Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பத்திரப் பதிவு... நெருக்கும் விதிமுறைகள்... தவிக்கும் மக்கள்! என்னதான் தீர்வு?

ஆ.ஆறுமுக நயினார், எம்ஏ, பிஎல்வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம், முன்னாள் கூடுதல் பதிவுத் துறை தலைவர்..

‘காணி நிலம் வேண்டும்’ என்று அன்னை பராசக்தியை வேண்டினார் மகாகவி பாரதியார், மனிதனின் மூவாசைகளில் முதல் ஆசை மண்ணாசை. மண்ணாசை மன்னருக்கும், செல்வந்தருக்கும் மட்டுமல்ல.
ஏழைக்கும் உண்டு. தமிழ்நாடு அரசின் சமீபத்திய அரசாணை ஏழைக்கு அந்த ஆசைஇருக்கவே கூடாது என்று தடை உத்தரவு போட்டுள்ளது. அதாவது, ஏழைகளின் தலைக்கு மேல் ஒரு சொந்தக் கூரை என்கிற இல்லக் கனவில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது.

இந்த அங்கீகாரம் பெறாத வீட்டுமனை என்ற விவகாரத்தை பின்னோக்கி பார்ப்போமானால், திட்டமிட்ட நகரமைப்பு என்ற தத்துவம் சிந்து சமவெளி நாகரிகம் தொட்டே ஆயிரம்ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது. மதுரையை மிகச் சிறந்த திட்டமிட்ட நகரம் என்று கூறுவார்கள். காஞ்சிபுரமும் அப்படியே. மன்னர் காலத்திலும், ஏன் பிரிட்டிஷ் ஆட்சியில்கூட ஓர் ஒழுங்குமுறை இருந்தது. அதாவது, வீடு கட்டிக் குடியிருக்கும் பகுதி ‘நத்தம்’ என்று அழைக்கப்படும். இது தங்கு தடையின்றி மக்கள் வீடு கட்டிக் குடியிருக்க அனுமதிக்கப்பட்ட பகுதி ஆகும். பின்னர் மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக இந்தப் பகுதிகளை விட்டுவிட்டு நஞ்சைபுஞ்சை நிலங்களில் வீடுகட்டிக் குடியேற ஆரம்பித்தார்கள்.அப்போதுகூட சாதாரணமாக வயலைத் தரிசாக மாற்றி அதில் வீடு கட்டவே மாட்டார்கள். பின்னாளில் விவசாயம் கைவிடப்பட்டுத் தரிசாகக் கிடக்கும் நஞ்சை நிலங்களில் குடியிருப்புகள் தோன்ற ஆரம்பித்தன. கடந்த சில பத்தாண்டுகளாக இந்த ‘நல்ல’ காரியத்தின் வேகத்தை இன்னும் துரிதமாக்கியவர்கள் ‘லே அவுட் புரமோட்டர்கள்.’ இதற்கு அவர்களைக் குறை சொல்ல முடியாது. ஏரி வறண்டு, ஆறு வறண்டு நிலம் கட்டாந்தரையாகிக் கிடக்கும்போது விவசாயத்தை நம்பிப்பிழைக்கும் விவசாயி சோற்றுக்கு என்ன செய்வான்? நிலத்தை விற்றுச் சாப்பிடுவான். இதனுடன் பிள்ளைகளின்படிப்பு, திருமணம், மருத்துவச் செலவு அனைத்தையும் சேர்த்துப் பாருங்கள்.

பல ஆண்டுகள் விவசாயத்தால் கொடுக்க இயலாத லாபத்தை லே அவுட்டுக்கு விற்கப்படும் நிலம் மொத்தமாகக் கொடுக்கும்போது எல்லா விவசாயிகளும் ‘கற்பை’ இழக்கிறார்கள்.இன்று, ‘அய்யோ, விளை நிலம் பாழாகிறதே’ என்று கூப்பாடு போடும் பசுமை விரும்பிகளும், இயற்கை ஆர்வலர்களும் காவிரியைக் கொண்டுவந்து தண்ணீர் தந்துவிடுவார்களா? அல்லது வானத்தில் ஓட்டை போட்டு மழையைக் கொட்ட வைப்பார்களா? அரசாங்கம் இந்தப் பிரச்னையில் மெதுவாகத்தான் விழித்துக் கொண்டது. பேராசைக்கார புரமோட்டர்கள் கைவரிசையால் முக்கிய நகர்களைச் சுற்றியுள்ள பச்சை வயல்களில் திடீரென நெல்லுக்குப் பதிலாக வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் முளைத்ததைக் கண்டு அதிர்ந்துபோன அரசு தாறுமாறான நகர்ப்புறமயமாதலைத் தடுக்கவும் திட்டமிட்ட வளர்ச்சிக்காகவும் விவசாய நிலங்களைப் பாதுகாக்கவும் ஊரக நகர்ப்புறத் திட்டமிடல் சட்டத்தை இயற்றியது. சீரான, ஒழுங்கான குடியிருப்புகளை உருவாக்க ‘டிடிசிபி மற்றும் ‘சிஎம்டிஏ போன்ற முகமைகள் உருவாக்கப்பட்டன.

