தமிழகத்தில் பல மாவட்டங்களில் சி.இ.ஓ., மற்றும் டி.இ.ஓ.,க்கள் ஜீப்கள்
'கண்டம்' ஆனதால், அதிகாரிகள் வாடகை கார்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால்
அதற்கான வாடகையை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
கல்வித்துறையில்
கற்றல், கற்பித்தல் மற்றும் நிர்வாகம் தொடர்பான பணிகளை கண்காணிக்க
சி.இ.ஒ.,க்கள், டி.இ.ஓ.,க்களுக்கு ஜீப்கள் வழங்கி அதற்கான எரிபொருள்
ஒதுக்கீடும் அளிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான மாவட்டங்களில் 15 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட ஜீப்கள்
இருப்பதால், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு 'கண்டம்' ஆன
ஜீப்கள் ஏலத்தில் விடப்பட்டு, அதற்கான அறிக்கை விவரம் இயக்குனர்
அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படு கிறது. அதற்கு பதிலாக புதிய ஜீப்கள்
இதுவரை வழங்கப்படவில்லை.
இதனால் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, ஈரோடு உட்பட
பல மாவட்ட சி.இ.ஓ.,க்கள், 15க்கும் மேற்பட்ட டி.இ.ஓ.,க்களுக்கு ஜீப்கள்
இல்லை. அதற்கான எரிபொருள் ஒதுக்கீட்டிற்கும் தணிக்கை அதிகாரிகள் தடை
விதித்தனர். இதனால் வாடகை கார்களை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை
அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. மாதம் வாடகை பல ஆயிரம் ரூபாயை தாண்டுவதால்
அதை எவ்வாறு 'சரிக்கட்டலாம்' என 'பல்வேறு வழிகளில்' அதிகாரிகள் ஆலோசித்து
வருகின்றனர்.
இதுகுறித்து கல்வி அதிகாரிகள் சிலர் கூறுகையில், "இரண்டரை லட்சம் கிலோ
மீட்டர் அல்லது 15 ஆண்டுகள் வரை ஜீப் இயக்கப்பட்டால் அதை 'கண்டம்' என
முடிவு செய்து, பொது ஏலத்திற்கு விட்டு, இயக்குனருக்கு தகவல் தெரிவிக்க
வேண்டும். அடுத்து வரும் ஒதுக்கீட்டில் புதிய வாகனங்களை வழங்க அரசு
நடவடிக்கை எடுக்கும். அதுவரை சமாளிக்க சொல்லி உயர் அதிகாரிகள் வாய்மொழியாக
கூறியுள்ளனர். ஆனால் வாடகையை தான் எங்களால் சமாளிக்க முடியவில்லை,"
என்றார்.
தணிக்கையில் அதிர்ச்சி : பல மாவட்டங்களில் அதிகாரிகளுக்கு ஜீப் இருந்தும்,
அதற்கான ஓட்டுனர் இல்லை. ஆனால் 'டிரைவிங்' தெரிந்த ஆசிரியர் அல்லாத ஊழியர்
அல்லது வெளிநபர்களை டிரைவராக பயன்படுத்தப்பட்டுள்ளனர். டி.இ.ஒ.,க்களுக்கு
வழங்கப்பட்ட புதிய ஜீப்களை இணை இயக்குனர் வசம் வைத்துக்கொண்டு அவர்கள்
பயன்படுத்திய லொட... லொட... வாகனங்களை மாவட்ட அதிகாரிகள் தலையில்
கட்டியுள்ளதும் தணிக்கையில் தெரியவந்துள்ளது.
மேலும் 'கண்டம்' ஆன ஜீப்கள் அரசு ஒர்க்ஷாப்பில் ஒப்படைத்த பின்னரும்
அதற்கான எரிபொருள் ஒதுக்கீடு செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து
பல்வேறு ஆட்சேபணைகளை தணிக்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனது சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...