வலிப்பு ஏற்பட்டவரின் கையில் சாவி போன்ற ஏதாவது ஒரு இரும்பினால் ஆன பொருளைக் கொடுத்தால், உடனே வலிப்பு நின்றுவிடும் என்று கூறுவார்கள். அது சரியா? உங்களுக்கு தெரியுமா?
சாவி போன்ற இரும்புப் பொருளை வலிப்பு வந்தவர்களுக்கு கொடுத்தால் வலிப்பு நிற்கும் என்று கூறுவதற்கு எவ்வித மருத்துவ ஆதாரமும் இல்லை. எனவே இவ்வாறு கூறுவது ஒரு தவறான மூடநம்பிக்கை என்று கூறலாம்.
வலிப்பு எப்படி ஏற்படுகிறது?
மூளை, நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு, அந்த செல்களுக்கு இடையில் இயல்பாகவே மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது.
மூளையில் ஏதேனும் சில காரணத்தால் உண்டாகிற அழுத்தம் இந்த மின்சாரத்தை அதிகமாக உற்பத்தியாக்கி, அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது.
அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு, கை, கால்கள் உதறத் தொடங்கும். இதை தான் வலிப்பு என்கிறோம்.
வலிப்பு ஏற்பட என்ன காரணம்?
தலையில் அடிபடுதல், பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு, மூளையில் கட்டி, ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், கிருமித் தொற்று, புழுத் தொல்லை, மூளைக் காய்ச்சல், மூளை உறை அழற்சிக் காய்ச்சல், டெட்டனஸ் போன்றவை வலிப்பு வருவதற்கு முக்கியமான காரணங்கள் ஆகும்.
ஆனால் அதை தவிர உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு போன்ற பிரச்சனைகளும் வலிப்பு நோயினை தூண்டக் கூடியவை.
மேலும் அதிக மன உளைச்சல் காரணமாகக் கூட அடிக்கடி வலிப்பு நோய்கள் ஏற்படுகிறது.
வலிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
வலிப்பு ஏற்பட்டவரை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்க வைக்க வேண்டும்.
சட்டை பட்டன், இடுப்பு பெல்ட், கழுத்து டை ஆகியவற்றை தளர்த்தி, நன்றாக சுவாசிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
மின்விசிறி அல்லது கைவிசிறி மூலம் நல்ல காற்றோட்டம் கிடைக்கும் வழிகளை செய்ய வேண்டும்.
வலிப்பு வந்தவர்களின் அருகில் காயத்தை ஏற்படுத்தும் கூர்மையான பொருட்கள் இருந்தால், அதை தூரமாக இருக்கும் இடத்தில் அப்புறப்படுத்த வேண்டும்.
வலிப்பு வந்தவர்கள் மூக்குக் கண்ணாடி, செயற்கை பல் செட் போட்டு இருந்தால், அதை அகற்றி விட வேண்டும்.
வலிப்பு பிரச்சனையில் உள்ளவர்களிடம் இருந்து, உமிழ்நீர் வழிந்தால், அதை துடைத்து விட வேண்டும்.
ஒருவருக்கு வலிப்பு 5 நிமிடங்களுக்கு மேல் நீடிப்பது ஆபத்து. எனவே அருகில் உள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
வலிப்பு ஏற்பட்டவர்களுக்கு என்ன செய்யக் கூடாது?
வலிப்பு வந்தவரை சுற்றி கூட்டமாக அதிக பேர் நிற்பதை தவிர்க்க வேண்டும்.
வலிப்பு வரும் போது, அவருடைய கை, கால்களை அழுத்திப் பிடித்து வலிப்பை கட்டுப்படுத்த முயற்சிக்கக் கூடாது.
வலிப்பு நின்று, நினைவு திரும்பும் வரை அவருக்குக் குடிக்கவோ, சாப்பிடவோ எதுவும் கொடுக்கக் கூடாது.
வலிப்பு ஏற்பட்டவர் முழு நினைவு வந்ததை உறுதி செய்து கொண்டு தண்ணீரை குடிக்க வைக்கலாம்.
வலிப்பு ஏற்பட்டவருக்கு மூக்கில் வெங்காயச் சாற்றை ஊற்றக் கூடாது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...