Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்குக் காத்திருக்கும் உயர் கல்வி மற்றும் தொழிற் பயிற்சி வாய்ப்புகள்.

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்குக் காத்திருக்கும் உயர் கல்வி மற்றும் தொழிற் பயிற்சி வாய்ப்புகள்.
நாளுக்கு நாள் பல உயர் படிப்புகள் அறிமுகமாகிக்
கொண்டே இருக்கின்றன. வேலைவாய்ப்புக்காகவும், பிடித்த துறையில் அறிவு விருத்திக்காகவும் அந்தப் படிப்புகளில் தனக்கானதைத் தேர்வு செய்துகொள்வது மாணவர்களின் கடமை. பிளஸ் 1 பள்ளிப்படிப்பா, தொழிற்கல்வியா, வேலைவாய்ப்புக்கான சிறப்பு பயிற்சிகளா, போட்டித் தேர்வுகளுக்கான முயற்சியா என்பதை தேடிக் கண்டுபிடித்துத் தீர்மானிக்கலாம் வாங்க!
இதற்கு உதவும் வகையில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில், பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான வழிகாட்டிக் கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் அவசியமானவற்றை இங்கே பார்ப்போம்.
மேல்நிலைப் பள்ளிக் கல்வி
பத்தாம் வகுப்பு முடித்தவர்களில் பெரும்பாலானவர்களின் விருப்பத் தேர்வாக இருப்பது, மேல்நிலைப் பள்ளிக் கல்வியான பிளஸ் 1. அதிலும் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய முதல் 2 பாடப் பிரிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கிறார்கள். காரணம், பெரும்பாலான பெற்றோரின் கனவு, மருத்துவம் அல்லது பொறியியல் படிப்பாகவே இருந்துவருகிறது.
வணிகவியல், புள்ளியியல், பொருளாதாரம், கணக்கியல், வரலாறு, புவியியல், வணிகக் கணிதவியல், அறவியல் மற்றும் இந்தியப் பண்பாடு, அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடங்களை உள்ளடக்கிய அடுத்த கட்ட பாடப் பிரிவுகள் போதிய கவனம் பெறுவதில்லை. ஆனால் கல்லூரி அளவில் இந்தப் பாடப் பிரிவுகள் மட்டுமில்லாமல் அக்கவுண்டன்ஸி, கம்பெனி செகரட்டரிஷிப், காஸ்ட் (Cost) அண்டு மேனேஜ்மெண்ட் அக்கவுண்டிங் ஆகியவற்றில் சேர இதுபோன்ற பிளஸ் 1 பாடப் பிரிவுகள் அடிப்படையாகும்.
நிகரான படிப்பு
இவை அல்லாமல் பிளஸ் 1 தொழிற்கல்விப் பாடப் பிரிவுகளும் உள்ளன. வொகேஷனல் பாடப் பிரிவுகள் எனப்படும் இவற்றில் ஜெனரல் மெஷினிஸ்ட், எலெக்ட்ரிகல் மெஷின்ஸ் அண்டு அப்ளையன்சஸ், சிவில், ஆட்டோ மெகானிக், நர்சிங், டெக்ஸ்டைல்ஸ், ஃபுட் மேனேஜ்மெண்ட் அண்ட் சைல்ட் கேர், அக்ரி, அக்கவுண்டிங் அண்ட் ஆடிட்டிங் உள்ளிட்ட பல்வேறு பிரிவிலான படிப்புகள் உள்ளன. பிளஸ் 1 முதன்மை பாடப் பிரிவுகளில் சேரத் தகுதியான பத்தாம் வகுப்பு மதிப்பெண்களைப் பெறத் தவறியவர்களும், இந்த வொகேஷனல் பாடப் பிரிவுகளில் சேர்ந்து அவர்களுக்கு நிகராக பொறியியல், அக்ரி, இளங்கலை மற்றும் அறிவியல் கல்லூரிப் படிப்புகளில் அசத்தலாம்.
டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ. படிப்புகள்
பிளஸ் 1 சேர்க்கைக்கு நிகராகப் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது, பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புகள். பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், 3 ஆண்டு தொழிற் படிப்பாக இந்த டிப்ளமோ கல்வியைத் தேர்ந்தெடுக்கலாம். தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் மாநில அளவிலான கலந்தாய்வின் மூலமாக இதில் சேரலாம்.
பொறியியல் கல்லூரிப் படிப்பு போன்றே கலந்தாய்வின் மூலம் பாலிடெக்னிக் சேர்க்கை நடைபெறுகிறது. அதனால், பத்தாம் வகுப்பில் சிறப்பான மதிப்பெண் பெற்றவர்கள் அரசு பாலிடெக்னிக்குகளில் சேர்ந்து அதிகச் செலவின்றி டிப்ளமோ படிப்பை முடிக்கலாம். பின்னர் பணிக்குச் செல்லவோ உயர் படிப்புகளை மேற்கொள்ளவோ செய்யலாம். பணித்திறனை அதிகரித்துக்கொள்ள விரும்புவோர் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் ‘அப்ரண்டிஸ்’ எனப்படும் தொழில் பழகுநர் பயிற்சிகளைப் பெறலாம்.
