நீலகிரி
மலைகளின் அரசியான ஊட்டி
இருக்கும் மலைத் தொடர்ச்சி இதுதான்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியமான
பகுதிதான் நீலகிரிமலை. நீலகிரியிலிருந்து 19 கி.மீ. தூரத்தில் குன்னூர்
இருக்கிறது. ஊட்டியில் இருந்து 31 கி.மீ. தொலைவில் கோத்தகிரி உள்ளது. இவை
எல்லாமே மலைவாசஸ்தலங்கள். அதுமட்டுமா, இந்தியாவின் முதல் பல் உயிரினப்
பகுதி என்ற பெருமையும் இதற்கு உண்டு. மொத்தத்தில் நீலகிரியை
மலைவாசஸ்தலங்களின் ராணி என்றும் சொல்லலாம்.
வாருங்கள்... இந்தக் குளு குளு மலைத் தொடர்களின் மீது பயணிப்போம்.
அவலஞ்சி
இந்த இடம் ஊட்டியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள மேல் பவானிக்குச் செல்லும் வழியில் உள்ளது. இந்த வழியில்தான் எமரால்டு ஃபாரஸ்டும் இருக்கிறது.
இந்த இடத்திற்குச் செல்லும்
ஒவ்வொரு திருப்பத்திலிருந்தும் பார்த்தால் அற்புதமான அழகிய வனக் காட்சிகள்
தொpயும். அவலஞ்சி என்று அழைக்கப்படும் இந்தக் குன்றின் மீது நின்று
பார்த்தால் நீண்டு வளைந்து நீர்க்கோடு போல் ஓடும் நதியும் பசுமையின்
குவியலாய்த் தோற்றமளிக்கும் பள்ளத்தாக்கும் குளிர்ந்த நீர்த்தேக்கங்களும்
பளிச்செனத் தெரியும்.
தாவரவியல் பூங்கா
எங்கு பார்த்தாலும்
மலர்கள்... செடிகள்... மூலிகைகள்... அரிய வகைத் தாவரங்கள் என கண்ணையும்
கருத்தையும் ஈர்க்கும் இந்தத் தாவரவியல் பூங்கா 1847-67 ஆம் ஆண்டுகளுக்கு
இடைப்பட்ட காலத்தில் எம்.சி. ஐவோர் என்ற ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது.
கடல் மட்டத்திலிருந்து 2400 முதல் 2500 அடி வரை உயரத்தில் அமைந்திருக்கும்
இந்த அழகிய தோட்டம் மலைச்சரிவை ஒட்டி இருக்கிறது. இதன் பரப்பளவு 22
ஹெக்டேர்.
கட்டணம் பெரியோர் ரூ.10. சிறுவர் ரூ.5. கேமரா ஹேண்டிகேம் ரூ.30. வீடியோ கேமரா ரூ.75. தொலைபேசி-0423-2442545.
கெய்ரன் ஹில்ஸ்
இருபுறமும் சைப்ரஸ் மரங்கள் சாமரம் வீச இந்தக் குன்றில்
அமைந்திருக்கும் நடைபாதை இயற்கைப் பேரழகு. அவலஞ்சி குன்றுக்குச் செல்லும்
வழியில் 3 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் இதன் அழகைக் கண்டால் துள்ளாத
மனமும் துள்ளும்.
சிறுவர் பூங்கா
ஏரியை ஒட்டி அமைந்துள்ள
இந்தப் பூங்காவில் பச்சைப் பாய்போல் விரிந்துக் கிடக்கும் புல்வெளி...
பூக்களின் போர்வையால் மூடப்பட்டது போல் ஏரியின் நீர்ப்பரப்பெங்கும்
மிதக்கும் மலர்க் கூட்டம். சிறிது தூரத்தில் இயற்கை எழில் சூழ நிமிர்ந்து
நிற்கும் புனித தோமையர் தேவாலயம் தீப்பெட்டிகளின் வரிசையைப் போல் ஊர்ந்து
செல்லும் மலை ரயில் படகுச்சவாரி குதிரைச் சவாரி என சிறுவர்களின் நெஞ்சை
கொள்ளை கொள்ளும் அழகிய பூங்கா.
