சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வு முடிவு கள், நேற்று வெளியாகின. கடந்த
ஆண்டை விட, ௫ சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. வழக்கம் போல, திருவனந்தபுரம்
மண்டலம், அதிக தேர்ச்சி பெற்றுள்ளது.
16 லட்சம் பேர்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச்சில் நடந்தது; 16 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகளை, சி.பி.எஸ்.இ., வாரியம் நேற்று வெளியிட்டது. இதில், 90.95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு, 96.21 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு, 5.26 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. திருவனந்தபுரம் மண்டலம், 99.85 சதவீத தேர்ச்சியுடன், வழக்கம் போல, தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, புதுச்சேரி, கோவா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளை உள்ளடக்கிய, சென்னை மண்டலத்தில், 99.62
சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
'கிரேடு' முறை
இந்த தேர்வில், விடைத்தாள்கள் மதிப்பிடப்பட்டு, மொத்த மதிப்பெண்களுக்கு, சி.ஜி.பி.ஏ., என்ற, தர வரிசை குறிக்கப்பட்டுள்ளது. மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய, ஐந்து பாடங்களுக்கு, மொத்தம், 10 சி.ஜி.பி.ஏ., மதிப்பெண்களுக்கு, 'கிரேடு' முறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த கிரேடு அடிப்படையில், உயர்கல்வி தகுதி; மதிப்பெண்ணை உயர்த்தும் தேர்வு தகுதி, தகுதியில்லை என, 10 விதமான குறிப்புகள், மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சதவீத கணக்கீடு எப்படி?
சி.பி.எஸ்.இ., தேர்வில், ஒவ்வொரு பாடத்திற்கும், 10 தர மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள், ஐந்து பாடங்களிலும் தாங்கள் எடுத்த, தர மதிப்பெண்களை கூட்டி, அதை ஐந்தால் வகுத்தால், மொத்தம் எவ்வளவு சி.ஜி.பி.ஏ., என்ற, தரவரிசை கூட்டுத் தொகை வரும். இதுவும், 10 மதிப்பெண்களுக்குள்
மட்டுமே வரும். பின், மதிப்பெண் சதவீதத்தை தெரிந்து கொள்ள, சி.ஜி.பி.ஏ., எண்ணை, 9.5 என்ற எண்ணால் பெருக்கினால், மொத்தம் எத்தனை மதிப்பெண் என்பது, சதவீதமாக வரும். உதாரணமாக ஒருவர், ஒன்பது சி.ஜி.பி.ஏ., எடுத்திருந்தால், அவரது மொத்த மதிப்பெண் சதவீதம், 85.5 சதவீதமாகும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...