இவை அல்லாமல் டிப்ளமோ தகுதியுடன், நேரடி இரண்டாம் ஆண்டு பொறியியல் கல்லூரிச் சேர்க்கை மூலம் தங்களது பொறியியல் மேற்கல்விக் கனவை நனவாக்கிக் கொள்ளலாம். தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்வி நிலையங்கள் அமைவிடங்கள், அவற்றில் வழங்கப்படும் பாடப்பிரிவு விவரங்களை http://www.tndte.gov.in/ என்ற தமிழகத்தின் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் இணையதளத்தில் அறியலாம்.
ஏகப்பட்ட ஐ.டி.ஐ. பயிற்சிகள்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி நிலை எப்படியாயினும் பரவாயில்லை, வலுவான எதிர்காலத்துக்கு அடித்தளமிட ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி வாய்ப்பளிக்கிறது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் இந்த தொழிற் பயிற்சி நிலையங்களின் சேர்க்கை, மாவட்ட அளவிலான கலந்தாய்வாக நடைபெறுகிறது. 2 ஆண்டு ஐ.டி.ஐ. முடித்தவர்கள் நேரடியாக 2-ம் ஆண்டு பாலிடெக்னிக் படிப்பில் சேரலாம். ஐ.டி.ஐ. பயிற்சியின் நிறைவாக உள்நாடு வெளிநாடு எனப் பரவலான தொழில்துறை பணி வாய்ப்புகளைப் பெறலாம். சம்பாதித்தவாறே பகுதி நேர உயர்கல்விகளைப் பெற்று தகுதியையும், ஊதிய வரம்பை உயர்த்திக்கொள்ளவும் முடியும். மேலதிக விபரங்களை http://skilltraining.tn.gov.in/DET/ என்ற தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
போட்டித் தேர்வுகள்
பத்தாம் வகுப்பு தேர்ச்சியை மட்டுமே கல்வித் தகுதியாகக் கொண்டவர்கள் உரிய வயதுத் தகுதியுடன், மத்திய மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று அரசுப் பணி வாய்ப்புகளைப் பெறலாம். இளநிலை, முதுநிலைப் படிப்புகளை முடித்தவர்களும் இந்த போட்டித் தேர்வுகளில் பங்கேற்பார்கள். என்றபோதும், உரிய பயிற்சி இருந்தால் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கும் பிரகாசமான வாய்ப்பு உண்டு.
# கிராம நிர்வாக அலுவலர் முதற்கொண்டு பல்வேறு பணியிடங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (http://www.tnpsc.gov.in/) போட்டித் தேர்வுகள் வாயிலாகப் பெறலாம்.
# மத்திய அரசின் ரயில்வே பணிக்கு - http://www.indianrailways.gov.in/index_new.htm
# ராணுவத்தில் சேர - https://www.indianarmy.nic.in/
# கப்பற்படையில் இணைய - https://www.indianarmy.nic.in/
# அஞ்சலகப் பணிகளுக்கு - https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx
# மாநில, மத்திய காவலர் பணிகளுக்கு - http://www.tnusrb.tn.gov.in/about_us.htmhttp://www.crpf.nic.in/
பள்ளிப் பாட நூல்கள், நூலகங்கள், இணைய தள வசதிகள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பிலான இலவசப் பயிற்சிகள் ஆகியவற்றின் மூலமாக கிராமப்புறத்தினரும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகலாம்.
தட்டச்சர், சுருக்கெழுத்தர் பயிற்சிகள்
தமிழிலும் ஆங்கிலத்திலும் கீழ் நிலை மற்றும் மேல் நிலைத் தட்டச்சுப் பயிற்சிகளைப் பல தனியார் நிலையங்கள் அளிப்பது அனைவரும் அறிந்ததே. பயிற்சிக்குப் பிறகு தொழில்நுட்பக் கல்வி இயக்கம் நடத்தும் தேர்வின் மூலமாகத் தங்கள் தகுதியை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
தட்டச்சுப் பயிற்சியுடன் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் சிறப்புக் கணினிப் பயிற்சிகளும் சான்றிதழும் பெற்றிருந்தால் அரசுத் துறையின் பல்வேறு தட்டச்சர் பணி வாய்ப்புகளை பெறலாம். இதேபோன்று ஸ்டெனோகிராஃபி எனப்படும் சுருக்கெழுத்து தட்டச்சுப் பயிற்சி மற்றும் பணிவாய்ப்புகளுக்கும் தகுதி பெறலாம். இவை குறித்த கூடுதல் தகவல்களுக்கு http://www.tndte.gov.in/ தளத்தினை நாடலாம்.
பத்தாம் வகுப்பு முடித்தவர்களும் வளமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள உதவும் வகையில், எளிய படிப்புகளும் தொழிற் பயிற்சிகளுக்கான வாய்ப்புகளும் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. அவை அனைத்தையும் அறிய, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தளத்தில் (http://www.tnscert.org/Cgmathsc.html) முழுமையான கையேட்டினை தரவிறக்கம் செய்து பயன்பெறலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive