Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தகுதி தேர்வு அரசாணைக்கு முன்பு ஏற்பட்ட காலிப்பணியிடம்: ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் கல்வித்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

தகுதி தேர்வு கட்டாயம் என்ற அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பே காலிப்பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர் நியமனத்துக்கு கல்வித்துறை ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பதவி இடம் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி காலியானது. இந்த பதவியை நிரப்ப அதே ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி பள்ளி நிர்வாகம், உதவி தொடக்கப்பள்ளி அதிகாரிக்கு கோரிக்கை மனு அனுப்பியது. இதையடுத்து அந்த பதவியை நிரப்ப, உதவி தொடக்கப்பள்ளி அதிகாரி கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து வேலைவாய்ப்பு மையத்தில் தகுதியான நபர்களின் பெயர் பட்டியல் கேட்கப்பட்டன. பள்ளி நிர்வாகமும் காலிப்பணியிடம் குறித்து பொது விளம்பரம் வெளியிட்டது. இதன்பின்னர் நடந்த நேர்முகத் தேர்வில், சரவணபாபு என்ற ஆசிரியர் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி தேர்வு செய்யப்பட்டார். அன்றே அவர் பதவியையும் ஏற்றுக்கொண்டார்.
ஒப்புதல் அளிக்கவேண்டும்.

இவரது பணி நியமனத்துக்கு ஒப்புதல் கேட்டு, மாவட்ட தொடக்கல்வி அதிகாரிக்கு, பள்ளி நிர்வாகம் கடிதம் அனுப்பியது. ஆனால், '2000-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, பள்ளிக்கூடத்தில் ஆண், பெண் விகிதாச்சாரம் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை என்று கூறி, அந்த பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க மாவட்ட அதிகாரி மறுத்து விட்டார்.இதை எதிர்த்து பள்ளி நிர்வாகம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரியின் உத்தரவை ரத்து செய்தார். ஆசிரியர் பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

தகுதி தேர்வு
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தொடக்கக் கல்வி இயக்குனர், நாகப்பட்டினம் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல், 'மத்திய அரசு கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தகுதி தேர்வு மூலமே ஆசிரியர்கள் நியமனம் நடைபெறவேண்டும் என்று தமிழக அரசு 2011-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. இதை தனி நீதிபதி கவனிக்கத் தவறிவிட்டார். எனவே, அவரது உத்தரவை ரத்து செய்யவேண்டும்' என்று கூறியிருந்தார்.

நாடவில்லை
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எஸ்.என்.ரவிசந்திரன், 'தகுதி தேர்வு மூலமே ஆசிரியரை தேர்வு செய்யவேண்டும் என்ற அரசாணை 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம்தான் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆனால், இந்த காலிப்பணியிடம் அதற்கு முன்பே ஏற்பட்டு, அந்த இடத்தை நிரப்ப அரசிடம் அனுமதிக்கேட்டு அதே ஆண்டு அக்டோபர் மாதமே பள்ளி நிர்வாகம் மனு கொடுத்து விட்டது' என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-ஆசிரியர் சரவணபாபுவின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்காததை எதிர்த்துத்தான் இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வு மூலம், இவரை தேர்வு செய்யவில்லை என்று இந்த ஐகோர்ட்டை நாடவில்லை.

நிரப்பலாம்

அதுமட்டுமல்லாமல், ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்று அரசு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பே, ஏற்பட்ட காலியிடத்தில்தான் ஆசிரியரை பள்ளிநிர்வாகம் நியமித்துள்ளது.மேலும், ஆண், பெண் ஆசிரியர்கள் விகிதாச்சாரம் தொடர்பாக பக்தவச்சலம் என்பவர் தொடர்ந்த வழக்கில், பெண்களை கொண்டு நிரப்பவேண்டிய அரசு பணியிடத்துக்கு தகுந்த பெண்கள் கிடைக்கவில்லை என்றால், ஆண்களை கொண்டு நிரப்பலாம்' என்று இந்த ஐகோர்ட்டு ஏற்கனவே ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.எனவே, சரவணபாபு நியமனத்துக்கு தொடக்கக் கல்வித்துறை ஒப்புதல் அளிக்கவேண்டும். தனி நீதிபதியின் உத்தரவில் எந்த குறைபாடுகளும் இல்லை. அவரது உத்தரவை உறுதி செய்கிறோம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.




1 Comments:

  1. Please send or publish that judgment order copy sir...
    Very useful for us...

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive