இன்றுடன் கத்தரி வெயில் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் முடிவடையும் நிலையில்,
தமிழகமே தென் மேற்கு பருவமழையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் தென் மேற்கு பருவமழை தொடங்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், சமூக வலைதளங்களில் தன் தெளிவான வானிலை விளக்கங்களால் பிரபலமான 'தமிழ்நாடு வெதர்மேன்', 'தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்குவதில் சிக்கல் இருக்கப் போகிறது' என்று எச்சரித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், 'தமிழ்நாடு மற்றும் சென்னைக்கு வரும் நாள்களில் வறண்ட வானிலை நிலவும். தென் மேற்கு பருவமழை தொடக்கம் சிறிது சிக்கலாகவே இருக்கும்.
வரும் நாள்களில், தமிழ்நாட்டின் உட்புறங்களில் கூட வறண்ட வானிலைதான் இருக்கும். ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யலாம். மற்றபடி குறிப்பிட்டு சொல்லும்படியாக மழை எதுவும் இருக்காது. சென்னையைப் பற்றி சொல்லவே வேண்டாம். சென்னைக்கு வறண்ட வானிலை உறுதி. கேரள கடலோரத்துக்கு அருகே பருவமழை தொடங்கும் நிலையில் இருக்கிறது. ஆனால், கேரள கடற்கரை நெருங்க நெருங்க பருவமழைக் காற்று தொய்வடைகிறது. அரேபிய கடலில் வளர்ச்சியுறும் காற்றழுத்த தாழ்வுநிலை வலிமையடைவதாக தெரியவில்லை. இதனால், தமிழகத்தில் பருவமழையின் தாக்கம் சிறிது சிக்கலாகவே இருக்கப் போகிறது. மே 31-ம் தேதி அல்லது ஜூன் 1-ம் தேதி பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தாலும் கூட, அது மிகவும் பலவீனமான ஆரம்பமாக இருக்கும்' என்று விளக்கியுள்ளார்.
இவர் யூக அடிப்படையில் இல்லாமல், தரவுகள் அடிப்படையில் தன் வானிலை கணிப்புகளை முன்வைப்பதால், இவரின் பதிவு பெரும்பாலும் சரியாகவே இருந்துள்ளது.
ஆனால் மக்கள் ஆறுதல் அடையும் வகையில் அவர் கடைசியாக, 'பருவமழை தொடங்கும் நேரம் அதன் வலிமை தன்மை முழுவதையும் தீர்மானிக்காது' என்றுள்ளார். இதனால், நல்ல மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார் 'தமிழ்நாடு வெதர்மேன்'.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...