மத்திய அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்கள், தங்களுக்கு பாலியல் ரீதியான
துன்புறுத்தல்கள் ஏதேனும் நிகழ்ந்தால், அதுபற்றி இணையதளம் மூலமாக புகார்
தெரிவிக்க விரைவில் வழிவகை செய்யப்படும், இதன் மூலம் புகார் அளிப்பவரின்
பெயர் மற்றும் தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என்று மகளிர் மற்றும்
குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
தற்போது மத்திய-மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் வசதிக்காக, அவர்களுக்கு ஏதேனும் பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பின், உயர் அதிகாரிகளிடம் நேரில் புகார் தெரிவிக்க முடியும். மேலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பெண் ஊழியர்களை உள்ளடக்கிய மகளிர் தீர்வு மையங்களும் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இதுபோன்ற முறையில் புகார் தெரிவிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர் விவரம் வெளிப்படையாகத் தெரிய வரும்.
ஆனால் இணைய தளம் மூலமாக புகார் அளிக்கப்பட்டால், புகார் தெரிவிக்கும் பெண் ஊழியர்கள் பற்றிய தகவல்களை ரகசியமாகப் பாதுகாக்க முடியும். எனவே, அத்தகைய இணையவழி புகார் தெரிவிக்கும் வகையிலான வசதி, இதுவரை நடைமுறையில் இல்லை. தற்போது மத்திய அரசு பெண் ஊழியர்கள், இணைய தளம் மூலமாக தங்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை அளிக்க முடியும் என்று மேனகா காந்தி, டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு அமைச்சகங்களின் கீழ் பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் இருந்து அதிக அளவில் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்கள் வந்ததை அடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், இந்தப் புகார்களைத் தெரிவிக்க ஆன்லைன் வசதியை ஏற்படுத்துவது என மத்திய மகளிர் அமைச்சகம் முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு நிறுவனமோ அல்லது மத்திய அரசு அலுவலகமோ ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே கழிவறை பயன்பாடு கூட பாலியல்ரீதியான துன்புறுத்தல்தான் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதுபோன்ற சம்பவங்களை ஒவ்வொரு அமைச்சகங்களிலும் உள்ள குழுக்கள் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், பெண்கள் பணிபுரியும் இடங்களில் மகிழ்ச்சியாக இருத்தல் அவசியம் என்றார்.
Excellent
ReplyDeleteWe welcome this idea
ReplyDelete