உதவி தொடக்க கல்வி அதிகாரி என்ற, ஏ.இ.இ.ஓ., பதவிக்கு வர, பெரும்பாலான தலைமை
ஆசிரியர்கள் மறுப்பதால், பதவி உயர்வு கவுன்சிலிங் முறையை மாற்ற வேண்டும்
என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், ஏ.இ.இ.ஓ., பதவிக்கு, 800 இடங்கள் உள்ளன; ஆண்டுதோறும், 50 இடங்கள் காலியாகின்றன. அரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களில், துறை ரீதியாக, ஐந்து தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஏ.இ.இ.ஓ., பதவி வழங்கப்படும்.
இந்த பதவிக்கு வருவோர், ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள, 30 தொடக்க, நர்சரி பள்ளிகளை நிர்வகிக்க வேண்டும். மாவட்ட கல்வி அதிகாரியான, டி.இ.ஓ., மற்றும் முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ.க்களுக்கு, நிர்வாக ரீதியாக பதில் அளிக்க வேண்டும்.
இதற்கு, கூடுதல் சம்பளமோ, பதவி உயர்வோ கிடையாது.
எனவே, கவுன்சிலிங் நடக்கும் போது, சீனியர் பட்டியலில் இருக்கும் தலைமை ஆசிரியர்கள் ஆஜராகி, 'ஏ.இ.இ.ஓ., பதவி வேண்டாம்' என, எழுதி கொடுத்து விட்டு செல்கின்றனர். அதனால், 50 காலி இடங்களை நிரப்ப, கல்வித்துறைக்கு, ஐந்து மாதங்கள் வரை ஆகிறது.
இது குறித்து, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:ஏ.இ.இ.ஓ., பணியிடங்களை நிரப்பும் கவுன்சிலிங்கிற்கு, பணி மூப்பில் உள்ள, முதல், 100 பேர் அழைக்கப்படுவர். பெரும்பாலானோர், 'பதவி வேண்டாம்' என, கூறி விடுவர்.
பின், அடுத்த, 100 பேர் அழைக்கப்படுவர். இப்படி, படிப்படியாக பலர் வருவதும், செல்வதுமாக இருப்பதால், கவுன்சிலிங்கில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே, கவுன்சிலிங்கில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஏ.இ.இ.ஓ., பதவிக்கு, தகுதி பெற்றவர்களின் விருப்ப பட்டியலை தயாரித்து, பணி மூப்பின்படி, நியமனம் செய்தால், பல்வேறு குழப்பங்கள் தீரும். காலியிடங்களை நிரப்பவும், கால தாமதம் ஏற்படாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...