ஏப்ரல் முதல் மார்ச் வரை நிதியாண்டு என்று இருப்பதை ஜனவரி முதல் டிசம்பர் வரை என மாற்ற வேண்டும் என்ற கருத்தை பிரதமர் மோடி முன் வைத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற மாநில முதலமைச்சர்களுடனான நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி இந்த யோசனையை தெரிவித்தார்.
இந்தியாவில் நிதியாண்டு கடந்த 150 வருடங்களுக்கு மேலாக நிதியாண்டு ஏப்ரல் முதல் தேதி ஆரம்பித்து மார்ச்சில்தான் முடிகிறது. பிரிட்டனில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த நிதியாண்டு முறையை அதன் காலனி நாடுகளிலும் அவர்கள் நடைமுறைப்படுத்தினர். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகும் நாம் அதே முறையைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். இந்த நிலையில் இந்த முறையை மாற்றி நிதியாண்டை
ஜனவரியில் தொடங்கி டிசம்பரில் முடிப்பதால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்னென்ன?
உலகின் வளர்ந்த நாடுகள் பலவும் ஜனவரி-டிசம்பர் காலத்தைத்தான் நிதியாண்டாக கடைப்பிடித்து வருகின்றன. உலகம் முழுவதும் 156 நாடுகள் இந்த நடைமுறையைப் பின்பற்றுவதோடு, உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களும் ஜனவரி-டிசம்பர் காலத்தைத்தான் நிதியாண்டாகப் கடைப்பிடிக்கின்றன.
தற்போது நாம் உலகமயமாக்கல் காலகட்டத்தில் இருக்கிறோம். வளர்ச்சியடைந்த நாடுகள் இந்தியாவில் முதலீடு அல்லது தொழிலைத் தொடங்கி நடத்தும் போது, அவர்களின் நிதியாண்டுக்கணக்கும் நமது நிதியாண்டுக்கணக்கும் ஒரே மாதிரியாக இருப்பது வசதி. எனவே இந்த மாற்றம் சரிதான் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் சிலர்.
விவசாயத்துறைக்கும் இந்த நிதியாண்டு மாற்றம் உதவும் என்கிறார்கள்.
ஜனவரியில் நிதியாண்டு துவங்கும் பட்சத்தில் மத்திய அரசு நவம்பரில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வாய்ப்பிருக்கிறது. நவம்பரில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது, தென்மேற்குப் பருவமழை சீசன் முடிந்து காரிப் பருவ விளைச்சல் பற்றித் தெரிந்திருக்கும். அடுத்து வரும் ரபி பருவ விளைச்சல் பற்றி ஒரு முன்மதிப்பீடையும் செய்ய முடியும். இந்த அடிப்படையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யலாம். இது விவசாயத் துறைக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் குறித்த கணக்கீடுக்கும் பயன்படும் என்கிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...