நம் காதுகளை நிறைக்கும் குயிலின் இன்னிசையே ‘குக்கூ’. குழந்தைகள் மனதில் அந்த இனிமையை உணர வைப்பதுதாம் குக்கூ காட்டுப்பள்ளியின் நோக்கம்...ஈரோடு அரச்சலூரை சேர்ந்த சிவராஜ்..
இவரது நண்பர்கள் பீட்டர், ராஜாராம், அழகேஸ்வரி என இந்த நட்பு வட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரங்கள் இணைய 'குக்கூ' பலப்பட்டது. ஒவ்வொருவரும் அவரவர் வாழும் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு ஓவியம், நாடகம் பயிற்சிப் பட்டறைகள், சிறந்த ரோல் மாடல் மனிதர்களை அறிமுகம் செய்வது..என குக்கூ தனது பயணத்தை துவங்கியது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள நெல்லிவாசல் மலை கிராமத்தில் இவர்கள் நடத்திய நான்கு நாள் பயிற்சிப் பட்டறையில்... மலைக்கும் குழந்தைகளுக்கும் உள்ள மிக நெருங்கிய தொடர்பை புரிய வைத்தார்கள். இதுதான் குக்கூ தன்னார்வலர்களின் மனதில் காட்டுப் பள்ளிக்கான விதை விட்ட நேரம். மேற்கொண்டு பேசுகிறார் காட்டுப் பள்ளியின் தன்னார்வலரான அழகேஸ்வரி.
''தற்போது பள்ளிகளில் புத்தகம், மதிப்பெண் என்பதை நோக்கியே என்று குழந்தைகளை பயணிக்க அனுமதிப்பதால் அவர்களின் அறிவுத் தேடலுக்கான வாய்ப்புகள் குறைகிறது. விளைவு... அவர்கள் மனதில் தாழ்வுமனப்பான்மையை விதைக்கிறோம். என்ன படித்தோம்? எப்படி வாழப்போகிறோம்? என்ற பதைபதைப்புடனான கேள்விகளுடன் பள்ளியை விட்டு வெளியில் வருகின்றனர் குழந்தைகள். அரசு பள்ளியை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் குறைந்த மதிப்பெண்ணுடன் வெளியில் வரும் காரணத்தால் கூலி ஆட்களாக மாற்றப்படுகின்றனர். இயல்பில் அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் திறமை வெளிப்படுத்த வாயப்பளிக்கப்படுவதில்லை. அவர்கள் மீது முட்டாள்கள் என்று முத்திரை குத்துவது எவ்வளவு அபத்தம். இதற்கான விடையைத் தேடத் துவங்கியதுதான் குழந்தைகள் மனதில் நாங்கள் பதிய காரணம்.
குக்கூவுக்கு என்று தலைமை, முதன்மை போன்ற பொறுப்பாளர்கள் இல்லை. ஒத்த கருத்தில் இணைபவர்கள், குழந்தைகளின் மகிழ்வுக்காக பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் எங்களோடு கரம் கோர்த்தனர். அப்படிதான் ஜவ்வாது மலை அடிவாரத்தில் புலியானூர் கிராமத்தின் ஐந்தரை ஏக்கர் தரிசு நிலத்தில் குக்கூ காட்டுப் பள்ளி உருவாகியது. இயற்கையை காயப்படுத்தாமல் பள்ளிக்கான கட்டடங்கள் அமைக்க முடிவு செய்தோம். இளம் ஆர்கிடெக்டுகளுடன் இணைந்தோம். இந்திய அளவில் உள்ள குழந்தைகள் பலரிடமும் இருந்து பெற்ற ஒரு பிடி மண்ணால் அஸ்திவாரத்தை எழுப்பினோம்.
அந்த நிலத்தில் உள்ள மண்ணில் செங்கற்களை உருவாக்கி சுடாமல் வெயிலில் காய வைத்து கட்டடம் கட்டும் பணிகள் ஆரம்பித்தது. குழந்தைகள் தங்கிக் கொள்ள சிறு குடில் அமைப்புகள் உருவாக்கப்பட்டது. பழமையான கோயில்கள், சிதலம் அடைந்த கட்டடங்கள், உதவாத தூண்கள், சேர்கள், நிலைப்படிகள், சுரைக்காய், தூக்கணாங்குருவிக் கூடு, பறவையின் உதிர்ந்த சிறகு எல்லாம் இணைந்து அறைகளை அலங்கரித்தது.
மீதமிருந்த வெற்று நிலத்தில் மரக்கன்றுகள் நடுவதும், கட்டடப் பணிகளும் நடந்தது. உபயோகமற்ற பொருட்களில் இருந்து விளையாட்டுப் பொருட்கள் உருவாக்குவது, பேப்பர் எப்படி உருவாகிறது, வட்டப்பாத்திகளில் காய்கறித் தோட்டம் போடுவது என பயிற்சி முகாம்கள் நடத்தினோம். வானம் பார்த்த பூமியில் பறவைகளோடும், நாய்க்குட்டிகளோடும் குழந்தைகள் விளையாடலாம். பூனைக்குட்டிகளை மடியில் அமர்த்தி நலம் விசாரிக்கலாம். ஓடையில் குளிக்கலாம். குளித்த ஈரத்தை வெயிலில் உலர்த்தலாம். ஓடிப்பிடித்து விளையாடலாம். இசைக்கலாம்... குழந்தைகள் தனக்கு பிடித்ததெல்லாம் செய்தபடியே வாழ்வைக் கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பளித்தால் எந்த உயரத்தையும் தொட முடியும். மாற்றுத் திறன் குழந்தைகளோடு பெற்றோரும் இந்த பயிற்சி பட்டறைகளில் குழந்தைகளோடு குழந்தைகளாகின்றனர். இப்படியொரு வாய்ப்பை நம் குழந்தைகளுக்கு வழங்கினோம்.
வழக்கமான அட்மிஷன், அட்டண்டன்ஸ் என எந்த அழுத்தமும் இங்கு உள்ள குழந்தைகளுக்கு இல்லை. இந்தப் பள்ளியை துவங்கி வைத்து குழந்தைகளிடம் ஒப்படைத்தார் அரவிந்த் குப்தா.பல்வேறு தளங்களில் இயங்கி கொண்டிருக்கும் தன்னார்வலர்களே இங்கு வந்து பயிற்சியளிக்கிறார்கள். குழந்தைகளுக்கு இங்கு வாழ கற்றுக் கொடுக்கப்படுகிறது" என்று செவிகளில் மகிழ்ச்சியை இறைக்கிறார் அழகேஸ்வரி.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...