ஆ.ஆறுமுக நயினார்

அப்படி இருந்தும் ஏன் அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகள் புற்றீசல் போலப் பெருக என்ன காரணம்? எல்லாம் மனிதன் செயல். ஒரு திட்டத்தால் மக்களுக்கு என்ன லாபம் என்று சிந்தித்த ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம் வீட்டுக்கு அனுப்பப்பட்டு,இதனால் நமக்கு என்ன கிடைக்கும் என்று புதிய சிந்தனை உள்ளவர்கள் பதவியில் அமர்ந்தபோது, ஒரு மனைக்கு இவ்வளவு, ஒரு புராஜெக்ட்டுக்கு இத்தனை சதவிகிதம் என்று வசூல் செய்ய ஆரம்பித்தவுடன், மனையின் விலை பல மடங்கு உயர்ந்தது. ஒரு சாமானியர், ஒரு லே அவுட்டுக்கு அல்லதுஒரு சிறு புராஜெக்ட்டுக்கு அனுமதி வாங்குவது இயலாத காரியம் என்றானது. ஒரு நண்பர் கூறும்போது, ‘குறைந்தது ரூ.7 லட்சம் ‘எக்ஸ்ட்ரா கேஷ்’ இல்லாமல் டிடிசிபி அலுவலகத்துக்குள் காலடி எடுத்து வைக்க முடியாது’ என்று அடித்துக் கூறுகிறார். இதன் காரணமாக அங்கங்கே ஒர் ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலங்களை வைத்திருந்தவர்கள் அதைப் பத்து, இருபது மனைகளாக்கி விற்று லாபம் பார்த்தார்கள். பின்னர் இதில் உள்ள லாபத்தை மோப்பம் பிடித்த தரகர்கள், புரமோட்டர்களாக மாறி, பொதுமக்கள், விவசாயிகளிடம் இருந்து ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கி மனைகளாகப் பிரித்து டிடிசிபி, சிஎம்டிஏ அங்கீகாரம் பெறாமல் விற்றுக் கொள்ளை லாபம் பார்க்க ஆரம்பித்தார்கள். அங்கே இங்கே என்று நடந்த அங்கீகாரம் பெறாத மனை விற்பனை தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய தொழிலாக உருவெடுத்தது.

அங்கீகாரம் பெறாத மனைப் பிரிவுகளால் ஏற்படும் தாறுமாறான வளர்ச்சி, விவசாயப் பாதிப்பு ஆகியவற்றைக் கண்டு மிரண்டு போன அரசு, முதன் முதலாக 1997-ம் ஆண்டு பதிவுச் சட்டத்தில் பிரிவு 22A-யை சிறிய வடிவில் அமல்படுத்தி, இந்த ஆவணங்களைப் பத்திரப்பதிவு செய்யக்கூடாது எனத் தடைவிதித்தது. தடை செய்யப்பட்ட ஆவணப் பட்டியல் அரசாணை 150 என்ற வடிவத்தில் வெளியிடப்பட்டது. இதில் முக்கியமானது, டிடிசிபி, சிஎம்டிஏ அங்கீகாரம் பெறாத மனைகளையும், அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் பதிவு செய்யும் ஆவணங்களாகும். இந்தத் தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம், மாநில அரசின் சட்டம் தெளிவாக இல்லாததால்,அதிகாரிகள் இதை துஷ்பிரயோகம் செய்யக்கூடும் என்று கூறி, 2005ல் 22ஏ-யைத் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றமும் பிரிவு 22ஏ-ஐ 2007-ல் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து அங்கீகாரம் பெறாத மனைப் பிரிவு புரமோட்டர்கள் காட்டில் 2016 இறுதி வரை ஏறத்தாழ 10 ஆண்டுகள் (பண) மழை கொட்டோ கொட்டு என்று கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டியது. இதற்கிடையே, 2009-ம் ஆண்டு பதிவுச் சட்டம் பிரிவு 22ஏ விஸ்தாரமாக மீண்டும் சட்டப் புத்தகத்தில் ஏற்றப்பட்டது. ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படாமல், அதாவது கெஜட்டில் வெளியிடப்படாமல் ‘பார்த்துக்’ கொள்ளப்பட்டது.

இதற்கிடையே யானை ராஜேந்திரன் என்பவர் விவசாய நிலங்கள் பாழாகின்றன என்று 2014-ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அரசு இதற்கு பதில் தராமல் இழுத்தடித்தது. திடீரென்று2016 செப்டம்பர் மாதம் அங்கீகாரம் பெறாத மனை பத்திரப் பதிவுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு, வெடிகுண்டு ஒன்றை தூக்கி வீசி அனைவரது தூக்கத்தையும் கலைத்தது.இதுமட்டுமல்ல, திருத்தப்பட்ட பிரிவு 22ஏ யை உடனடியாகஅமல்படுத்தவும் அரசுக்குக் கட்டளையிட்டது. இதன் விளைவாக, பிரிவு 22ஏ 21.10.2016 முதல் அமல்படுத்தப்பட்டது.

இதன் முக்கிய அம்சம், அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகள் பத்திரப் பதிவுக்கு விதிக்கப்பட்ட தடைதான். ஆனால், பிரிவு 22 ஏ-யில் ஒரு முக்கியமான சலுகை வழங்கப்பட்டது. அதாவது, ஒரு மனையை ஏற்கெனவே வீட்டு மனையாகப் பத்திரப்பதிவு செய்திருந்தால், அது அங்கீகாரம் பெறாத மனையாக இருந்தாலும், அதை மீண்டும் பதிவு செய்துகொள்ள தடை ஏதும் இல்லை என்பதுதான் அந்த சலுகை. இந்த சலுகை பிரிவு 22ஏ-யின் நோக்கத்தை அதாவது,அங்கீகாரம் பெறாத மனைகள் பெருகுவதைத் தடுக்கும் நோக்கத்தைக் கெடுப்பதாக நினைத்த முதன்மை அமர்வு இந்தச் சலுகைக்குத் தடை விதித்தது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive