சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 வகுப்பில் சேர, மாணவர்களிடம் கடும்
போட்டி ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழக பாடத்திட்டத்திற்கு மாறிய பள்ளிகள்,
மீண்டும் சி.பி.எஸ்.இ.,க்கு மாற விண்ணப்பித்துள்ளன.
தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில்,
பாடங்களின் தரம் மற்றும் கற்பித்தல் திறன் குறைவாக உள்ளதாக, கல்வியாளர்கள்
கூறி வருகின்றனர். அதனால், 'நீட்' மற்றும் ஜே.இ.இ., போன்ற, தேசிய நுழைவு
தேர்வுகளில், தமிழக மாணவர்களின் பங்களிப்பு, குறைந்து வருகிறது. அதிலும்,
மருத்துவ படிப்பில் சேர, இந்த ஆண்டு, 'நீட்' தேர்வில், கட்டாயம் தேர்ச்சி
பெற்றாக வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, பிளஸ் 1, பிளஸ் 2
பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில், 'நீட்' மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை, சி.பி.எஸ்.இ., என்ற,
மத்திய இடைநிலை கல்வி வாரியம் தான் நடத்துகிறது. எனவே, சி.பி.எஸ்.இ.,
பள்ளிகளில் சேர, மாணவர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில்,
மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளில், இதுவரை, பிளஸ் 2
மதிப்பெண்படி, 'கட் ஆப்' தரவரிசையில், மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
எனவே, அதிக, 'கட் ஆப்' மதிப்பெண் பெறுவதற்காக, பல சி.பி.எஸ்.இ., பள்ளிகள்,
பிளஸ் 1, பிளஸ் 2க்கு மட்டும், மாநில பாடத்திட்டத்தில் இணைந்து, தங்கள்
மாணவர்களுக்கு பாடம் நடத்தினர். தற்போது, நீட் தேர்வு கட்டாயமானதால்,
பெரும்பாலான சி.பி.எஸ்.இ., பள்ளிகள், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில்,
மீண்டும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற, பள்ளிக் கல்வித்துறையில்
விண்ணப்பித்துள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...