மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளில் நேரடி ஆட்சேர்ப்பு
நடவடிக்கை, கடந்த 2015ஆம் ஆண்டில் 89 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக
மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்களவையில் மத்திய 'பணியாளர்கள், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை’ இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்ட
அறிக்கையில், ‘கடந்த 2015ஆம் ஆண்டில் மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் நேரடி நியமனங்கள் வாயிலாக சுமார் 15,887 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த 2013ஆம் ஆண்டில் 1,51,841 நேரடி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனவே, 2015ஆம் ஆண்டில் மத்திய அமைச்சகங்களில் நேரடி ஆட்சேர்ப்பு நடவடிக்கை 89 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. 2014ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,26,261 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015ஆம் ஆண்டில் 74 அமைச்சகங்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரிவுகளில் வெறும் 8,436 பேர் மட்டுமே நேரடி பணி நியமனம் பெற்றுள்ளனர். ஆனால் கடந்த 2014ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 72,077 ஆகவும், 2013ஆம் ஆண்டில் 92,928 ஆகவும் இருந்தது. எனவே, ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கான பணி நியமனத்தில் 90 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டின் டிசம்பர் மாத நிலவரப்படி, ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கான 92,589 காலியிடங்களில் வெறும் 28,713 (31%) இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மேலும் 2012ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையில் எஸ்.சி. பிரிவில் 20,975 காலியிடங்களும், எஸ்.டி. பிரிவில் 15,874 காலியிடங்களும் மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 20,027 காலியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டது.
அரசுத் துறைகளில் காலியிடங்கள் ஏற்படும்போது, அவை பணி நியமனத்துக்கான விதிமுறைகளின்படி நிரப்பப்படுவதாகவும், ஆட்சேர்ப்பு அமைப்புகளான ஒன்றிய பொதுச்சேவை ஆணையக் குழு மற்றும் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றுக்கு அந்தந்த துறைகள் காலியிடங்கள் குறித்து அறிவித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...