உத்தர பிரதேசத்தில், அரசு அலுவலகத்தில், அமைச்சர் அதிரடி சோதனை நடத்திய போது, ஏராளமான ஊழியர்கள் பணிக்கு வராததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அவர்களுக்கு, ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்யும்படி, அமைச்சர் உத்தரவிட்டார்.
எச்சரிக்கை:
உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக, சமீபத்தில் பதவியேற்றார். பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் ஆதித்யநாத், 'அரசு ஊழியர்கள், ஒரு நாளில், 18 முதல், 20 மணி நேரம் உழைக்க வேண்டும்; இல்லாவிட்டால், வேலையை விட்டு செல்லலாம்' என, எச்சரிக்கை விடுத்திருந்தார்.
திடீர் சோதனை:
இந்நிலையில், விவசாயத் துறை அமைச்சர் சூர்யபிரதாப் ஷாஹி, தன் துறை அலுவலகங்களில் நேற்று, திடீர் சோதனை நடத்தினார். அப்போது, பெரும்பாலான ஊழியர்கள், வேலை துவங்கும் நேரமான, காலை, 10:00 மணி ஆன பின்னும், பணிக்கு வராததை பார்த்து, அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார். பின், அலுவலக கதவை மூடச் செய்த அவர், தாமதமாக வந்த ஊழியர்கள் அனைவருக்கும், ஒரு நாள் சம்பளத்தை பிடிக்கும்படி உத்தரவிட்டார்.
உத்தரவு:
அதேபோன்று, சிறுபான்மையினர் விவகாரத்துறை இணைஅமைச்சர் மொஹ்ஷின் ராஸா, அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினார். பலர், குறித்த நேரத்தில் வேலைக்கு வரவில்லை. இதனால், அமைச்சர் கடும் கோபம் அடைந்தார். சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, உயரதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
விடுமுறை மயக்கமா?
அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொண்ட விவசாயத்துறை அமைச்சர் சூர்யபிரதாப் ஷாஹி, நிருபர்களிடம் கூறியதாவது: அரசு ஊழியர்கள், முந்தைய அரசின் அலட்சியமான நடவடிக்கைகளால், வேலை செய்யாமல் மெத்தனமாக இருந்து வந்துள்ளனர். அவர்கள், அந்த விடுமுறை மயக்கத்தில் இருந்து மீண்டு, வெளிவர வேண்டும். அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை மிகவும் குறைவாக உள்ளது. இது, எந்தவிதத்திலும் நியாயம் அற்றது. குறித்த நேரத்தில் அனைத்து பணிகளையும் ஊழியர்கள் முடிக்க வேண்டும்; எந்த வேலையையும் நிலுவை வைக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...