ஆசிரியர் பணியிட மாறுதலில்
மாற்றுத்திறன் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற
கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அரசுடன் சங்க நிர்வாகிகள்
புதன்கிழமை (மே 17) நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து
முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
பிரச்னை என்ன?: கடந்த 2016 -ஆம் ஆண்டில் ஆசிரியர் பணியிட மாறுதல் பட்டியலில் இதர மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் நிகழாண்டு பட்டியலில் அவர்கள் 6-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தனர். இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு பட்டியலில் முன்னுரிமை (4-ஆவது இடம்) அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
தங்களது இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், தலைமைச் செயலகம் முன்பு வியாழக்கிழமை (மே 18) காலை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் அறிவித்திருந்தது. உடன்பாடு: இதனிடையே, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஆர்.இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குநர் கார்மேகம் ஆகியோர் கடந்த இருநாள்களாக சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர்.
இதைத் தொடர்ந்து பணியிட மாறுதல் முன்னுரிமை விவகாரத்தில் பார்வையற்றோர், இதயம் - சிறுநீரக அறுவை சிகிச்சை செய்தவர்கள், கடும் புற்றுநோய் பாதித்தவர்கள், 50 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதித்த உடல் ஊனமுற்றவர்கள், 5 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியர் பணியாற்றிய ராணுவ வீரர்களின் மனைவி என வரிசைப்படி ஒதுக்கீடு செய்ய உடன்பாடு ஏற்பட்டது.
ஓரிரு நாளில் அரசாணை: இதற்கான அரசாணை திருத்த உத்தரவு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதால், போராட்டத்தை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...