Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாரடைப்பு வருவதற்கு காரணம் என்ன? இந்த அறிகுறிகளை வைத்து மாரடைப்பு வருவதை கணிக்க முடியும்:- விரிவான விளக்கங்கள்

      பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது.
        மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமையானது.




நெஞ்சு வலி என்பது வேறு, மாரடைப்பு என்பது வேறு. மாரடைப்பு இருதயத்துடன் தொடர்பாக இருக்கும். நெஞ்சுவலி வருவதற்க்கு வேறு பல காரணங்களும் இருக்கலாம்.


இதயத்தின் நான்கு அறைகளுக்குள் எந்த நேரமும் இரத்தம் நிறைந்திருக்கிறது… ஆனாலும் அதனை இயக்கும் இதைய தசைநார்களுக்கு அந்த இரத்தம் நேரடியாகக் கிடைப்பதில்லை.

அவற்றிற்கு இரண்டு சிறிய இரத்தக் குழாய்கள் – கொரனரி நாடிகள் (Coronary arteries) மூலமே இரத்தம் கிடைக்கின்றன. இவை முடியுரு நாடிகள் எனப்படுகின்றன. இவற்றில் ஒன்றில் அல்லது அவற்றின் கிளைகளில்அல்லது சிறு கிளைகளில் இரத்தம் செல்வது தடைப்பட்டால், அப் பகுதியில் உள்ள இருதயத்தின் தசை நார்களுக்கு இரத்தம் போதிய அளவு கிடைக்காது போவிடுகின்றது.

அந்நிலையில் தசை நார்களுக்கு போதிய ஒட்சிசன் கிடைக்காது போகவே அவற்றின் செயல் தடைபட்டு விடுகின்றன. இதுவே (மாரடைப்பாக) நெஞ்சுவலியாக வெளிப்படும். அல்லது தசை நார்களுக்கு இரத்த ஓட்டம் அடியோடு தடைப்படலாம். அந் நிலையில் இப்பகுதியிலுள்ள தசைகள் இறந்துவிடவும் கூடும். இதுதான் Myocardial Infarction) எனப்படுகிறது. இதயத் தாக்குகை எனவும் சொல்லலாம். ஆனால் மாரடைப்பைத் தவிர வேறு காரணங்களாலும் நெஞ்சுவலி ஏற்படுகிறது.



நெஞ்சுவலிக்கு வேறு காரணங்கள்

நெஞ்சு வலி ஏற்படுவதற்கு எமது நெஞ்சறையில் உள்ள இருதயம் மட்டுமின்றி, அதிலிருந்து வரும் நாளங்கள், நுரையீரல், களம் போன்ற உறுப்புகளும் காரணமாகலாம்.
அத்துடன் நெஞ்சுச் சுவரில் உள்ள தசைநார்கள், சவ்வுகள், எலும்புகளிலிருந்தும் நெஞ்சு வலி ஏற்படலாம்.

நெஞ்சுக்குக் கீழே உள்ள வயிற்றறையில் உள்ள இரைப்பை, ஈரல் போன்றவற்றிலிருந்தும் நெஞ்சு வலி ஏற்படலாம்.

பரிசோதனைகள்

நெஞ்சுவலிக் காரணம் மாரடைப்பா அல்லது வேறு காரணமா என்பதை சில தருணங்களில் மருத்துவர்களால் கூட கண்டறிய முடியாது. நிச்சமாகக் கண்டறிய ஈசீஜி (ECG) பரிசோதனை உதவும்.

ஆனால் ஈசீஜியில் தெளிவாகத் தெரிய முன்னரே இருதய நொதியங்களைப் பரிசோதிக்கும் இரத்தப் பரிசோதனைகள் உதவும். காரணம் எதுவானாலும் உங்களால் தீர்மானிக்க முடியாது. உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவதே ஒரே வழி.

மாரடைப்பின்போது உடம்பில் ஏற்படும் அறிகுறிகள்




* நடு நெஞ்சில் திடீரென வலி ஏற்படும் நெஞ்சை இறுக்குவதுபோல, அமுக்குவது போல, பிழிவதுபோல, அல்லது பாரம் ஏற்றியது போல இருந்தால் அது மாரடைப்பாக இருக்கலாம். வலியானது பொறுக்க முடியாத கடுமையானதாக இருக்கும்.

* இவ் வலி சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும்

* இவ் வலியானது நடுமார்பின் உள்புறத்தில் ஏற்பட்டு; இடது தோழ்மூட்டு, இடது கை, தொண்டை, நாடி, கழுத்து, முதுகு போன்ற பகுதிகளுக்கும் பரவலாம்

* இவ் வலியுடன் கடுமையான வியர்வை, களைப்பு, இளைப்பு, அதனைத் தொடர்ந்து மயக்கம் தோன்றலாம்

* இறந்து விடுவோம் என்ற பயத்தில் மனம் பதற்றமாக இருக்கும்

* நெஞ்சு வலி இல்லாமலும் மாரடைப்பு ஏற்படலாம் - Silent Attack)

இவ்வாறான அறிகுறிகள் யாவும் ஒருவருக்கு ஏற்படும் என்றில்லை சிலருக்கு இவற்றுள் சில அறிகுறிகளே தோன்றலாம்.

பெண்களில் ஏற்படும் மாரடைப்பின்போது......

* மூச்சு எடுப்பதில் சிரமம் (சுமார் 58 விகிதம்)

* உடல் பலவீனமாக காணப்பெறும் (சுமார் 55 விகிதம்)

* வழமைக்கு மாறாக களைப்பாக இருக்கும் (சுமார் 43 விகிதம்)

* உடல் வியர்வையுடனும் குளிந்தும் காணப்படும் (சுமார் 39 விகிதம்)

* தலைப் பாரம், கிறுகிறுப்பு இருக்கும் ( சுமார் 39 விகிதம்)

மாரடைப்பின்போது; இடதுபக்க நெஞ்சு, கை, தோழ்மூட்டு என்பனவற்றில் வலி ஏற்படக் காரணம் என்ன?

இருதயத்திற்கும், இடதுபக்க கை, தோழ்பட்டைக்கும் இரத்தம் வழங்குவதும் ஒரேநாடியில் இருந்து பிரிந்த்து செல்லும் இரு கிளை நாடிகளாகும். அதனால் இருதயத்தில் ஏற்படும் தாக்கம் இவற்றிலும் உணரப்பெறுகின்றது.

மாரடைப்பின்போது அதிக வேர்வை, களைப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன?

உடல் உறுப்புகளில் அசாதாரண நிலை தென்படும் போது மூளையானது தன்னிச்சையாக அதனை நிவர்த்தி செய்வதற்காக பல எதிர்தாக்கங்களை புரிகின்றது. அதனாலேயே உடம்பு அதிக வியர்வையை வெளிவிடுகின்றது.


மனித இதயம்: அது எப்படிச் செயலாற்றுகின்றது

* இதயம் மார்புப்பகுதியின் மையத்தில் இரு சுவாசப் பைகளுக்கும் இடையில் இருதயத்தின் கீழ்ப் பகுதி சற்றே இடப்புறம் திரும்பி அமைந்துள்ளது.

* நிமிடத்திற்கு 60லிருந்து 90 முறை வரை துடிக்கும் இதயம், ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் முறை துடிக்கிறது.

* இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் இரத்தத்தினை உடலில் செலுத்துகிறது.

* கரோனரி தமனிகள் கொண்டு செல்லும் இரத்தத்தில் இருந்து இதயமும் உடலின் மற்ற பாகங்களும் தேவையான உணவையும், ஆக்சிஜனையும் பெற்றுக் கொள்கின்றன.

* இதயம் வலப்புறம் இடபுறம் என இரு பிரிவுகளாக உள்ளது. இதயத்தின் இருபகுதிகளிலும் இரண்டு இரண்டு அறைகள் உள்ளன. மொத்தத்தில் நான்கு அறைகள் உள்ளன.

* இதயத்தின் வலது மேல் அறையானது உடலின் எல்லாப் பாகங்களிலும் இருந்து வரும் அசுத்த இரத்தத்தைப் பெற்று அதை வலது கீழ் அறைக்கு அனுப்பி வைக்க கீழ் அறை அறையானது அதனை சுத்தம் செய்வதற்காக (அசுத்தமான காபனீர் ஒக்சைட்டை விலக்கி ஒச்சிசனை பெற்றுக் கொள்வதற்காக) நுரையீரலுக்கு அனுப்பி வைக்கின்றது.

* இரத்தம் நுரையீரலில் சுத்திகரிக்கப்பட்டு ஆக்சிஜனைப்பெற்று பின்பு இதயத்தின் இடப்புற மேலறைக்கு வருகிறது. இங்கிருந்து இடது கீழ் அறைக்கு சென்று அங்கிருந்து உடலின் பல பகுதிகளுக்கும் செலுத்தப்படுகிறது. இதயத்தின் நான்கு அறைகளுக்கும் இரத்தம் வந்து போனாலும்; இருதயத்தின் தசைகளுக்கு அவற்றை நேரடியாக பெற்றுக் கொள்ள முடியாது. அவற்றிக்கென வேறு இரத்த நாடிகள் இரத்தத்தை வழங்குகின்றன.

* இதயத்தின் இடப்பகுதியில் இரு வால்வுகள் (மைத்ரல் மற்றும் அயொடிக்) மற்றும் வலப்பகுதியில் இருவால்வுகள் (பல்முனரி மற்றும் மூவிதழ்) உள்ளன. இந்த நான்கு வால்வுகளும் ஒருவழி கதவு போல செயல்பட்டு இதயத்திற்குள் ரத்த ஓட்டத்தை முறைப்படுத்துகின்றன.

மாரடைப்பு என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு?
இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் என்கிறார் மதுரை அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் நிபுணர் டாக்டர் எஸ்.கே.பி. கருப்பையா.

கரோனரி தமனிகள் (இரத்த நாடிகள்) கொண்டு செல்லும் இரத்தத்தில் இருந்து இதயம் ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளையும் பெறுகிறது. இந்த இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் இதயத் தசைகள் இரத்தம் கிடைக்கப்பெறாமல் இறக்கின்றன. இதுவே மாரடைப்பு என்றழைக்கப்படுகிறது. மாரடைப்பின் தீவிரத் தன்மை இதயத்தசைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பொறுத்து அமைகிறது. இறந்த தசைகள் இதயத்தின் இரத்தம்செலுத்தும் திறனைக் குறைத்து அதன் செயல்பாட்டினை வெகுவாக பாதிக்கலாம். பாதங்களில் வியர்த்தல் மற்றும் மூச்சுவிடமுடியாமை போன்ற நிலையை உருவாக்கி இதயத்தில் செயலற்ற நிலையை ஏற்படுத்தலாம்.

ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம்; ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, கரோனரி தமனிகள் (இரத்த நாடிகள்) வழியாக அனுப்புகிறது. இதற்காக கடினமாக உழைக்கும் இதய தசைகளுக்கும் தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு தடையாக முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன.

சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது. இதனால் இந்த இரத்தக் குளாய் மூலம் ரத்தத்தைப் பெறும் இதயத்தின் தசைப் பகுதி ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது. இதுவே மாரடைப்பு.

ரத்தக்குழாயில் அடைப்பு எப்படி ஏற்படுகிறது?
ரத்தக்குழாயின் தசைச்சுவர் உள்ளிருந்து வெளியே மூன்று அடுக்குகளாக உள்ளது. இதில் முதல் இரண்டு அடுக்குகளுக்கு இடையில், பிறந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நூலாடை போல கொழுப்புச் சத்து (Fatty Streak) படிய துவங்குகிறது. காலப்போக்கில் சில காரணங்களால் அது வளர்ந்து கொழுப்பு படிவமாகி (Plaque) ரத்தத்தின் சீரான ஓட்டத்திற்கு தடைக்கற்களாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இத்தடை மேட்டில் விரிசல் உருவாகி ரத்தக்குழாயினுள் வெடிக்கிறது. இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சில அணுக்கள் இத்தடை மேட்டின் விரிசல் உள்ள பகுதியில் அமர்ந்து ரத்தத்தை உறைய வைத்து, ரத்தக்குழாயை முழுமையாக அடைத்துக் கொள்கிறது.

மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்ன?
காரணங்கள் இரண்டு.
ஒன்று நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவை, மற்றொன்று நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை.