தொட்டபெட்டா
புகழ்பெற்ற மலைச்சிகரம். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிகரங்களிலேயே உயரமானது.
இதன் உயரம் 2636 மீ. இதற்கு அடுத்தபடியாக 2530 மீ உயரம் கொண்ட ஸ்நோ டவுன்
ஹில்லும், 2448 மீ உயரமுள்ள கிளப் ஹில்லும், 2466 மீ உயரமுள்ள
எல்க்ஹில்லும் உள்ளன. இந்தச் சிகரங்களுக்கிடையே உள்ள பள்ளத்தாக்குதான்
உதகமண்டலம். ஊட்டியிலிருந்து 8 கி.மீட்டரில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரம்
கிழக்கு - தென் கிழக்காக அமைந்துள்ளது. மேற்கு நிலப் பகுதியில் வடக்கு
தெற்காக நீளும் மலைத்தொடரில் தொட்டபெட்டாதான் உயரமான சிகரம்.
கிளமார்கள்
ஊட்டி பேருந்து
நிலையத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள இந்த இடம் சிறந்த புவியியல்
அமைப்பைக் கொண்டது இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள சிங்கார மின்
நிலையத்துக்கு வின்ச் மூலம் அதன் பணியாளர்கள் செல்கிறார்கள். வின்ச்சின்
மீது செல்லும்போது அழகிய சோலைகளையும் காட்சி மிருகங்களையும் கண்டு
களிக்கலாம். பொதுமக்கள் வின்ச்சில் பயணிக்க மின்வாரியத்திடம் முன் அனுமதி
பெற வேண்டும்.
குதிரைப் பந்தய மைதானம்
இந்தியாவின் புகழ்பெற்ற
குதிரைப் பந்தய மைதானங்களில் இதுவும் ஒன்று. 24 கி.மீ. நீள ஓடுகளத்தைக்
கொண்ட இந்த மைதானம் ஊட்டியின் இதயப்பகுதியில் உள்ளது. மே ஜுன் மாதங்களில்
இங்கு நடக்கும் குதிரைப் பந்தயம் மிகவும் பிரபலம்.
கல்கட்டி அருவி
ஊட்டியில் இருந்து 13 கி.மீ.
தொலைவில் இருக்கும் கல்கட்டிமலைத் தொடரில் 40 மீ உயரத்தில் இருந்து விழும்
அற்புத அருவி இது. செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை இந்த அருவியில் நீர்
துள்ளிக் குதித்து வெள்ளமாய் வந்து விழும்.
கேத்தி பள்ளத்தாக்குக் காட்சி
உலகிலேயே இரண்டாவது பெரிய
பள்ளத்தாக்கு என்ற புகழைப் பெற்றது. குன்னூர் சாலையில் பசுமைக் காடாய்
வீழ்ந்து விரிந்து கிடக்கும் இந்தப் பள்ளத்தாக்கின் ஊடே வரிசையாய் நீளும்
சிறுமலைக்கிராமங்கள் அழகோ அழகு! கோவை மற்றும் மேட்டூர் சமவெளி வரை இந்த
மலைக்கிராமங்களின் வரிசை நம் மனத்தைக் கவர்ந்து நிற்கும்.
உதகை ஏரி படகு இல்லம்
ஊட்டியின் முதல் ஆணையராக
இருந்த ஜான் சல்லிவன் என்பவரால் உருவாக்கப்பட்ட ஏரி. 1823-1825 ஆம்
ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட இந்த ஏரி இப்போதும் ரம்மியத்தோடு காட்சி
அளிக்கிறது. பெடல் படகுகள், ரோ படகுகள், அக்குவா பைக்குகள் போன்றவற்றை
இந்த ஏரியில் ஓட்டி மகிழலாம். அதுமட்டுமா... மினி ரயில், டான்சிஸ் கார்கள்
என்று குட்டீஸ்களின் குதூகலத்தக்குப் பஞ்சமே இல்லை. தமிழ்நாடு அரசின்
சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் இந்தப் படகு இல்லம் சிறப்பாக
நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
நுழைவுக் கட்டணம் ரூ.5. கேமரா ரூ.10. வீடியோ ரூ.100. தொலைபேசி - 0423-244053.
