பாரதியார் பல்கலையில் ஆண்டுக்கணக்கில்,
பதிவாளர் உட்பட ஒன்பது முக்கிய பதவிகள் நிரப்பப்படாமல், பேராசிரியர்களுக்கு
கூடுதல் பொறுப்பாக திணிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் அன்றாடப் பணிகள்
பாதிக்கப்பட்டுள்ளன. கோவை பாரதியார் பல்கலையில், பேராசிரியர் பணியிடங்களை நிரப்பியது தொடர்பான சர்ச்சை, இன்று வரை தொடர்ந்து வருகிறது.
அவசரகதியில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும்
பல்கலை நிர்வாகம், முக்கிய பதவிகளுக்கான பணியிடங்களை பல ஆண்டுகளாக
நிரப்பாமல் விட்டுள்ளதே, பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக
பேராசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பல்கலையின் நேற்றைய நிலவரப்படி, பதிவாளர்,
தொலைதுார கல்வி மைய இயக்குனர், கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி,
சி.பி.பி., பிரிவின் டீன், மேலாண்மை பிரிவின் இயக்குனர், சி.சி.ஐ.ஐ.,
பிரிவின் இயக்குனர், தேர்வு கட்டுப்பாட்டு பிரிவின் ஆராய்ச்சி
ஒருங்கிணைப்பாளர், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர், மக்கள் தொடர்பு அதிகாரி
உள்ளிட்ட முக்கிய பதவிகள் பேராசிரியர்கள் வசம் உள்ளன.
கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள அனைவரும்,
பேராசிரியர்கள் என்பதால், அனைத்து அதிகாரமும் துணைவேந்தரிடமே உள்ளது. இதன்
காரணமாகவே, பல்வேறு முறைகேடுகள் எளிதாக மூடி மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.
இதுகுறித்து, பல்கலை நிர்வாக அலுவலர் ஒருவர்
கூறுகையில், ’பல்கலையின் முக்கிய பொறுப்புகளை, பேராசிரியர்கள் வசம்
ஆண்டுக்கணக்கில் ஒப்படைத்துள்ளனர். பேராசிரியர்கள் அனைவரும் துணைவேந்தரின்
முழுமையான அதிகாரத்திற்கு கட்டுப்பட்டவர்கள்.
’நிரந்தர அதிகாரிகள் அந்தந்த பதவியில்
இருந்தால், முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இயலும். பொறுப்பு
அதிகாரிகளாக செயல்படும் பேராசிரியர்கள், முறைகேட்டை எதிர்க்க நினைத்தாலும்
கேள்வி கேட்க இயலாது’ என்றார்.
இதுகுறித்து, பல்கலை துணைவேந்தர் கணபதி
கூறுகையில், ”பதிவாளர்கள் உள்ளிட்ட சில பணியிடங்கள் சிண்டிகேட் கூட்டத்தில்
வைத்து நிரப்ப அனுமதி பெறப்பட்டுள்ளது.
விரைவில், இச்செயல்பாடுகள் துவக்கப்படும்.
மக்கள் தொடர்பு அதிகாரி பணியிடங்கள் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்கள்
நிரப்பும் பொழுது நிரப்பப்படும்,” என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...