மாரடைப்பு வருவதற்கான காரணிகள்

* புகைப்பிடித்தல்

* சர்க்கரை நோய்

* உயர் இரத்த அழுத்தம்

* அதிக உடல் பருமன் மற்றும் நன்மை செய்யும் கொழுப்பு (HDL) குறைவாக இருத்தல்

* அதிக கொலஸ்ட்ரால்

* உடல் உழைப்பு இல்லாமை

* குடும்பத்தில் பலருக்கு தொன்றுதொட்டு மாரடைப்பு

* மன அழுத்தம், அதீத கோபம் மற்றும் படபடப்பு

* மரபியல் காரணிகள்.

கட்டுப்படுத்த முடிந்த காரணங்கள் – புகை பிடித்தல், உயர் ரத்தஅழுத்தம், உடலின் எடை,
உடற்பயிற்சியின்மை, சர்க்கரை நோய்.

கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் – வயது, பரம்பரயாக வரும் மரபணுத்தன்மை.
இதுதவிர ரத்தக்குழாயில் எவ்வித அடைப்பு இன்றியும் மாரடைப்பு வரலாம். ஆனால் இது மிகச்சிலரையே பாதிக்கிறது. இதற்கு காரணம் திடீரென முழுமையாக அடைபடும் அளவிற்கு இதயத்தின் ரத்தக்குழாயில் ஏற்படும் கடுமையான இறுக்கம். இதற்கான அறிவியல் பூர்வமான காரணம் இன்னும் தெரியாவிட்டாலும், இவ்வகை மாரடைப்பு, புகை பிடிப்போர், கொக்கைன் போன்ற மருந்து உட்கொள்வோர், மிகவும் குளிர்வான பகுதிகளுக்கு செல்வோர், மிக அதிகமாக உணர்ச்சிவசப்படுவோரை அதிகம் பாதிக்கிறது.

மாரடைப்பின் அறிகுறிகள் - விளக்கமாக
மாரடைப்பின் அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்வது சற்று கடினம். அவை பிற அறிகுறிகளை ஒத்திருக்கலாம்.

பொதுவான அறிகுறிகள்

* நெஞ்சுவலியுடன் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் இறுக்கம்.

* வியர்த்தல்,குமட்டல் மற்றும் மயக்கம் வருவதுபோல் உணர்தல்.

* மார்பின் முன்பகுதியிலோ அல்லது நெஞ்சுக்கூட்டின் பின்புறமோ வலி இருக்கலாம். இங்கிருந்து வலி கழுத்து அல்லது இடக்கைக்கு பரவலாம்.

* வாந்தி , இருமல், படபடப்பு மற்றும் 20 நிமிடங்களுக்கு மேல் தொடரும் வலி.

* தீவிர நிலையில், இரத்த அழுத்தம் குறைவதால் மாரடைப்பு ஏற்பட்டவரின் உடல் வெளித்து இறப்பும் நேரலாம்.

மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம்.

சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி., அல்லது எக்கோ பரிசோதனை செய்யும் போது தான் தெரியவே வரும். இதற்கு “அமைதியான மாரடைப்பு’ என்று பெயர்.

இதய வலியின் வெவ்வேறு தன்மைகள்: பொதுவாக இதய வலி நெஞ்சின் நடுப்பகுதியில் வரும். அது வலியாகவோ, ஒருவித அழுத்தமாகவோ, ஏதோ ஒரு கனமான பொருளை நெஞ்சில் சுமப்பது போன்ற உணர்வாகவோ, நெஞ்சின் இரு பகுதியில் இருந்தும் நடுப்பகுதியை நோக்கி கயிற்றால் இறுக்குவது போலவோ, நெஞ்சு முழுவதும் ஏதோ முழுமையாக நிறைவாக இருப்பது போன்ற உணர்வுடனோ இருக்கலாம்.

சில நேரங்களில் சாப்பாடு செரிக்காமல் உண்டாகும் அஜீரண கோளாறு போன்ற உணர்வாகவும் வெளிப்படலாம். நெஞ்சுக்குள் எரிச்சல் போன்ற உணர்வு இருக்கலாம். இத்தகைய உணர்வுகள் சில நிமிடங்கள் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ வரலாம். பொதுவாக இத்தகைய உணர்வுகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் அது மாரடைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மாரடைப்பு வரும் முன் சில நாட்களோ, வாரங்களோ, ஏன் சில மாதங்களுக்கு முன்பே கூட மேற்கூறிய அறிகுறிகள் தென்படலாம். அத்தகைய வலி ஏதாவது செயலில் ஈடுபட்டிருக்கும் போது (நடைப்பயிற்சி அல்லது கனமான வேலைகள்) சில நிமிடங்கள் வரும். ஓய்வு எடுத்தவுடன் மறைந்து விடும். இதற்கு “ஆஞ்சைனா’ என்று பெயர்.

நாளடைவில் முன்பை விட குறைவான செயல்பாட்டிலேயே அத்தகைய வலி வந்தால் அல்லது ஓய்வுக்கு பின்னும் அவ்வலி உடனே மறையாமல் இருந்தால் அதுவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி. மேற்கூறிய வலி நெஞ்சின் நடுப்பாகத்தில் இல்லாமல் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்க கைகளிலோ, நடுமுதுகிலோ, கழுத்திலோ, முகத்தாடையிலோ, வயிற்றிலோ கூட வரலாம். இத்தகைய வலியுடன் வாந்தியெடுப்பது போன்ற உணர்வு, வாந்தி எடுத்தல், தலைச் சுற்றல், அதிக வியர்வை போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகள்.

நோயைக் கண்டறிவது எப்படி ?

* மருத்துவர் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தினை பதிவு செய்வதோடு முந்தைய சிகிச்சை விவரங்களை விரிவாக பெற்றுக் கொள்வார்.

* இதயத்தின் செயல்பாடுகளை மின்னணு வடிவில் பெற்றுத் தரும் இசிஜி ECG) எடுக்கப்படுகிறது..

* இசிஜி இதயத்துடிப்பின் வேகம் பற்றிய தகவலைத் தருகிறது. வழக்கத்திற்கு மாறான துடிப்புகள் உள்ளனவா என்றும் மாரடைப்பால் இதயத்தசைகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றும் இசிஜி மூலம் அறியலாம். ஆரம்ப நிலையில் இசிஜி சீராக இருப்பதால் மாரடைப்பிற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கூற முடியாது என்பதை நினைவில் கொள்க.

* இதயத்தசைகளில் பாதிப்பு உள்ளதா எனக் கண்டறிய இரத்த பரிசோதனைகள் உதவும்.

* மார்புப்பகுதியில் எக்ஸ்ரே எடுக்கப்படலாம்.

* எக்கோ-கார்டியோகிராம் என்பது இதயத்தின் செயல்பாடுகளை அறிய உதவும் புதிய ஸ்கேன் முறை

* கரோனரி ஆஞ்ஜியோகிராம் என்ற பரிசோதனை கரோனரி இரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதா என உறுதியாக கணித்துக் கூறும்.

மாரடைப்பு வரும்போது கொடுக்கப்படவேண்டிய முதலுதவி என்ன?

மாரடைப்பிற்கு உரிய முறையில் சிகிச்சை அளித்தால் உயிரிழப்பைத் தவிர்க்கலாம்.

* சிறந்த மருத்துவ உதவி கிடைக்கும் வரை , நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை படுக்க வைத்திருக்க வேண்டும்..

* ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தால் நோயாளிக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்.

* நைட்ரோக்ளிசிரைன் அல்லது ஸார்பிட்ரேட் மாத்திரைகள் கிடைக்கப்பெற்றால் ஒன்றிரண்டு மாத்திரைகளை நோயாளியின் நாக்கின் அடியில் வைக்கவேண்டும்.

* நீரில் கரைக்கப்பட்ட நிலையில் அஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்கலாம்.

என்னென்ன சிகிச்சைகள் கொடுக்கப்பட வேண்டும்?

* மாரடைப்பு ஏற்பட்டால் உடனடி மருத்துவ கவனிப்பும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் அவசியம்.

* மாரடைப்பு ஏற்படும் ஆரம்பகால நிமிடங்களும், நேரங்களும் இக்கட்டானவை. முதலில் கரோனரி தமனி எனப்படும் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள கட்டியைக் கரைக்கும் மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.

* இதயத்துடிப்புகள் கண்காணிக்கப்பட்டு இயல்புக்கு மாறான துடிப்புகளுக்குரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. வலி நீக்கும் மருந்துகளை நோயளிக்குக் கொடுத்து ஓய்வெடுக்க அறிவுறுத்தப்படுகிறார்.

* இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்பட்சத்தில்,அதனைக்குறைக்கத் தகுந்த மருந்துகள் அளிக்கப்படுகின்றன.