வெஸ்ட்டர்ன் கேட்ச்மென்ட்
பார்சன் பள்ளத்தாக்கில்
இருந்து 20 கி.மீ. தூரத்தில் இருக்கும் இந்தப்பகுதி கைத்தேர்ந்த ஓவியரின்
சித்திரவேலைப்பாடு போல சோலைகளும் புல்வெளிகளுமாய் பசுமை குலுங்க சிரித்து
நிற்கும்.
பைகாரா நதி மற்றும் நீர்வீழ்ச்சி
இம்மாவட்டத்திலேயே பெரிய ஆறு
இதுதான். இந்தப் பகுதியின் பூர்வகுடிகளான தோடர் இனப் பழங்குடி மக்கள் இதைப்
புனித நதியாகப் போற்றுகின்றனர். முக்குர்தியின்
உச்சியிலிருந்து புறப்படும் இந்த பைகாரா ஆறு வடக்குப் பக்கமாகப் பரவி
ஓடுகிறது. இந்தப் பகுதியின் முனையைத் தொடும் இடத்தில் மேற்காகத்
திரும்புகிறது. இடையில் பல இடங்களில் அருவியாகக் கீழிறங்குகிறது. கடைசியாக
இரண்டாகப் பிரிந்து விழும் இடத்துக்குத் தான் பைகாரா அருவிகள் என்று
அழைக்கின்றனர். இதில் ஒன்று 55 மீட்டர் உயரத்தில் இருந்தும் இன்னொன்று 61
மீட்டர் உயரத்திலிருந்தும் வீழ்கின்றன. ஊட்டியில் இருந்து 20 கி.மீ.
தொலைவில் இந்த அருவிகள் இருக்கின்றன. பைகாரா அணைக்கட்டின் அருகில் அழகிய
படகு இல்லம் ஒன்றை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பராமரித்து
வருகிறது. இந்த வளாகத்தில் லேக் பார்க் ஜாலி உலகமும் இருக்கிறது.
டைகர் ஹில்
தொட்டபெட்டா சிகரத்தின் கீழ்ப்பகுதியில் ஊட்டி நகருக்கு கிழக்கே இருக்கிறது. இங்கு 3 கி.மீ. நீளத்திற்கு குடிநீர்த்தேக்கம் ஒன்று உள்ளது. ஆன்மிகப் பெருமை வாய்ந்த குகை ஒன்று மூடிய நிலையில் காணப்படுகிறது.
மேல் பவானி
இயற்கையின் அழகை ரசிக்கத்
தெரிந்தவர்கள் கட்டாயம் பார்த்து மகிழ வேண்டிய இடம் இது. ஊட்டியில் இருந்து
60 கி.மீ. தொலைவிலும் கோர குண்டாவிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும்
அவலஞ்சியில் இருந்து 20 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ள இயற்கை எழிலின்
தொட்டில். காட்சி உயிர்கள் எவ்விதத் தொல்லையும் இல்லாமல் இந்தப் பகுதியில்
வாழ்ந்து வருகின்றன. பங்கிதப் பல்லிலிருந்து சிஸ்பரா வழியாக இந்தப்
பள்ளத்தாக்குக்குச் செல்லலாம்.
வென்லாக் டவுன்ஸ்
விரிந்து பரந்த அழகிய சமவெளி,
வெறும் சமவெளி மட்டுமல்ல ஜிம்கானா கிளப், செம்மறி ஆட்டுப் பண்ணை
ஆகியவையும் உண்டு. சோலைகள் அடர்ந்த அழகிய பசும் புல்வெளி.
குன்னூர்
பகாசுரன் குன்று
குன்னூரிலிருந்து 13 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந்தக் குன்றை துருக்குன்று என்றும் அழைப்பார்கள். மாவீரன் திப்பு சுல்தான் கட்டிய மாபெரும் கோட்டை இங்கு உள்ளது.
ட்ரூக்
குன்னூரில் இருந்து 17 கி.மீ.
