Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வியர்க்குருவால் அவதிப்படுகிறீர்களா? எப்படி போக்குவது? இதோ 12 வழிகள்

பத்து நிமிடங்களுக்கு மேல் வெயிலில் நின்றாலே மழையில் நனைந்ததுபோல வதைக்கிறது வியர்வை.
கொட்டும் வியர்வை, ஆடைகளையும் தொப்பலாக நனைத்துவிடுகிறது. வெயிலின் உக்கிரம் ஒவ்வொரு வருடமும் அதிகமாகிக்கொண்டே போய் தாங்கிக்கொள்ளவே முடியாததாக ஆகிவிடுகிறது. ஒருபுறம் வெயில் என்றால், மறுபுறம் வியர்க்குரு, அம்மைநோய், நீர்க்கடுப்பு, உடல் அரிப்பு, மலச்சிக்கல் எனப் படையெடுக்கும் நோய்களின் பயமுறுத்தல்.


இவற்றில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாடாகப்படுத்தும் முக்கியமான பிரச்னை வியர்க்குரு. "நம் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப உணவு முறைகள், நடைமுறை பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் வியர்க்குருவை எதிர்கொள்ளலாம்; சமாளிக்கலாம்; தடுக்கலாம்’’ என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன். மேலும், வியர்க்குரு யாருக்கெல்லாம் வரும், அதற்கான தீர்வுகள் என்னென்ன என்பது குறித்தும் விவரிக்கிறார்.

வியர்க்குரு

உடலின் வெப்பநிலையைப் பராமரிப்பவை வியர்வைச் சுரப்பிகள். உடல் வெப்பம் அதிகமாகும்போது, வியர்வைச் சுரப்பிகள் தேவைக்கு

அதிகமாக உடலில் தேங்கும் உப்பு, கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும். இந்த வியர்வைச் சுரப்பிகளின் வாயிலில் தூசி, அழுக்கு படிந்து அடைத்துக்கொள்வதால் தோன்றுகிறது வியர்க்குரு. வியர்வையால் இந்தச் சிறிய கட்டிகள் வருவதால், இதை `வேர்க்குரு’ அல்லது `வியர்க்குரு’ (Prickly Heat) என்கிறோம். இது தொந்தரவே தவிர, வியாதி அல்ல. அதே நேரத்தில் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், அரிப்புடன் கூடிய படை, தேமல் எனப் பல தோல் நோய்கள் ஏற்படக் காரணமாகிவிடும். யாருக்கு வரும்? கோடை காலத்தில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் பிரச்னை இது. அதிலும், உடலில் பித்தம் அதிகம் இருப்பவர்கள், உடல்பருமன், கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்கள், இயற்கையாகவே உடற்சூடு உள்ளவர்களுக்கு இது உண்டாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இறுக்கமான ஆடைகளை அணிவது போன்ற நடைமுறைப் பழக்கங்களாலும் இது ஏற்படலாம்.

தீர்வுகள்
* `பூமியில் விளையும் சீசனல் ஃபுரூட்ஸ் அனைத்துமே, அந்தந்த தட்பவெப்பநிலைக்கு ஏற்றவை’ என்கிறது ஆயுர்வேதம். அதற்கு ஆகச் சிறந்த உதாரணம், நுங்கு. இது, கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வியர்க்குரு நீங்கும்.

* வெள்ளரிக்காய், கிர்ணி, இளநீர், தர்ப்பூசணி, கரும்புச்சாறு போன்றவற்றைப் பருகலாம். இவை உடலின் நீரிழப்பைச் சரிசெய்யும். வியர்க்குருவைப் போக்க உதவும்.

* இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர், திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) பொடியை சுடுதண்ணீரில் கலந்து பருகலாம் அல்லது நீரில் கரைத்து, தேய்த்துக் குளித்தாலும் வியர்க்குரு மறையும். இதேபோல வெட்டி வேர் பவுடரையும் பயன்படுத்தலாம்.

* வியர்க்குருவுக்கு சந்தனம் மிகச்சிறந்த நிவாரணி.ஒரிஜினல் சந்தனத்தை உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம். வியர்க்குருவைப் போக்க சந்தனத்துடன் மஞ்சள் சேரத்துத் தடவலாம். மஞ்சள், கிருமி நாசினி என்பதால், வியர்க்குருவை மட்டுப்படுத்தும்; கிருமித்தொற்றால் ஏற்படும் அரிப்பு போன்ற பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும்.

* அறுகம்புல், மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் குளிக்கலாம். இது 'அறுகன் தைலம்', 'தூர்வாரி தைலம்' என்ற பெயர்களில் நாட்டு மருந்துக் கடைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது.

* மஞ்சள், சந்தனம், வேப்பிலை மூன்றையும் சம அளவு எடுத்து, மைபோல் அரைக்கவும். வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குளிக்கவும்.

* பாசிப் பயறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கலந்த பொடியை தேய்த்துக் குளிக்கவும்.

* கற்றாழையின் உள் பகுதியை எடுத்து சோப்புபோல தேய்த்துக் குளித்தால், வியர்வை பிரச்னை நீங்கும்.

* உணவு வகைகளை வறுத்துச் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, கூட்டு, குழம்பாக சமைத்துச் சாப்பிட வேண்டும். கார வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.

* நேரம் தவறித் தூங்கக் கூடாது. சூடான தரையில் படுத்து உறங்கக் கூடாது. காற்றோட்டமான இடங்களில் படுத்து உறங்க வேண்டும்.

* குப்பைமேனிக் கீரையை பருப்பில் சேர்த்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்; வியர்க்குரு நெருங்காது.

* சீரகம், சுக்கு, ஏலம், நெல்லிக்காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துப் பொடி செய்து, அதற்கு இணையாக சர்க்கரையைப் பொடி சேர்த்து கலந்துகொள்ளவும். தினமும் காலை உணவுக்குப் பின்னர் அரை டீஸ்பூன் அளவுக்கு இதைச் சாப்பிட்டுவந்தால், உடல் சூட்டால் ஏற்படும் நோய்களையும் வியர்க்குருவையும் தடுக்கலாம். கோடை காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சில அவசியமான பழக்கங்கள்...

* நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

* முடிந்த வரையில் குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் இரு முறை குளிக்க வேண்டும்.

* மலத்தை அடக்கக் கூடாது.

* வெயிலில் வெகு நேரம் அலைவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, காலை 12 முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்கலாம். அப்படிச் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால், கறுப்பு நிறக் குடைகளை தவிர்த்துவிட்டு, வெளிர் நிற குடைகளைப் பயன்படுத்தலாம்.

* உடல் சூடு அதிகம் ஆகாமல் இருக்க, இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். பருத்தி ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும்.

* வாரத்தில் இரு தினங்கள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.
நன்றி- ஆனந்த விகடன்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive