவில் வேலை செய்வது, தூக்கத்தை பலி கொடுப்பது இந்த இரண்டும் இளமைக்கும், ஆரோக்கியத்திற்கும் எதிரி. உடல் எடை கூடுவது, மனஅழுத்தம், தளர்ந்த தோல், கண் கருவளையம், இருதயப் பிரச்சினைகள் என பலவற்றோடு தூக்கமின்மை தொடர்பில் இருக்கிறது. கூடவே கேன்ஸர். உடல் செல்லின் வேலைகளில் பங்கு பெறும் வளர்ச்சி ஹார்மோன் மேல் தூக்கமின்மை பிரச்சினைகளை ஏற்படுத்துவதே இதற்குக் காரணம்.

10-மல்ட்டி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்

பிரமாதமான அழகான தோலின் காரணம் என்ன? வைட்டமின் சி. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிகல் நியூட்ரிஷன் வெளியிட்ட ஆய்வின்படி உணவில் அதிக வைட்டமின் சி மற்றும் லனோலியிக் அமிலம் எடுத்துக் கொள்ளும் நபர்கள் அற்புதமான வசீகரமான தோல் பெறுகிறார்கள் என்பதுதான். மற்றொரு தேவையான வைட்டமின் ஙி. முக்கியமாக `ஃபோலேட்' என்பது. இது இருதயத்தையும், மூளையையும் வயது கூடுவதால் ஏற்படுகிற பிரச்சினைகளிலிருந்து காக்கிறது. இவை செய்கிற முக்கிய வேலை உடலில் ஹோமோசிஸ்டின் அளவைக் கட்டுப்படுத்துவதுதான். இது அதிகரிப்பது என்பது இருதயநோய்கள், மூளை உறைவு, அல்சைமர் போன்ற நோய்களோடு தொடர்பு படுகிறது. ஆக வைட்டமின்களை தனித்தனியாக எடுத்துக் கொண்டாலும், சேர்ந்து மல்ட்டிவைட்டமினாக எடுத்துக் கொண்டாலும் சரி இளமைக்கும், ஆரோக்கியத்திற்கும் அது உறுதி.

11-சந்தோஷமான விழாக்களில் சமூகத்தோடு
பங்கு பெறுங்கள்

ஹாப்பி மொமன்ட்ஸ் என்பது இருதயத்தோடும், நோய் எதிர்ப்போடும் சம்பந்தப்பட்டது என்பதை உறுதியாக மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு நிரூபிக்கிறது. உங்களுக்கு மனநிம்மதியைக் கொடுக்கும் விழாக்கள் எதுவானாலும் கலந்து கொள்ளுங்கள். நிம்மதி என்பதே ஆரோக்கியத்தோடு தொடர்பு உடையது.

12-நல்ல மசாஜ் செய்து கொள்ளுங்கள்

தூக்கமின்மை, நோய் எதிர்ப்பு, தசைப் பிரச்சினைகள் போன்ற பலவற்றுக்கு மசாஜ் போன்ற சிறந்த மெடிசன் வேறு எதுவும் இல்லை என்கிறார்கள். நல்ல மசாஜ் மூலம் உடலின் மன அழுத்த ஹார்மோனான கார்டிசால் அளவு நிறைய குறைகிறது. அதே நேரத்தில் நினைவு தரும் செரடோனின், டோபமைன் போன்றவற்றின் அளவு கூடுகிறது. இதனால் இருதயத்தின் தேவையற்ற வேகம் குறைக்கப்பட்டு, இரத்த அழுத்தம் சமநிலைப்படுத்தப்படுகிறது. நரம்பு மண்டலத்தின் வலி உணரும் பகுதிகள் முடக்கப்படுகின்றன. மசாஜ் மூலம் தசைகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கப்படுகிறது. ஆக நல்ல மசாஜ் இளமையின் திறவுகோல்.

13- மெடிடேஷனுக்கு ஒரு ஹலோ சொல்லுங்கள்

தியானத்தின் பலன்கள் அதுவும் மனஅமைதி தரும் பலன்கள் பற்றி உங்களுக்கு நிறைய தெரிந்திருக்கும். கூடவே அது தரும் ஆரோக்கியம் பற்றியும் தற்சமயம் அதிக செய்திகள் வந்திருக்கின்றன. இருதயத்திற்கும், நரம்பு மண்டலத்திற்கும் நாம் எதிர்பாராத மிகமிக நல்ல பலன்களை தியானம் தருகிறது என்று உறுதி செய்திருக்கிறார்கள். தியானத்தில் பல்வேறு முறைகள் இருக்கின்றன. நீங்கள் ஏதோ ஒன்று கற்று நிறைய பலன் பெறுங்கள்.

14- நண்பர்களைக் கூட்டுங்கள்

வீட்டில், தெருவில், வேலையில் தனித்து திரியும் நபர்களைவிட, எங்கும் நண்பர்களை வைத்துக் கொண்டு சிரித்துப் பழகும் நபர்கள் மேலும் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள். staying young என்கிற புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் மைக்கேலின் ஆய்வு இதுதான். நிறைய நண்பர்கள் இருக்கிறவர்கள் இளமையும், ஆரோக்கியமும் கூடுகிறது என்பது. ஜிம், யோகா, சீட்டு, சினிமா என எங்கும் நண்பர்களோடு இருங்கள். பேசி அந்த மகிழ்வை பகிர்ந்து கொள்ளுங்கள்.

15-காலை வணக்கம் கிரீன் டீ-உடன் இருக்கட்டும்.

கிரீன் டீயின் பலன்களை நீங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். சமீபத்தில் ஆய்வொன்றின்படி கிரீன் டீ-யில் இருக்கும் `காட்டிச்சின்' செல்களைத் தூண்டி கொழுப்பை வெளியேற்றுகிறது. உடல் கலோரிகளைச் செலவழிப்பதில் துணை நிற்கிறது. மேலும் எப்போதும் சொல்வது போல இருதயத்தின் நல்ல தோழன் கிரீன்டீ. மூளை உறைவைத் தடுப்பதிலும் கிரீன் டீ முக்கிய பங்கு வகிக்கிறது. தவிர, கிரீன் டீ- யின் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இளமையை நேசிப்பவை. கிரீன் டீ சாப்பிடத் தொடங்குங்கள். வாழ்வை பசுமையாக வைத்திருங்கள்.

16-தானியங்களைப் பயன்படுத்துங்கள்

பனிசோட்டா பல்கலைக்கழகத்தில் பதினொரு ஆண்டுகள் நடந்த ஆய்வில் தினசரி அதிகம் தானியங்களைப் பயன்படுத்துகிறவர்கள் இருதயம் மற்றும் கேன்ஸர் நோய்களிலிருந்து பெருமளவு பாதுகாக்கப்படுவதாக முடிவு சொல்லப்பட்டிருக்கிறது. காரணம் தானியங்கள் அவற்றில் இருக்கிற ஸ்டார்ச் உடன் அதிகமாக நார்ச்சத்தை வெளிப்புறத் தோலில் வைத்திருக்கின்றன. கூடவே வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் அடர்த்தி மிகுந்த கார்போஹைட்ரேட்டுகள்.

17- உடலால் தேங்காதீர்கள்

Keep moving என்பதுதான் இதன் பொருள். ஸ்விட்ச் போட, மோட்டார் நிறுத்த, பஸ்பிடிக்க, படி ஏற என்று எங்கும் எப்போதும் எதற்காகவும் அசைந்து கொண்டே இருங்கள். நல்ல வேக நடை இன்னும் நல்லது. முப்பது நிமிட ஏரேபிக்ஸ் இரத்தக் குழாய்களில் படியும் வெள்ளை நிற அணுக்களை நகர்த்தி மறுபடியும் சுழலுக்குள் கொண்டு வருகிறது. தவிர மனம், உடலின் சக்தி உடற்பயிற்சிகளால் அதிகரிக்கிறது.

18- `அதில்' ஆர்வத்தோடு ஈடுபடுங்கள்

ஆம். அதில்தான் நல்ல செக்ஸ் ஆரோக்கியமான இளமைக்கு உங்களை நகர்த்திச் செல்கிறது. அப்போது வெளிவரும் என்டார்பின்ஸ் உடலின் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை பலமாகக் கட்டுப்படுத்துகிறது. உறவுக்குப்பின் உங்கள் துணையை கட்டி அணைத்துக் கொள்ளச் சொல்கிறார்கள். அப்போது வெளிவரும் ஆக்ஸிடோசின் இரத்த அழுத்தத்தைச் சமநிலைப்படுத்துகிறது.

19-அவ்வப்போது ஒருவேளை உணவைத் தவிருங்கள்

`120 வயதுக்கும் மேலே' என்கிற ஆய்வுப் புத்தகம் தரும் முக்கிய செய்தி கலோரி அளவைக் குறையுங்கள் என்பதுதான். இதனால் இரத்த அழுத்தம், கொலஸ்டிரால், நீரிழிவு போன்றவற்றில் நேரடி நல்விளைவு ஏற்படுகிறது. அதுவும் ஒருநாள் விட்டு ஒரு நாள் என ஒருவேளை உணவைத் தவிர்க்கும்போது நல்ல பலன் கிடைப்பதாகத் தெரிவிக்கிறார்கள். உடனே சட் சட் என்று சாப்பாட்டை நிறுத்தி திணறாதீர்கள். கலோரிகளைக் குறைப்பதுதான் இலக்கு. முதலில் மசால்வடை, பேல்பூரியில் தொடங்கலாம்!

20-துணைவி துணைவருடன் வாக்குவாதத்தைத் தவிருங்கள்.

எமோஷனலாக துணைவருடன் சண்டை போடும் பெண்களின் திடீர் இறப்பு சதவிகிதம் அதிகமாக இருப்பதாக எலைன் என்கிற எபிடமியாலாசிஸ்டின் நீண்ட வருட ஆய்வுக் குறிப்பு சொல்கிறது. அவர் தவிர்க்கச் சொல்லும் வார்த்தைகள் சிலவற்றை கவனியுங்கள். ``நான் இப்படித்தான்,'' ``நீங்க திருந்தமாட்டீங்க...'' ``வேஸ்ட்'', ``உங்களால முடிஞ்சதை பாத்துக்கோங்க...'' இப்படியே சிலவற்றைச் சொல்கிறார். ஒரு வார்த்தையில் சொன்னால் இதுதான்: கணவன், மனைவிகள் கையில் பூதக்கண்ணாடி வைத்துக் கொள்ளாதீர்கள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive