Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

+2 RANK அறிவிக்காதது - அரசின் முடிவுக்கு பெற்றோர்கள் பூரிப்பு

     பிளஸ் 2 தேர்வில் மாநில ரேங்க் பற்றி அறிவிக்காததால் இந்தாண்டு பிளஸ் 2 ரிசல்ட் தொடர்பான பரபரப்புகள் குறைந்தே காணப்பட்டது.           ஆண்டு முழுவதும் முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற தீவிரத்தில் விடிய விடிய தூங்காமல் படித்த குழந்தைகள் அதிகம். அவர்களை தூங்கவிடாமல் படிக்க வைத்த பெற்றோர் என்ன நினைக்கிறார்கள் என்று பார்ப்போம். 
சங்ககிரியைச் சேர்ந்த வசந்தாவின் மகள் நந்தினி பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். குறைவான மார்க் எடுத்த மகளிடம் 'ரீவேல்யூவேஷன் பண்ணலாம்' என்று சமாதானம் கூறிக் கொண்டிருந்தவரை தொலைபேசியில் பிடித்தோம்.
‘‘மாநில ரேங்கை அரசு அறிவிக்காமல் போனதில் நல்லது, கெட்டது ரெண்டும் கலந்திருக்கு. மாநில அளவில் முதலிடம் பிடிக்கலாம் என்று உற்சாகமாக குழந்தைங்க படிப்பாங்க. அவங்க போட்டோ பேப்பர்ல வர்றதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கும். இதெல்லாம் மிஸ் பண்றோம். இன்னொருபுறம் பள்ளியில் குழந்தைங்க டென்ஷன் குறையும். இதை வைத்தே காசு பார்க்குற தனியார் பள்ளிகள் இனி அதிக கட்டணம் வாங்க முடியாது. மாணவர்கள் பார்வையிலிருந்து பார்க்கும்போது சந்தோஷமான விஷயம் தான்."
உமாபதி, சேலம்.
+2 மதிப்பெண் உமாபதி
''நான் படிப்பை 12 ம் வகுப்போட நிறுத்திட்டேன். அதனால படிப்போட அருமை எனக்குத் தெரியும்.  என் நிலை என் பசங்களுக்கு வரக்கூடாதுங்கிறதுனால நல்லாப் படிக்கணும், படிப்பு மூலமாதான் நாம நல்ல நிலைக்கு வர முடியும்னு சொல்லிட்டே இருப்பேன். நாம என்ன சொன்னாலும், பசங்களுக்கு என்ன வருமோ அதுதானே வரும். என் பையன் அரவிந்தனுக்கு படிப்பைவிட வெளியுலகத்தைப் பற்றி தெரிஞ்சுக்கணும்னு விருப்பப்படுறான். அதனால வெளி விஷயங்களான பொது அறிவை படிக்கச் சொல்லுவேன். இந்த முறை அவன் எடுத்த மார்க் பத்தி கவலைப்படுற மனநிலையில நாங்க இல்ல. என்ன வந்தாலும் பரவாயில்லை என்கிற மனநிலையிலதான் இருக்கோம். நாங்க சாதாரண நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவங்க. பல லட்சகணக்கில் எங்களால பணத்தை படிப்புக்காக செலவழிக்க முடியாது. அப்படி இருக்கும் போது நல்லபடியா படிச்சு வந்தாதான் அவன் லைஃப் நல்லா இருக்கும்னு புரிய வச்சிருக்கோம். இன்னும் சொல்லப்போனா, நாங்க அவனை டியூசனுக்குப் போகச்சொல்லி எவ்வளவோ சொன்னோம். 'வேண்டாம்மா.. இந்த அரசு பள்ளியிலயே டீச்சர் நல்லா சொல்லிக் கொடுக்கிறாங்க'னு சொல்லி ஸ்பெஷல் கிளாஸ் போய் படிச்சான். என் பையன் எப்படி மார்க் எடுத்தாலும் சரிங்க அவன் கூட உறுதுணையா நிப்போம். பெத்தவங்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிக்கிறேன். படிப்போ, மதிப்பெண்ணோ வாழ்க்கையை முழுமை ஆக்கிடாது.  தனித்திறமையும், தன்னம்பிக்கையும்தான் ஓர் இளைஞனை நல்லபடியா உருவாக்கும். இதை புரிஞ்சுக்கிட்டு உங்க பிள்ளைகளுக்கு ஆதரவாகவும், அடுத்த வழியையும் காண்பிங்க. இந்த வருஷத்திலிருந்து பிள்ளைகளுக்கு விடிவுகாலம் பிறந்திருக்குனுதான் சொல்லணும். இனிமேல் 'பாத்தியா அந்த பையன்/பொண்ணு மாநிலத்தில முதல் இடம். அவன்லாம் எப்படி படிச்சிருப்பான், பக்கத்து வீட்டுப் பையன் அவ்வளவு  மதிப்பெண் எடுத்திருக்கிறான் என்கிற கம்பேரிசன் இருக்காது. அரசு நல்ல முடிவை எடுத்திருக்கு'' என்றார்.

திலீப் (ஆசிரியர்):அரசு மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலம்.
+2 மதிப்பெண் திலீப்
''மாணவர்களுக்கு எப்போதுமே ஓர்  ஆதரவு தேவைப்படும். அந்த ஆதரவை பெற்றோர்களுக்கு அடுத்த நிலையில இருக்கிற ஆசிரியர்கள் கொடுப்பது அவசியம். என்ன மதிப்பெண் வந்திருக்கோ அதை வைத்து, அந்த மாணவனுக்கு என்ன படிக்க விருப்பமோ அதை பெற்றோர்கள் வழங்கவேண்டும். அப்போதான் அவனோட கேரியரை சரியான திசையில நகர்த்த முடியும். ஒரு பர்சன்டேஜ் மாறின மாணவர்கள் பலபேர் தன்னோட வாழ்க்கையே முடிஞ்சுப் போயிடுச்சுனு முடிவு பண்ணிடுறாங்க. இது மிக முக்கியக் காரணம் பெற்றோர்களின் எதிர்பார்ப்பும், சுற்றத்தில் இருக்கும் மாணவர்களோட கம்பேர் பண்றதும்தான். இன்றைய சூழல்ல நீங்க எடுக்கிற மதிப்பெண் மட்டுமே உங்க எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது இல்லை. இந்த ரிசல்ட்ல தேர்ச்சி பெற முடியாதவர்கள் ஜூன் மாதம் வரக்கூடிய தேர்வில் கலந்துகொண்டு இன்னும் அதிக மதிப்பெண்களை எடுங்கள். மதிப்பெண் குறைவாக இருப்பதாக நினைப்பவர்கள் உடனடியாக மறுக்கூட்டலுக்கு விண்ணப்பியுங்கள். ஒவ்வொரு ஸ்கூலும் தங்களை கம்பேர் பண்ணிப்பார்ப்பதும் மாணவர்கள் மீது வலுகட்டாயமாக மதிப்பெண்களை எடுக்க வேண்டும் எனத் திணிக்க காரணமாகிறது. அரசு கொண்டு வந்துள்ள மாநிலத்தின் முதல் மூன்று மதிப்பெண்களை வெளியிடாமல் இருப்பது வரவேற்கத்தக்கது. இதனால் பள்ளிகள் அடுத்து மாணவர்களை இதைச் சொல்லி ஏமாற்றுவதைத் தடுக்க முடியும். அப்போதெல்லாம் 800 மதிப்பெண்கள் எடுத்தாலே பெரியதாக இருக்கும். ஆனால், இன்று 1180 எடுத்தால் கூட அது பெரியதாகத் தெரிவதில்லை. இந்நிலை இனி மாறும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அடுத்த வரும் ஆண்டுகளிலிருந்து +1 க்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்கிற செய்தி பரவி வருகிறது. இது உண்மையா என்று தெரியவில்லை. பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.’’

சாந்தி, ஆசிரியை சேலம்
சாந்தி +2 மதிப்பெண்
''என் பொண்ணும் பிளஸ் 2 எழுதியிருக்கா. ரேங்க் சிஸ்டம் கண்டிப்பா வேண்டாம். இது தேவையில்லாம குழந்தைங்க மத்தியில ஏற்றத்தாழ்வை உருவாக்குது. ரேங்க் சிஸ்டம் தனியார் பள்ளிகள் தங்களோட பள்ளிக் கட்டணத்த உயர்த்திக்கத்தான் உதவுச்சு.
லட்சங்களில் விளம்பரம் கொடுத்து எங்க பள்ளியில குழந்தைங்கள சேர்க்கலாம்னு சொல்லி கோடிகளை சம்பாதிச்சாங்க. இதனால அரசுப்பள்ளிகள் வாய்ப்பிழந்து மக்களால புறக்கணிக்கப்பட்டிருந்தது. கல்வியில் இருந்த பல ஏற்றத்தாழ்வுகளும் இனிமாறும். அரசுப்பள்ளிகள் மறுபடியும் புத்துணர்வு பெறும்’’.   
ஆசிரியர், கவிஞர் சுகிர்தராணி, வேலூர்
சுகிர்தராணி +2 மதிப்பெண்
''முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் பட்டியலை வெளியிடும் முறைக்கு அரசு விடைகொடுத்திருக்கிறது. இதற்கு, மாணவர்களை உளவியலாக பாதிக்கும், ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும், மன அழுத்தம் ஏற்படும் உள்பட பல காரணங்களைக் கூறுகின்றனர். அதே நேரம், தமிழகத்தில் எந்த மாவட்டம் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றிருக்கிறது, எந்த மாவட்டம் குறைவாக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றிருக்கிறது என்கிற பட்டியலை வெளியிடுவதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், எல்லா மாவட்டங்களின் சமூகப் பொருளாதாரச் சூழலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. குறைவான சதவிகிதப் பட்டியலிலிருக்கும்  எங்கள் மாவட்டமான வேலூரை எடுத்துக்கொள்வோம். இங்கு முதல் தலைமுறை கல்வி பெறும் குடும்பங்கள் அதிகம். அதனால் கல்வி குறித்த விழிப்புஉணர்வு குறைவாக இருக்கிறது. மேலும், தலித் மக்களின் குழந்தைகள் இந்த மாவட்டத்தில் அதிகளவில் படிக்கின்றனர். தலித் மக்களுக்கு கல்வி மிகத் தாமதமாகத்தான் கிடைத்தது என்பதும் கணக்கில் கொள்ள வேண்டும். திருநெல்வேலி மாவட்டம் எனில், பரப்பளவில் சிறியது, மேலும் கல்வியை மக்களிடையே பரப்பும் வேலையைப் பலரும் செய்த வரலாறு இருக்கிறது. எங்கள் பகுதியில் அதுபோன்ற வாய்ப்பு வழங்கப்பட்டதில்லை. வேறு மாவட்டத்துக்கு எங்கள் பகுதி மாணவர்கள் படிக்கச் செல்லும்போது, 'அந்த மாவட்டமா அது தேர்ச்சி சதவிகிதம் குறைந்த மாவட்டமாயிற்றே' என்கிற தொனியில் விசாரிக்கப்படுவதும் உண்டு. இதுபோன்ற சூழல் ஏற்படாமல் இருக்க, மாவட்ட அளவிலான ரேங்கிங் பட்டியலையும் தவிர்க்கலாம்''.

பூங்கொடி, கோவை:
பூங்கொடி
'இந்த சிஸ்டம் ரொம்ப நல்ல சிஸ்டம்ங்க. என் பொண்ணே முதல் மார்க் வாங்கியிருந்தா கூட நான் இந்த சிஸ்டத்தை வரவேற்றிருப்பேன். முதல் மார்க் வாங்கலைனு எத்தனை புள்ளைங்க மனசொடிஞ்சு தற்கொலை பண்ணியிருக்குங்க. அப்படி இனி நடக்காது".




1 Comments:

  1. Pala private schools Ku miga periya kuttu vaithaar kalvi amaichar. Sabash oru student Mark edukka vachu athai oor aayiram murai solli lacha kanakkil panam pidungu PALA PALA PRIVATE SCHOOLS. Enime govt schools tharamum parents Ku theriyum sariyana mudiuu....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive