Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Your Children Must Read These Books!

உலகப் புத்தக நாளையொட்டித் தமிழில் குழந்தைகளுக்காக இதுவரை வெளியான புத்தகங்களில் குழந்தைகள் அவசியம் படிக்க வேண்டிய 20 புத்தகங்கள்

ஏப்ரல் 23 - உலகப் புத்தக நாள்
உலகப் புத்தக நாளையொட்டித் தமிழில் குழந்தைகளுக்காக இதுவரை வெளியான புத்தகங்களில் குழந்தைகள் அவசியம் படிக்க வேண்டிய 20 புத்தகங்களைப் பார்ப்போம்.
10 நேரடி தமிழ்ப் புத்தகங்கள்
ஆடும் மயில் மற்றும் மலரும் உள்ளம், அழ.வள்ளியப்பா, என்.சி.பி.எச். வெளியீடு
புகழ்பெற்ற குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் பாடல் தொகுதிகள் இவை. குழந்தைகளே வாசித்து, பாடி மகிழக்கூடிய பல்வேறு பாடல்களைக் கொண்ட தொகுப்புகள்.
தரங்கம்பாடி தங்கப் புதையல், பெ. தூரன், வானதி வெளியீடு
பண்டைய துறைமுக ஊரான தரங்கம்பாடியில் இருக்கும் புதையலைச் சிறுவர்களே தேடிச் செல்லும் சாகசக் கதை.
சந்திரகிரிக் கோட்டை, ஆர்.வி.
‘கண்ணன்’ இதழின் ஆசிரியர் ஆர்.வி. பல்வேறு வகைக் கதைகளை எழுதுவதற்காக அறியப்பட்டவர். அவர் எழுதிய சாகசம் நிறைந்த கதை இது.
கானகக் கன்னி, கல்வி கோபாலகிருஷ்ணன், சாகித்ய அகாடமி வெளியீடு
குழந்தைகளுக்கான அறிவியல் நூல்களை எழுதுவதற்காகப் புகழ்பெற்ற நூல் ஆசிரியர், தாவரங்களைப் பற்றி கதை போல அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் இந்த நூல் மத்திய அரசின் பரிசைப் பெற்றது.
சிற்பியின் மகள், பூவண்ணன், வானதி வெளியீடு
குழந்தைகளுக்கான வரலாற்று கதைகளை எழுதுவதற்குப் புகழ்பெற்ற நூல் ஆசிரியர், வரலாற்று பின்னணியில் சிற்பி ஒருவரைப் பற்றி எழுதிய கதை.
தங்க மயில் தேவதை, முல்லை தங்கராசன், பூங்கொடி வெளியீடு
ஒரு விறகு வெட்டிக்குத் தங்க முட்டையிடும் மயில் கிடைக்கிறது. அது திடீரெனத் தங்க முட்டையிடுவதை நிறுத்தி விடுகிறது. அதைத் தொடர்ந்து நடக்கும் மாயாஜாலங்களும் மர்மமும் கூடிய கதை.
மர்ம மாளிகையில் பலே பாலு, வாண்டுமாமா, வானதி வெளியீடு
வாண்டுமாமாவின் புகழ்பெற்ற கதாபாத்திரங் களான பலே பாலு, சமத்து சாரு, அண்ணாசாமி போன்றவர்களின் ஜாலி யான சேட்டைகள் நிறைந்த படக்கதைகள் கொண்ட நூல். படக்கதைகளை வரைந்தவர் ஓவியர் செல்லம்.
கொடி காட்ட வந்தவன், ரேவதி, தமிழ்நாடு காந்தி நினைவு நிதி
1934-ம் ஆண்டு குற்றாலத்தில் குளிக்க வரும் மகாத்மா காந்தி, அங்குத் தாழ்த்தப் பட்டவர்கள் குளிக்கத் தடை இருப்பதை அறிந்து திரும்பிச் சென்றது ஓர் உண்மைச் சம்பவம். அதன் அடிப்படை யில் எழுதப்பட்ட குழந்தைகளுக்கான கதை.
ஆயிஷா, இரா.நடராசன், புக்ஸ் ஃபார் சில்ரன்
அறிவியல் மனப் பான்மை தொடர்பாக உத்வேகம் ஊட்டும் ஆயிஷா என்று பள்ளிச் சிறுமியை அடிப்படையாகக் கொண்ட புகழ்பெற்ற கதை.
இருட்டு எனக்குப் பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்), ச. தமிழ்ச்செல்வன், அறிவியல் வெளியீடு
குழந்தைகளுக்கு அறிவியல், வரலாறு, சமூகம் சார்ந்து புதிய பார்வையுடன், எளிய முறையில் புரிதலை ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்ட எட்டு கட்டுரைகளைக் கொண்ட நூல்.
