ராமநாதபுரம்,
சிவகங்கை மாவட்ட வெற்றியை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும், 'எலைட்'
போன்ற சிறப்பு திட்டம் கொண்டு வர வேண்டும்' என, பெற்றோரும், மாணவர்களும்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வில், விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அடுத்தபடியாக, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள், தேர்ச்சியில் முன்னணியில் உள்ளன. பின்தங்கிய, வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்தில், சென்னையை போல வசதிகள் கிடையாது; பல பிரச்னைகள் உள்ளன.
சிவகங்கையிலும், இதே போன்று பல பிரச்னைகள் உள்ளன. ஆனால், அவற்றை எல்லாம் மீறி, இந்த இரண்டு மாவட்டங்களும், பிளஸ் 2 தேர்வில், முன்னிலைக்கு வந்துள்ளன.இதற்கு, அந்த மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட, 'எலைட்' திட்டமே காரணம் என, கூறப்படுகிறது. அதாவது, எலைட் திட்டத்தில், நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு, அவர்கள் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளில் சேரும் வகையில், கூடுதல் பயிற்சி அளிக்கப்படும்.
அதே போல, சராசரியாகவும், அதற்கு கீழும் உள்ள மாணவர்கள் தேர்ச்சி பெறவும், ஓரளவுக்கு மதிப்பெண் பெறவும், பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி திட்டத்தில், பள்ளிகளில் தினமும் காலை, மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்; வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும். அந்த விடைத்தாள்களை, மற்ற பள்ளி ஆசிரியர்கள் திருத்துவர். இப்படி பல செயல்பாடுகள் அமலில் உள்ளன.
இதற்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பிளஸ் 2 தேர்வு முடிவில், எலைட் திட்டம் வெற்றி பெற்றதை, தேர்ச்சி விகிதம் காட்டியுள்ளது. அதனால், இதேபோன்ற சிறப்பு திட்டத்தை, தமிழகம் முழுவதும் அமல்படுத்தி, அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை முன்னேற்ற வேண்டும் என, பெற்றோரும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...