இந்தியாவின் போக்குவரத்து வரலாற்றை கவுரவிக்கும் விதமாக, சிறப்பு நினைவு தபால் தலைகளை, தபால் துறை வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளுக்கு சவால் விடும் அளவுக்கு, ஆட்டோ மொபைல் துறையில் இந்தியா உயர்ந்துள்ளது. போக்குவரத்து துறையில், இந்தியா பெற்ற வளர்ச்சியை கொண்டாடும் விதமாக, தபால் துறை, 20 சிறப்பு நினைவு தபால் தலைகளை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தபால் தலைகளும், ஆரம்ப காலத்தில் இருந்து, தற்போது வரை கண்ட
போக்குவரத்து வளர்ச்சியை உணர்த்தும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளன.
அந்த காலத்தில், போக்குவரத்து சாதனங்கள், மக்களால் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன, அதன் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பது குறித்தும், அதில் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஆதி மனிதர்கள் பயன்படுத்திய பல்லக்கு, மிருகங்களை கொண்டு ஓட்டப்பட்ட கட்டை வண்டி, மனிதனால் முற்றிலும் இயக்கப்பட்ட ரிக் ஷாக்கள், நாகரிகம் வளர்ந்த காலத்தில் ஓடத் துவங்கிய வின்டேஜ் கார்கள், தற்போதைய மெட்ரோ ரயில் வரை அனைத்தும், தபால் தலைகளில் இடம் பெற்றுள்ளன.
இந்த தபால் தலைகளை, ஹரியானா மாநிலத்தில் உள்ள பாரம்பரிய போக்குவரத்து அருங்காட்சியகத்தின் உதவியுடன், தபால் துறை வெளியிட்டுள்ளது. இத்துடன், போக்குவரத்து குறித்த வரலாற்று செய்திகள் மற்றும் படங்கள், மினியேச்சர் தாள்கள், கையேடு என, அனைத்து வடிவிலும் வெளியிடப்பட்டுள்ளன.
கோவை தபால் தலை சேகரிப்பு மைய உதவி தபால் அலுவலர் அனிதா கூறியதாவது:
பலரும் அறிந்திராத, போக்குவரத்து வளர்ச்சியை, தபால் துறை கலைத்துவத்தோடு வெளியிட்டுள்ளது. நாட்டில் உள்ள, 81 தபால் தலை சேகரிப்பு மையங்களிலும், இவை விற்பனைக்கு உள்ளன. விரும்புவோர், www.epostoffice.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக வாங்கிக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...