பழைய ரேஷன்கார்டுகளுக்கு பதில், இன்னும் ஐம்பது சதவீதத்திற்கும்
மேலானவர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டுகள்' வழங்கப்படாத நிலையில், வழங்கப்பட்ட
கார்டுகளில் அதிக தவறுகள் இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர். தற்போது
பயன்பாட்டிலுள்ள ரேஷன்கார்டுகளுக்கு பதில், 'ஸ்மார்ட் கார்டுகள்'
வழங்கப்படுகின்றன. இதுவரை, மூன்று தவணைகளாக 'ஸ்மார்ட் கார்டுகள்'
வழங்கப்பட்டும் கூட, 50 சதவீதம் பேருக்கு கூட கிடைக்கவில்லை.
மதுரையில், 9 லட்சம் ரேஷன்கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இதுவரை, மூன்று
தவணைகளாக 3.26 லட்சம் 'ஸ்மார்ட் கார்டுகள்' மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதே
நிலைமைதான் மற்ற மாவட்டங்களிலும் நிலவுகிறது. மீதமுள்ள 'ஸ்மார்ட்
கார்டுகள்' அச்சிடும் பணி, மெதுவாக நடப்பதால், நுகர்வோருக்கு வழங்குவது
தாமதமாகிறது.
இந்நிலையில், ஏற்கனவே மூன்றாவது தவணையாக வழங்கப்பட்ட கார்டுகளில்,
குடும்பத்தலைவருக்கு பதிலாக, குடும்பத் தலைவி பெயரும், பெயர்கள், முகவரிகள்
மாறி இடம் பெற்றிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சில
கார்டுகளில், போட்டோக்கள் தெளிவின்றி காணப்படுகின்றன.
கார்டுகளிலுள்ள தவறுகளை சுட்டி காட்டி, விற்பனையாளர்கள் உணவுப்பொருட்களை
வழங்க மறுக்கின்றனர். இதனால், அவர்களுக்கும், நுகர்வோருக்கும் மோதல்கள்
ஏற்படுகின்றன. தவறுகளை திருத்த மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலகம் மற்றும் அரசு
பொது 'இ சேவை' மையங்களில் பொது மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சர்வர்
பழுதால் 'இ சேவை' மையங்களில் விண்ணப்பங்களை பெறுவது தாமதமாகிறது.
தமிழ்நாடு ரேஷன்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:
தற்போது பயன்பாட்டிலுள்ள ரேஷன்கார்டுகளில், உள் இணைப்பு தாள்
வழங்கப்பட்டுள்ளது. இந்த உள்தாளை, 2018 வரை பயன்படுத்தி கொள்ளலாம். எனவே
பொதுமக்களிடம் சரியான விவரங்களை பெற்று, பிழைகளில்லாத 'ஸ்மார்ட் கார்டுகளை'
வழங்க வேண்டும். மேலும் 'ஸ்மார்ட் கார்டுகளிலுள்ள' தவறுகளை சரி செய்து
கொடுக்க, சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். சர்வர் பழுதின்றி தவறுகளை
உடனுக்குடன் திருத்தம் செய்யவும் அரசு முன்வர வேண்டும், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...