கல்வி கற்பிக்கும் பணி அடுத்த தலைமுறையினரைச் செதுக்கும் அற்புதமானப்
பணியாகும். அதுவும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி போதிப்பது என்பது ஒரு
கட்டடத்தின் அடித்தளத்தை வலுவாக அமைப்பதற்கு இணையானது. இருபது ஆண்டுகளுக்கு
மேலாக மாணவர்களுக்குச் சிறப்பான முறையில் கல்வி கற்பிக்கும்
ஆசிரியர்களுக்கான நல்லாசிரியர் விருது வழங்கி கெளரவிக்கிறது மத்திய அரசு.
கற்பிக்கும்
முறைகளில் பல மாற்றங்கள் நிகந்துவருகின்றன. தகவல் தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்தி மாணவர்களுக்கு தெளிவாக கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்களுக்கான
I.C.T (Information and Communication Technology) விருதினை மத்திய அரசு
ஆண்டுதோறும் அளித்துவருகிறது. அந்த விருதுக்கு ஜூலை 31க்குள் விண்ணப்பங்கள்
வரவேற்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2012 ஆம் ஆண்டுக்கான I.C.T விருதினைப் பெற்றவர் சத்தியமங்கலம், அரசு
மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் ஶ்ரீ.திலீப். ஆங்கில உச்சரிப்புக்கான
பொனடிக்ஸ் ஆன்ட்ராய்டைப் பயன்படுத்தியது, மின் அகராதியைப் பயன்படுத்தி
மாணவர்களின் ஆங்கில வளத்தைப் பெருக்கியது, ஆங்கில மொழியைச் சரளமாக பேசும்
வெளிநாட்டு மாணவர்களோடு தம் பள்ளி மாணவர்களை இணையம் வழியே உரையாடச் செய்தது
உள்ளிட்ட பணிகளுக்காக இந்த விருதினைப் பெற்றார். I.C.T விருது குறித்த
மேலதிக தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் திலீப்.
I.C.T (Information and Communication Technology) விருது: இந்திய அரசின்
மனிதவளத் துறை அமைச்சகத்தின் கீழ் தரப்படும் விருது இது. பள்ளிகளில்
கற்பித்தல் முறைகளில் தொழில்நுட்பத்தைச் சிறப்பாக பயன்படுத்தும்
ஆசிரியர்கள் இந்த விருதின் மூலம் கெளரவிக்கப்படுகிறார்கள்.
மாநிலம்: இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு
வழங்கப்படும் இந்த விருது, ஒரு மாநிலத்திற்கு அதிக பட்சம் மூன்று
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.
தேர்தெடுக்கும் முறை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் ஐ.சி.டி
பிரிவுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். இந்த விருதுக்கு
விண்ணபிப்பவர்கள் கணினி ஆசிரியராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தொழில்
நுட்பத்தைக் கொண்டே ஏதேனும் ஒரு வகையில் மாணவர்களின் கற்றலுக்கு உறுதுணையாக
இருந்தாலே போதும். செல்போன் அல்லது டேப்லெட் ஆகியவற்றைப் பயன்படுத்தி
கற்பிப்பவராகக்கூட இருக்கலாம். தொழில்நுட்பம் கொண்டு புதுமையான முறையில்
கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும்,
நல்லாசிரியர் விருதுபோல 20 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் எனும்
விதியும் கிடையாது. ஆசிரியர்களிடமிருந்து பெறப்படும் விண்ணபங்களில் இருந்து
மாவட்ட கல்வி அதிகாரிகளின் தேர்வின்படி ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும்
அதிகபட்சம் ஐந்து ஆசிரியர்கள் பரிந்துரைக்கப்படுவார்கள். அதன்படி, அனைத்து
மாவட்டங்களுக்கும் சேர்ந்து 65 முதல் 100 ஆசிரியர்கள்
பரிந்துரைக்கப்படுவர்.
மாவட்ட அளவில் பரிந்துரைக்கப்பட்டவர்களை மாநில அளவிலான அதிகாரிகள்
சோதித்து, அவர்களிலிருந்து ஆறு ஆசிரியர்களை மட்டும் தேர்ந்தெடுப்பார்கள்.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் புராஜெக்ட்டினை குறுந்தகடு
(C.D) மற்றும் புத்தக வடிவிலும் N.C.R.T (National Council of Educational
Research and Training - தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு)
க்கு பரிந்துரை செய்வார்கள்.
திலீப்
ஒவ்வொரு மாநிலத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கும் புராஜெக்ட்டினை NCERT
குழு ஆராயும். அவற்றிலிருந்து ஒரு மாநிலத்திற்கு சிறந்த மூன்று
புராஜெக்டினைத் தேர்ந்தெடுக்கும். ஒருவேளை ஒரு மாநிலத்தில் சிறந்த மூன்று
புராஜெக்ட்டுகள் இல்லையெனில் ஒன்று அல்லது இரண்டினை மட்டும்
தேர்ந்தெடுக்கும். அதுவும் இல்லையெனில் அந்த ஆண்டு அந்த மாநிலத்திற்கு இந்த
விருதுகான புராஜெக்ட் ஏதும் தேர்ந்தெடுக்காத சூழலும் ஏற்படலாம்.
NCERT குழுத் தேர்வு செய்த புராஜெக்ட்டினை மனிதவளத் துறை மேம்பாட்டு
அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கும். அங்கு, தேர்ந்தெடுக்கப்படும்
புராஜெக்ட்டினைச் செய்த ஆசிரியர்களே ICT விருதினைப் பெறுவார்கள்.
பரிசுகள்: I.C.T விருது பெறும் ஆசிரியர்களுக்கு மடிகணினி (Laptop) ஒன்று, வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.
பரிசளிக்கும் முறை: ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதியன்று குடியரசுத்
தலைவர் I.C.T விருதினை அளிப்பார். அதற்கு முதன்நாள் பாரத பிரதமர்
விருதுபெற்ற ஆசிரியர்களுக்கு விருந்தளிப்பார்.
இந்திய அளவில் தமிழ்நாடுதான் அதிக I.C.T விருதினைப் பெற்ற ஆசிரியர்களைக் கொண்ட மாநிலமாகும்.
இந்த விருது 2010 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. 2010 மற்றும் 2011
ஆம் ஆண்டுக்கான விருதினை தமிழ்நாட்டிலிருந்து சித்ரா, கோகிலா, பெர்ஜின்
ஆகிய ஆசிரியர்கள் பெற்றனர். 2012 ஆம் ஆண்டு, ஶ்ரீ.திலீப் (விழுப்புரம்)
குளோரி ரோசலின் ஆகியோர் பெற்றனர். 2013 ஆம் ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த
யாருக்கும் வழங்கப்பட வில்லை. 2014 ஆம் ஆண்டு, என்.அன்பழகன் (காஞ்சிபுரம்)
2015 ஆம் ஆண்டு தருமராஜ் (ஊட்டி), எம்.விஜயகுமார் (விழுப்புரம்) ஆகியோரும்
பெற்றனர்.
ஆசிரியர்களின் அர்ப்பணிப்புமிக்க பணிக்கு இதுபோன்ற அங்கீகாரங்கள் ஊட்டச்சத்தாக விளங்கட்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...