:தனியார்
பள்ளிகளை புறக்கணித்து, ஒரு கிராமத்தை சேர்ந்த அனைவருமே, அரசு பள்ளியில்,
தங்களது குழந்தைகளை சேர்த்துள்ளனர் என்றால், நம்ப முடிகிறதா? ஆம், நம்பித்
தான் ஆக வேண்டும்.
பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ளது, கொத்தவாசல் என்ற குக்கிராமம். இதை சுற்றியுள்ள ஊர்களில், பல தனியார் பள்ளிகள் உள்ளன. இவை, எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை, தரமான ஆங்கிலவழி மற்றும் கம்ப்யூட்டர் கல்வி என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன், கொத்தவாசல் கிராமத்துக்கே, தங்களது பள்ளி வேன்களை அனுப்பி, குழந்தைகளை அழைத்து சென்றன.
இதனால், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள இக்கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், 123 மாணவ, மாணவியரே படித்து வந்தனர். தனியார் பள்ளியில், 52 மாணவ, மாணவியர் படித்தனர்.
இந்நிலையில், 2016 ஆக., 8ல், வேள்விமங்கலம் பள்ளியில் இருந்து மாற்றலாகி, இப்பள்ளிக்கு ஆங்கில ஆசிரியராக வந்தார், இளவழகன். உள்ளூரில் பள்ளி இருந்தும், 10 கி.மீ.,ல் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இக்கிராம மக்கள், தங்களது பிள்ளைகளை அனுப்பி வைப்பதை பார்த்து, தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை, அரசு பள்ளியிலும் ஏன் உருவாக்கக் கூடாது என, யோசித்தார்.
தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களிடம் கலந்து பேசி, தன் சொந்த செலவில், ஒன்பது கம்ப்யூட்டர், ஸ்பீக்கர் உள்ளிட்டவற்றை, 1.68 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கி, பள்ளிக்கு வழங்கினார். கலெக்டரை அணுகி, புரொஜக்டரை பெற்றார்.பல புரவலர்களை நாடி, மேலும், ஆறு கம்ப்யூட்டர் வாங்கி, மொத்தம், 15 கம்ப்யூட்டர்கள் மூலம் தினமும் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தார். காணொலி காட்சி மூலம் வகுப்புகள், ஆங்கிலத்தில் பேச்சு பயிற்சி வழங்கி, படிப்படியாக குழந்தைகளை மெருகூட்டினார்.
இதுவரை இல்லாத அளவு, முதல் முறையாக கல்வித் திருவிழாவை நடத்தி, குழந்தைகளின் அசத்தலான ஆங்கில அறிவையும், திறமைகளையும், கிராமத்து மக்களுக்கு எடுத்து காட்டினார்.
குழந்தைகளின் திறமைகளை கண்டு, மெய்சிலிர்த்த பெற்றோர், அந்த மேடையிலேயே புரவலர்களாக மாறி, 1.59 லட்சம் ரூபாயை, பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினர்.
தற்போது, வாட்டி வதைக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், இப்பள்ளியின் ஆசிரியர்கள், இளவழகன் தலைமையில், தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோரை, வீடு தேடி சென்று பார்த்து, அரசு பள்ளியின் சிறப்புகளை விளக்கி கூறி, குழந்தைகளை சேர்க்கும்படி கோரினர்.
பள்ளியின் சிறப்பை, ஏற்கனவே அறிந்திருந்த பெற்றோர், தனியார் பள்ளியில் படித்து வந்த தங்களது குழந்தைகளை, அரசு பள்ளியில் சேர்த்துவிட்டு, தனியார் பள்ளிகளுக்கு, 'டாட்டா' காட்டி விட்டனர்.தனியார் பள்ளியில் படித்து வந்த, 52 பேரில், 49 குழந்தைகள், கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தற்போது சேர்ந்து விட்டனர். மீதியுள்ள, மூன்று குழந்தைகளும் விரைவில் சேர உள்ளனர். ஆசிரியர் இளவழகனின் கல்வி சேவையை, கொத்தவாசல் கிராமமே பாராட்டுகிறது.
பெரம்பலுார் அருகே சாதித்த ஆசிரியர்
Super
ReplyDeleteSuper congrats elavazhagan sir...☆☆
ReplyDeleteSuper congrats elavazhagan sir...☆☆
ReplyDelete