தூரத்தில் அமைந்துள்ள சிதிலமடைந்த பழம்பெரும் கோட்டை இது. திப்புசுல்தான்
தனது புறக்காவல் கோட்டையாக ஒரு சமயம் பயன்படுத்திய இதை பகாசுரன் கோட்டை
என்றும் அழைக்கின்றனர்.
லேடி கானிங் சீட்
இந்த இடத்திற்கு சுவாரஸ்யமான ஒரு வரலாற்றுப் பின்னணி உள்ளது. 1857
ஆம் ஆண்டு நடந்த முதல் சுதந்திரப் போராட்டத்தின் போது இந்தியாவின்
வைசிராயாக இருந்தவர் கானிங் பிரபு. இவருடைய மனைவிதான் லேடி கானிங்
அம்மையார். முதல் சுதந்திரக் கிளர்ச்சியை அடக்கி ஒடுக்க முடியாமல் கானிங்
பிரபு திணறிக் கொண்டிருக்க லேடி கானிங் அம்மையாரோ இந்தப் பகுதியில் தங்கி
ஓவியம், குதிரைசவாரி, செடி வளர்த்தல் என்று உல்லாசமாகப் பொழுதைக்
கழித்திருக்கிறார். லேடி கானிங் அம்மையார் தங்கி இருந்த பகுதி என்பதால்தான்
இந்தப் பகுதிக்கு லேடி கானிங் சீட் என்று பெயர் வந்தது. பழங்குடியினர்
இந்த இடத்தைப் பட்டாம்பூச்சி நாடு என்று அழைக்கின்றனர். லேம்ப்ஸ்
ராக்கிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இது இருக்கிறது.
லாஸ் அருவி
குன்னூரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள இந்த அருவி பாறைகள் நிறைந்தது. பார்த்து ரசிக்கலாம். குளிக்க முடியாது.
முக்குர்தி நேஷனல் பார்க்
நீலகிரி மலையின் உயரத்தில்
அமைந்துள்ள பூங்கா. நீலகிரி பையோ-ஸ்பியரின் ஒரு பகுதி. ஊட்டியிலிருந்து 40
கி.மீ. தொலைவில் இருக்கும் இந்தத் தேசியப் பூங்காவுக்கு, பர்சன்
வேலி, போர்புமண்ட், பைகாரா போன்ற பகுதிகளில் இருந்து வண்டிப் பாதைகள்
உள்ளன. இங்குள்ள ஆறுகளிலும் மூக்குர்தி ஏரியிலும் மீன்பிடித்து மகிழலாம்.
பிப்ரவரி முதல் மே மாதம் வரை இந்தப் பகுதியில் சுற்றுலாச் செல்ல உகந்த
காலங்களாகும். அமைவிடம் - ஒயில்டு லைஃப் கார்டன், மகாலிங்கம் பில்டிங்ஸ்
குன்னூர் ரோடு, ஊட்டி 643 001.
காட்டேரி அருவி
நீலகிரி மலையின் முன்றாவது
பெரிய அருவி, 60 மீ. உயரத்திலிருந்து விழும் இந்த அருவி குன்னூர் பேருந்து
நிலையத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் குந்தா சாலையில் உள்ளது.
லாம்ஸ் ராக்
குன்னூர் பேருந்து
நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கும் வனக்காப்பிடத்துக்குள்
அமைந்துள்ள அழகிய பாறை. இங்கிருந்து பார்த்தால் புலியார், கல்லார் ஆகிய
நீர்த்தேக்கங்களின் சுற்றுப் புறங்களைப் பார்த்து மகிழலாம்.
சிம்ஸ் பூங்கா
கோத்தகிரி சாலையில் மேல் குன்னூரில் அமைந்துள்ள
பிரபலமான பூங்கா இது. அழகாக வடிவமைக்கப்பட்ட புல்வெளிப் பாதைகள், அழகிய
மலர்ப்படுகைகள், அரிய வகை மூலிகைகள், செடிகள், மரங்கள் என இயற்கையின்
சுரங்கம்போல் காட்சியளிக்கும்.
கட்டணம் பெரியவர் ரூ.5 சிறியவர் ரூ.2. கேமரா ரூ.25. வீடியோ கேமரா ரூ.500.
