'நீட்' தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், எங்கே பயிற்சி பெறுவது என தெரியாமல், அரசு பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
வரும் கல்வி ஆண்டில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, தேசிய அளவிலான, 'நீட்' தேர்வில், தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த தேர்வு, அனைத்து மாநிலங்களிலும், மே, 7ல் நடக்கிறது. இதற்கு, விண்ணப்பிப்பதற்கான அவகாசம், நேற்று முன்தினம் முடிந்தது. இந்நிலையில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பல்வேறு தனியார் மையங்களில், 'நீட்' தேர்வுக்கான பயிற்சியை துவக்கி உள்ளனர். ஒரு மாத பயிற்சிக்கு, 20 ஆயிரம் முதல், 35 ஆயிரம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப் படுகிறது.
தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும், நகர, கிராமப்புற மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுமா என, தவித்து வருகின்றனர்.
இது குறித்து பெற்றோர் கூறியதாவது: 'நீட்' தேர்வு தமிழகத்துக்கு வராது என, ஆளும் கட்சி அமைச்சர்கள் கூறி வந்தனர். ஆனால், இதுவரை அதற்கான சட்ட அனுமதியை பெறவில்லை. அதை நம்பி, 'நீட்' தேர்வுக்கு பயிற்சி எடுக்கவில்லை. எனவே, அரசு பள்ளி மாணவர்கள் அதிக சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். பள்ளிக்கல்வித் துறையோ, 'நீட்' தேர்வுக்கு பொறுப்பான சுகாதாரத் துறையோ, அரசு பள்ளி மாணவர்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. 'நீட்' தேர்வுக்கு தயாராக, தமிழக அரசு பயிற்சி தராததால், ஏழை மாணவர்களின், டாக்டராகும் கனவு நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
'நீட்' விண்ணப்பத்தில் பிழையா? : ஏப்., 12 முதல் திருத்தலாம் - 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தோர், சுய விபரங்களை, ஏப்., 12 முதல் திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, இந்த ஆண்டு முதல், தேசிய அளவிலான, 'நீட்' தேர்வு கட்டாயமாகி உள்ளது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஏப்., 5ல் முடிந்தது. இந்நிலையில், விண்ணப்பித்தோரின் சுய விபரங்கள் மற்றும் கூடுதலாக சேர்க்க வேண்டிய விபரங்களை சரி செய்ய, சி.பி.எஸ்.இ., அவகாசம் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, ஏப்., 12ல் வெளியாகும் என, அதிகாரிகள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...