தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு அடிப்படையில் மாணவர்
சேர்க்கை நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது என்று மதுரை உயர் நீதிமன்ற
கிளை மறுப்பு தெரிவித்து விட்டது.
இனி நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையானது 'நீட்' எனப்படும் தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையில்தான் நடைபெறுமென்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.ஆனால் மாநில அரசின் பலகட்ட முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில் இம்மாதம் 8-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் 'நீட்' தேர்வு நடைபெற்றது.
ஆனால் இந்த தேர்வில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாள்கள் பயன்படுத்தப்படவில்லை என்று சர்ச்சை எழுந்தது. எனவே இந்த தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தடை விதிக்க கோரியும், இனி நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாள்களை பயன்படுத்தி நீட் தேர்வு நடத்தப்பட வேண்டுமென்று உத்தர விடக் கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் 9 பேர் அடங்கிய குழு ஒன்று வழக்கு தொடர்ந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை மறுப்பு தெரிவித்து விட்டது.
மேலும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாள்களை பயன்படுத்தி நீட் தேர்வு நடத்துவது தொடர்பாக, மத்திய பள்ளிக் கல்வி வாரியம் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆகிய இரு அமைப்புகளும் ஒரு வாரத்தில் பதில் அளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்பவும் உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...