பிளஸ் 2 தேர்வில், சரியான பதில் எழுதி, எதிர்பார்த்த மதிப்பெண் குறைந்தால்,
மறுகூட்டலுக்கும், மறு மதிப்பீடுக்கும் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தேர்வு
முடிவு, இன்று வெளியாகிறது. இந்த தேர்வில், மதிப்பெண் குறைவாக இருந்தால்,
அதுபற்றி மாணவர்கள் கவலை கொள்ள வேண்டாம் என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வில் பெறும், அரை
மதிப்பெண்ணும், மருத்துவம் மற்றும் இன்ஜி., படிப்பில் சேர முக்கியம். எந்த
விதமான பதில்களை எழுதினோம் என, மாணவர்களுக்கு தெரியும். அதற்கேற்ப
மதிப்பெண் கிடைத்துள்ளதா என, மாணவர்கள், ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.
சரியான மதிப்பெண் கிடைக்காவிட்டால், மறுகூட்டல், மறு மதிப்பீடுக்கு
விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு
தொடர்பாக, மாணவர்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லை. முந்தைய ஆண்டுகளில்,
பல மாணவர்கள், மறு கூட்டல், மறு மதிப்பீடு மூலம் கூடுதல் மதிப்பெண்கள்
பெற்றுள்ளனர். மறுகூட்டலில், பல மாணவர்களுக்கு, கூட்டல் பிழைகள் இருந்தது
கண்டறியப்பட்டது. எனவே, தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள், மதிப்பெண்
குறைந்தால், தாராளமாக மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு
விண்ணப்பிக்கலாம். மறுகூட்டல் கேட்டால், தேர்வுத்தாளில் கூட்டல் பிழைகள்
மட்டுமே, சரி செய்யப்படும். மறு மதிப்பீடு வேண்டும் என்றால், விடைத்தாள்
நகலை முதலில் பெற்று, மறுகூட்டலுக்கும், மறுமதிப்பீடுக்கும் சேர்த்து,
விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...