மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு (நீட்)
முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்
கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
திருச்சியைச் சேர்ந்த மாணவி டி. சக்திமலர்கொடி மற்றும் மதுரையைச் சேர்ந்த மாணவர்கள் சூர்யா, சித்தார்த், அஜய் சரண், நிதின் பிரகாஷ் சிவசுப்பிரமணியன், கெளதம் சங்கர், ஆதித்யா, ரிச்சர்டு ரிஸ்பான் தாஸ், நவீன்குமார் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மனுக்களின் விவரம்: நாடு முழுவதும் கடந்த 7-ஆம் தேதி 'நீட்' நுழைவுத் தேர்வு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மராத்தி, ஹிந்தி, குஜராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் நடைபெற்றது.
நாடு முழுவதும் ஒரே தேர்வாக நடத்தப்பட்டபோதும், அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாக்கள் கேட்கப்படவில்லை. இதில் ஹிந்தி, குஜராத்தி மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிதானதாகவும், ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் தமிழ் வினாத்தாளில் எளிமையான வினாக்களும், ஆங்கில வினாத்தாளில் கடினமான வினாக்களும் இடம்பெற்றிருந்தன. கன்னடம், மராத்தி, வங்கம் போன்ற மொழிகளில் தேர்வு எழுதியவர்களும் இதே பிரச்னையைச் சந்தித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கேள்வி எழுப்பியபோதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான பதிலளிக்கவில்லை.
நாடு முழுவதும் நடைபெற்ற தேர்வில் ஒரே மாதிரியான வினாக்கள் இடம்பெறாததால், மருத்துவப் படிப்புக்கான மாணவர்களைத் தேர்வு செய்யும் ஒரே அளவீடாக இத் தேர்வு அமையாது. இதனால் திறமையான மாணவர்களின் வாய்ப்புகள் பறிபோகும். எனவே நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாளின் அடிப்படையில் நீட் நுழைவுத் தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும். அதுவரை தற்போது நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்'' என்று மனுக்களில் குறிப்பிட்டிருந்தனர்.
இம்மனுக்கள் நீதிபதி எம்.வி. முரளிதரன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வழக்குரைஞர் கே.ஆர் .லட்சுமணன் வாதிடுகையில், இது தொடர்பான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், சிபிஎஸ்இ-யை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இதில் எவ்வித முடிவும் எடுக்க முடியாது. எனவே இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளதைப்போல, வினாத்தாள்களில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது என்று கூறி, மே 7-ஆம் தேதி நடந்த 'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனுக்கள் குறித்து இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) தலைவர், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தலைவர், மத்திய சுகாதாரத் துறைச் செயலர், தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஆகியோர் ஜூன் 7-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...