வெலிங்டன் ஸ்டாஃப் கல்லூரி
ஊட்டியில் இருந்து குன்னூர்
செல்லும் வழியில் உள்ளது. ராணுவக் குடியிருப்புகள் அமைந்த ராணுவ நகரம் இது.
இந்திய ராணுவத்தின் சென்னைப் பிரிவின் தலைமை அலுவலகம் மற்றும் பணியாளர்கள்
கல்லூரி ஆகியவை உள்ளன.
கோத்தகிரி
பிக்காபதி ரிசர்வ்
கோத்தகிரியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் கூக்கல் துறைக்கு அப்பால்
அமைந்துள்ள வனக்காப்பகம். கூக்கல் துறை அல்லது மசக்கல்லில் இருந்து
நடந்துதான் இந்த இடத்துக்குச் செல்ல முடியும். கோத்தகிரியில் உள்ள
கட்டப்பெட்டு வனச்சரகர் கட்டுப்பாட்டின் கீழ் அமைந்துள்ள இந்தப் பகுதிக்கு
வனத்துறையின் அனுமதி பெற்றுத்தான் செல்ல முடியும்.
எல்க் அருவி
கோத்தகிரியில் இருந்து 7
கி.மீ. தொலைவில் உயிலட்டி கிராமத்தின் கீழ்ப்புறம் உள்ளது இந்த அருவி.
மழைக்காலத்தில் மட்டுமே இதில் தண்ணீர் வரும். படுகர் இன மக்களின் குடி
இருப்பு வழியே இந்த
இடத்துக்குச் செல்லும் சாலை ஊடுருவிச் செல்கிறது. இந்த இடத்திலிருந்து
வடக்குப் பக்கமாக நகர்ந்தால் கூக்கல் பள்ளத்தாக்கின் அழகிய தோற்றத்தை
ரசிக்க முடியும்.
இந்தப் பகுதி ஆரஞ்சு
பழத்துக்குப் புகழ்பெற்றது. 1819 ஆம் ஆண்டு ஆணையராக இருந்த சல்லிவன் கட்டிய
இரண்டடுக்கு மாளிகை இப்போது சிதைந்த நிலையில் இருக்கிறது. நீலகிரி மலையில்
அந்நாளில் கட்டப்பட்ட முதல் ஐரோப்பியர் குடியிருப்பு இதுதான்.
டால்பின் நோஸ்
குன்னூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த இடத்திலிருந்து கேத்தரின்
அருவியின் அற்புற அழகைக் கண்டு ரசிக்கலாம். இந்தக் காட்சி இலக்கில் நின்று
காலை நேரத்தில் பார்த்தால் இயற்கை அழகின் இணையற்ற தரிசனத்தைக் காண
முடியும்.
கொடநாடு காட்சி முனை
நீலகிரி மற்றும் ஈரோடு
மாவட்டங்களை இரண்டாகப் பிரிக்கும் நதியின் பேரழகை இந்த முனையிலிருந்து
கண்டு ரசிக்கலாம். தமிழ்நாடு, கர்நாடகம் மாநில எல்லைகளையும் கண்டு
களிக்கலாம். கோத்தகிரியில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள இந்தப்
பகுதியில்தான் கொடநாடு தேயிலைத் தொழிற்சாலை உள்ளது. உச்சிப் பொழுதில் இந்த
முனையில் நின்றபடி பார்த்தால் நீலகிரி மலைத்தொடரின் நீண்டு உயர்ந்த
ஒய்யாரத் தோற்றம் முழுமையாகத் தெரியும்.
லாங் உட் சோலை
பருவநிலை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் பகுதியில் நிலவும் பருவ நிலையே உதாரணம். எனவேதான் உலகின் இலட்சிய பூர்வமான
பருவநிலைச் சூழல் உள்ள இடமாக இது கருதப்படுகிறது. இங்கு நிலவும் நுண்பருவ
நிலைச் சூழலே இதற்குக் காரணம். கோத்தகிரி நகர மக்களின் குடிநீர்த் தேவையை
இந்தப் பகுதிதான் நிறைவு செய்கிறது.