10 மொழிபெயர்ப்புப் புத்தகங்கள்
அப்பா சிறுவனாக இருந்தபோது, அலெக்சாந்தர் ரஸ்கின் (நா. முகமது செரீபு), புக்ஸ் ஃபார் சில்ரன்
ஒவ்வொருவரும் சிறு பிள்ளைகளாக இருந்தபோது செய்த சேட்டைகள், அட்டகாசங் களைச் சிரிக்கச் சிரிக்கத் திரும்பப் படிப்பதற்கு வாய்ப்பளிக்கும் நூல்.
குட்டி இளவரசன், அந்த்வான் து செந்த் எக்சுபெரி, வெ.ஸ்ரீராம் - ச. மதனகல்யாணி, க்ரியா வெளியீடு
உலகப் புகழ்பெற்ற, கோடிக்கணக்கானோரால் வாசிக்கப்பட்ட இந்த நூல் குழந்தைகளுக்கான நூலாகப் போற்றப்படுகிறது. குழந்தைகளின் உலகுக்கே உரிய அற்புதங்களும் ஆச்சரியங்களும் நிரம்பிய நூல்.
நீச்சல் பயிற்சி, ரஷ்யச் சிறார் எழுத்தாளர்கள் (தமிழில்: சு.ந. சொக்கலிங்கம்), என்.சி.பி.எச். வெளியீடு
பல்வேறு ரஷ்ய எழுத்தாளர்கள் எழுதிய குழந்தை களுக்கான இந்தக் கதைகள் இன்றைக்கும் சிறிதளவுகூடச் சுவாரசியம் குன்றாமல் உள்ளன.
ஆலிஸின் அற்புத உலகம், லூயி கரோல் (எஸ். ராமகிருஷ்ணன்), வம்சி வெளியீடு
முயலின் வளைக்குள் சென்று ஒரு திரவத்தைக் குடித்துச் சிறிய உருவைப் பெறும் ஆலிஸ், பல்வேறு ஆச்சரியங்கள் நிறைந்த உலகுக்குள் உலவுகிறாள். மாயாஜாலக் கதைகளில் உச்சம் தொட்ட புத்தகம் இது.
வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம், எஸ்.சிவதாஸ் (ப. ஜெயகிருஷ்ணன்), அறிவியல் வெளியீடு
உயிரினங்களைப் பற்றியும், அவற்றின் வாழ்க்கை பற்றியும் நாம் அறிந்ததும் புரிந்துகொண்டதும் குறைவு. இந்தப் புத்தகத்துக்குள் புகுந்து வெளிவரும்போது, எல்லா உயிரினங்களையும் நாம் நேசிக்க ஆரம்பித்துவிடுவோம்.
சாரி பெஸ்ட் ஃபிரெண்ட், ஆங்கிலச் சிறார் எழுத்தாளர்களின் கதைகள் (தமிழில் குமரேசன்), புக்ஸ் ஃபார் சில்ரன்
ஸாய் விட்டேகர், கீதா ஹரிஹரன், ஷாமா ஃபதேஅலி, போலி சென் குப்தா போன்ற புகழ்பெற்ற ஆங்கிலச் சிறார் எழுத்தாளர்களின் முக்கியமான கதைகளின் தொகுப்பு.
கானகத்துக் கீதங்கள், ஜித் ராய் (கு.ராஜாராம்), நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு
காடுகள், உயிரினங்களைப் பற்றி மிக எளிமையாகவும், அறிவியல்பூர்வமாகவும் விளக்கி இயற்கையின் உன்னதத்தைக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கும் நூல்.
பெனி எனும் சிறுவன், கிகோ புளூஷி, (யூமா வாசுகி), புக்ஸ் ஃபார் சில்ரன்
புறஉலகைப் பற்றி பெரிதாக அறியாத நகரத்துச் சிறுவனாக இருக்கும் பெனி, தன் மாமாவின் கிராமத்துக்குச் சென்று திரும்பும்போது, முற்றிலும் மாறுபட்ட ஒருவனாக இருக்கிறான். குழந்தைகளின் மனவோட்டத்தை வெளிப்படுத்தும் நாவல்.
புத்தகப் பரிசுப் பெட்டி, 15 மலையாள ஓவியக் கதைப் புத்தகங்கள், தமிழில்: உதயசங்கர், புக்ஸ் ஃபார் சில்ரன்
காலம் காலமாக நம்மிடையே புழங்கி வரும் கதைகளும் நம்மைச் சுற்றியுள்ள காக்கா, அணில், பூனை, நாய், குரங்கு, யானை போன்றவற்றைப் பற்றியும் கருத்தைக் கவரும் ஓவியங்களைக் கொண்ட 15 புத்தகங்களின் தொகுப்பு.
கனவினைப் பின்தொடர்ந்து, த.வெ.பத்மா (ஜெ. ஷாஜகான்), எதிர் வெளியீடு
நம் மறந்துவிட்ட, அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய பல்வேறு வரலாற்று செய்திகளைக் கதைபோலச் சுவாரசியமாகத் தரும் நூல்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive