அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், 257 ஊழியர்கள், அரசு துறைகளுக்கு
இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை
பல்கலைக் கழகத்தில், நிதி நெருக்கடியை சமாளிக்க ஊதியம் குறைப்பு,
யு.ஜி.சி., விதிமுறைகளின்படி ஆசிரியர்கள்,
ஊழியர்களுக்கு பணி நிரவல் முறையில், அரசு அலுவலகங்களில் இடமாறுதல் என,
பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில்
ஆசிரியர்கள், ஊழியர்கள் என, 5,500 பேரை, இடமாறுதல் மற்றும் ஊதிய குறைப்பு
செய்ய, பட்டியல் தயாரிக்கப்பட்டது.முதல் கட்டமாக, 2016ல், உதவி
பேராசிரியர்கள், 369 பேருக்கு இட மாறுதல் அளிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக,
கடந்த பிப்ரவரி மாதம், சென்னையில் நடந்த நேர்முகத் தேர்வில், நீதிமன்றம்
மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகளில் உள்ள பணிகளுக்கு, 87 பேருக்கு
மட்டும் இட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. இந்நிலையில், நேற்று, 249
அலுவலக உதவியாளர்கள், மூன்று இளநிலை உதவியாளர்கள், ஐந்து காவலர்கள் என, 257
பேருக்கு இட மாறுதல் உத்தரவு, அந்தந்த துறை தலைவர்கள் மூலம்
வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், கூட்டுறவு, வேளாண்மை, சமூகத் துறை,
நுகர்பொருள் வாணிபக் கழகம், புள்ளியியல் மையம் ஆகிய ஐந்து துறைகளுக்கு
மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இந்த துறைகளின் கீழ் காலியாக உள்ள
அலுவலகங்களுக்கு, இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, ராமநாதபுரம்,
மதுரை, நெல்லை, வேலுார், சென்னை ஆகிய ஊர்களுக்கு இடமாறுதல்
செய்யப்பட்டுள்ளதால், அங்கு சென்று பணியில் சேருவதில், ஊழியர்கள் கலக்கம்
அடைந்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...