* நோயாளியின் வயது,மாரடைப்பின் தாக்கம்,இதயம் பாதிக்கப்பட்டுள்ள அளவு மற்றும் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை மாறுபடும்.

* பல நேரங்களில் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பினை நீக்க தெளிவான மற்றும் முறையான வழிமுறைகள் அவசியமாகின்றன. அவை கரோனரி ஆஞ்சியோப்ளாஸ்டி, பலூன்களைக்கொண்டு இரத்தக்குழாய்களை விரிவடையச்செய்தல் அல்லது கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற முறைகளாக இருக்கலாம்.

மாரடைப்பைத் தடுப்பது எப்படி?
மாரடைப்பு வருவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளவர்கள் கீழ்க்கண்ட தடுப்பு முறைகளைக் கட்டாயம் கடைபிடிக்கவும்.
வாழ்க்கைமுறையில் மாற்றம்

1. அவர்கள் உண்ணும் உணவுகள் ஆரோக்கியமாகவும்,உப்பு & கொழுப்புப் பொருட்கள் குறைவாகவும் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் & நார்ச் சத்துகள் அதிகமாகவும் இருக்க வேண்டும்.

2. அளவு மீறிய உடல் எடை உடையவர்கள் உடல் எடையைக் குறைத்தல் அவசியம்.

3. உடற்பயிற்சிகளை வழக்கமாகச் செய்தல் கட்டாயம்.

4. புகைப்பிடித்தலை முழுவதுமாகக் கட்டாயம் நிறுத்த வேண்டும்.

நீரிழிவு நோய், அதிக அளவு இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்புச்சத்து உடையவர்கள் மருந்துகளை முறையாக உட்கொண்டு, உடல்நிலையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

1. பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும் (எலி -
நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.

2. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும்.

3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

4. மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன

5. ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு (pump) பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டேர்கள் …நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்)

6. பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

7. நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவே (clenched fist).

8. கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.

9. நாம் இதயத்தின் மேல் கையை வைஎன்றால் உடனடியாக நாம் நமது கையை நெஞ்சின் இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில்தான் இரண்டு நுரைஈரல்லுக்கும் மத்தியில் இருக்கிறது. இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று இடப்பக்கம் சாய்ந்து இருக்கும் எனவேதான் நாம் அவ்வாறு உணருகிறோம்.


10. லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம் உருவாகிறது


பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது, அதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் தெரிய வருவதில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது

ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது பெரும்பாலான நேரங்களில் தெரிவதில்லை என்றும் வாஷிங்டனில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வு கூறுகிறது.

மிகத் தீவிரமாக மாரடைப்பு ஏற்படும்பட்சத்தில், அது மாரடைப்புதான் என்று தெரிந்தால் மட்டுமே அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள முடியும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

நோயாளிகளின் அறிகுறிகளை வைத்தே டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள் என்பதால், பெண்களுக்கு மாரடைப்புக்கான சிகிச்சை தெரிய வராமல் போய் விடுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.



முதுகின் மேல்புறம் வலி, வாந்தி, சுவாசிப்பதில் ஏற்படும் சிரமம், மூக்கடைப்பு, அஜீரணம் போன்றவை பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதன் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளது.


பொதுவாக மாரடப்பு விகிதம் பெண்களுக்கு குறைவு என்ற போதிலும், அவை ஏற்படும் அறிகுறிகள் தெரியாத போது, சிகிச்சை எடுத்துக் கொள்ள இயலாமல் போவதால், திடீர் மரணம் ஏற்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

மாரடைப்பு ஏற்படும் பெண்களுக்கு, அதற்கான அறிகுறிகள் வெகுநேரம் முன்பாகவே வந்திருக்கக்கூடும். எனவே மாரடைப்பு என்று தெரிய வந்தவுடன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் தீவிர சிகிச்சை அளிக்கக்கூடிய ஆம்புலன்ஸில் செல்வதே சிறந்தது என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

அப்போது தான் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களைப் பொருத்தவரை அவர்களுக்கும், சிகிச்சை அளிப்பவர்களுக்கும் மாரடைப்பு என்று அறிந்து கொள்வதற்கே தாமதம் ஆவதாலேயே சில நேரங்களில் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive