'அரசு தொடக்கப் பள்ளிகளில், கோடை விடுமுறை நாட்களை அதிகரிக்க முடியாது' என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒவ்வொரு ஆசிரியரும், ஆண்டுக்கு, 200 நாட்கள் கட்டாயம் பணியாற்ற வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ஆண்டுக்கு, 220 நாட்கள் பணியாற்ற வேண்டும். உயர், மேல்நிலைப் பள்ளிகளில், ஏப்., 15 முதல் கோடை விடுமுறை துவங்கும்.
தொடக்கப் பள்ளிகளில், மே, 1ல் தான் விடுமுறை துவங்கும். ஆனால், வெயில் தாக்கம் காரணமாக, தொடக்கப் பள்ளிகளுக்கும், ஏப்., 15 முதல் விடுமுறை விட வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது. இது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் மற்றும் அமைச்சரிடம், ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்தனர். அதை ஏற்க, பள்ளிக்கல்வி அமைச்சகம் மறுத்துள்ளது. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், தினமும், ஐந்தரை மணி நேரம் பாடம் நடத்தப்படுகிறது. அதன்படி, 200 நாட்களுக்கு, மொத்தம், 1,100 மணி நேரம் பாடம் நடத்தப்படுகிறது. ஆனால், தொடக்கப் பள்ளிகளில், தினமும், ஐந்து மணி நேரம் தான், பாடம் நடத்தப்படுகிறது. எனவே, 1,100 மணி நேரம் பாடம் நடத்த, 220 நாட்கள் தேவைப்படுகின்றன. எனவே, தொடக்கப் பள்ளிகளில் கோடை விடுமுறை நாட்களை அதிகரிக்கவோ, வேலை நாட்களை குறைக்கவோ வாய்ப்பில்லை என, பள்ளிக் கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...