கரூர் : ஸ்மார்ட்
ரேசன்கார்டுகள் பெரும்பாலானோருக்கு கிடைக்காமல் அவர்களை போட்டோ, பழைய
கார்டு ஜெராக்ஸ், புதிய விண்ணப்பம் என்று அலைய விடுவதால் பொதுமக்கள் பெரும்
வேதனைக்குள்ளாகி வருகின்றனர். கடந்த 2005ம் ஆண்டு ரேசன்கார்டுகள்
வழங்கப்பட்டன. 2010ம் ஆண்டு கார்டு முடிவடைந்ததையடுத்து ஓராண்டுக்கு
உள்தாள் ஒட்டப்பட்டது. அதன்பின் 2017ம் ஆண்டு வரை உள்தாளே வழங்கப்பட்டது.
அதன்பின் தற்ேபாது ஸ்மார்ட் ரேசன்கார்டு வழங்குவதற்காக ஆதார் அட்டை இணைக்கப்பட்டது. இப்பணி முடிந்ததும் ஸ்மார்ட் கார்டு அனைவருக்கும் வழங்கப்படும் என கூட்டுறவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் 2,76,153 ரேசன்கார்டுகள் உள்ளன.
377 முழுநேர ரேசன்கடைகள் 206 பகுதி நேர ரேசன்கடைகள் இயங்கி வருகின்றன. மொத்த கார்டு எண்ணிக்கையில் 2,75,407 குடும்ப அட்டைகளுக்கு அதாவது 99.73 சதவீதம் கார்டுகளுக்கு ஆதார் எண் பதிவும் 96 சதவீதம் கைபேசி எண் பதிவும் அங்காடி பணியாளர்களால் பதிவு செய்யப்பட்டு விட்டது.
பதிவுகள் கிட்டத்தட்ட அனைத்து கார்டுகளுக்கும் செய்யப்பட்டு விட்டது என்பதால் ஸ்மார்ட் கார்டு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கார்டுதாரர்கள் இருந்தனர். ஆனால் வெறும் 78,570 பேருக்குத்தான் ஸ்மார்ட் ரேசன்கார்டு வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கிட்டத்தட்ட 2 லட்சம் பேருக்கு இன்னமும் ஸ்மார்ட் ரேசன் கார்டு வரவில்லை. இவர்கள் பழைய உள்தாள் ஒட்டப்பட்ட ரேசன் கார்டை பயன்படுத்தியே பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஸ்மார்ட் கார்டு கிடைக்காதவர்கள் ரேசன் கடைக்கு தொடர்ந்து சென்று கேட்டு வந்தனர். இந்நிலையில் ஸ்மார்ட் கார்டு வராத பழைய கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் போட்டோ கார்டு நகலுடன் விண்ணப்பம் அளிக்க வேண்டும் என்று ரேசன்கடையில் தெரிவித்ததால் இதனையும் தற்போது கொடுத்து வருகின்றனர்.
இது குறித்து புதிய கார்டு கிடைக்காதவர்கள் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டாக புதிய ரேசன்கார்டு வழங்கவில்லை. ஒவ்வொருவருடமும் உள்தாளை மட்டுமே தருகின்றனர். அந்த தாளை ஒட்டி பொருட்களை பெற்று வருகிறோம். இந்த ஆண்டு வரும் என சொல்லிச் சொல்லி காலம் கடத்தி விட்டனர். இப்போது மின்னணு ரேசன்கார்டு தருவதாக கூறி அதையும் கொடுக்கவில்லை. ஆதார் அட்டையை ரேசன்கார்டில் இணைக்கும்படி கூறி அதற்காக ரேசன்கடைக்கு அலைய விட்டனர்.
பின்னர் உள்தாளுக்காக அலையும் நிலை ஆண்டுதோறும் ஏற்படுத்தப்பட்டது. ஸ்மார்ட் கார்டும் ஒருசிலருக்கே கொடுத்துள்ளனர். மற்றவர்களுக்கு வரவில்லை. ஏன் வரவில்லை என கேட்டால் மீண்டும் போட்டோவுடன் ரேசன்கார்டு ஜெராக்ஸ்சை ஒரு விண்ணப்பத்துடன் சேர்த்து கொடுக்குமாறு கூறுகின்றனர். எப்போதுதான் ஸ்மார்ட் கார்டு தருவார்களோ தெரியவில்லை. பழைய சேதமடைந்த ரேசன்கார்டில் தான் பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...