ரங்கசாமி பீக் அண்ட் பில்லர்
கோத்தகிரியில் இருந்து 20
கி.மீ. தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. கீழ் கோத்தகிரி வழியாக இந்த
இடத்தை அடையலாம். கூம்பு வடிவமான இந்த உச்சியில் இருந்து பார்த்தால்
வனத்தின் ஆழ்ந்து கிடக்கும் அழகையும் சுற்றிலும் பரந்து விரிந்து கிடக்கும்
கிராமப்புறச்
சூழலையும் கண்டு களிக்கலாம். கடல் மட்டத்திலிருந்து 1785 மீ உயரத்தில்
இருக்கும் இந்த உச்சியில் இருளர் பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். உச்சியின்
வடமேற்கு 400 அடி உயரத்தில் உள்ளது. ஆனால் அதில் ஏற முடியாது.
செயிண்ட் கேத்தரின் அருவிகள்
கோத்தகிரியில் இருந்து 5
கி.மீ. தொலைவில் மேட்டுப் பாளையம் சாலைக்குச் செல்லும் வழியில் இந்த
அருவிகள் உள்ளன. நீலகிரியின் இரண்டாவது அழகிய வனப்பகுதி, இந்த நீர்வீழ்ச்சி
இருக்கும் பகுதிதான். இப்பகுதி என்றும் பசுமையாய் இருக்கும். தேயிலைத்
தோட்டம் மற்றும் மேட்டுப்பாளையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் அழகைப்
பார்த்து ரசிக்கலாம்.
கூடலூர்
சேரம்பாடி
கூடலூரில் இருந்து 35 கி.மீ.
தூரத்தில் மேற்குப் புறத்தின் கடைக்கோடியில் இந்த இடம் அமைந்துள்ளது. இங்கு
மிகப்பெரிய தாவரத் தோட்டமும் மைக்கா சுரங்கமும் உள்ளன. சுல்தான் காப்ரண்
இதற்கு மிக அருகில் தான் உள்ளது.
தேவலா
ஊட்டி - கூடலூர் சாலைக்குச்
செல்லும் வழியில் 16 கி.மீ. தொலைவில் இந்த இடம் உள்ளது. வயநாடு மற்றும்
கருகூர் மலைத்தொடருக்கு இடையில் இந்த இடம் உள்ளது.
இதன் அருகில் உள்ள பகுதிகளில் தங்கம் கிடைத்ததாகவும் அதற்காகப் பழங்குடி
மக்களுக்கு இடையே சண்டை நடந்ததாகவும் கர்ண பரம்பரைக் கதைகள் உண்டு.
ஃபிராக் ஹில் முனை
ஊட்டி - கூடலூர் சாலைக்குச்
செல்லும் வழியில் 14 கி.மீ. தொலைவில் இந்த முனை உள்ளது. இங்கிருந்து
பார்த்தால் கூடலூரின் சுற்றுப்புற அழகும் தவளை போலத் தோன்றும் குன்றும்
முதுமலை வனவிலங்கு காப்பகமும் தெரியும்.
மோயர் அருவி
கூடலூரில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள முதுமலை வன விலங்கு காப்பகத்திற்குள் இந்த அருவி உள்ளது.
அருங்காட்சி சாலை
1989 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஊட்டியில் இந்த
அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. மாவட்டத்திற்கே உரிய மரங்கள், வண்ணத்துப்
பூச்சிகள், செதுக்கு வேலைகள், பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும்
குறிஞ்சிமலர், கல் சிற்பங்கள், வெண்கல வேலைப்பாடுகள், தோடர் இன மக்கள்
இல்லத்தின் வகை மாதிரி மற்றும் பழமையான நாணயங்கள் என அனைத்தும்
பாதுகாக்கபடுகின்றன.அருங்காட்சி சாலை காப்பாளரின் கட்டுப்பாட்டில் இந்த
அருங்காட்சியகம் உள்ளது.
தூரப்பள்ளி தொங்கு பாலம்
கூடலூர் பேருந்து
நிலையத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் இந்தத் தொங்கு பாலம் இருக்கிறது.
கூடலூரின் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் இதுவும் ஒன்று.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...