முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' நுழைவுத் தேர்வின் கட்-ஆஃப்-இல் 7.5 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு மாநிலங்களின் கோரிக்கைகளை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டும் என்பது நிகழாண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வானது அண்மையில் நாடு முழுவதும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட 'நீட்' தேர்வில் தேர்ச்சிப் பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்-ஆஃப் மதிப்பெண்களை பெரும்பாலான மாணவர்கள் பெற முடியாத சூழல் நிலவுவதாக பல்வேறு மாநில அரசுகள் கவலை தெரிவித்தன.
மேலும் இதன் காரணமாக, மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளுக்கான இடங்கள் பெரும்பாலும் நிரப்பப்பட முடியாத சூழ்நிலை உருவாகும் எனவும் அவை தெரிவித்தன.
இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சிலுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. இதனைத் தொடர்ந்து, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' தேர்வின் கட்-ஆஃப்-இல் 7.5 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன.
அதன்படி, பொதுப் பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 42.5-ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 32.5-ஆகவும், மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு 37.5-ஆகவும் குறைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு, இந்த கட்-ஆஃப் மதிப்பெண்கள் முறையே 50, 40, 45-ஆக இருந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...