புகை மாசுவை கட்டுப்படுத்த, பாரத் ஸ்டேஜ் எனப்படும் பி.எஸ் - 3
தொழில்நுட்பத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட வாகனங்களை மார்ச், 31ம் தேதிக்கு
பிறகு விற்பனை செய்ய கூடாது; பதிவு செய்ய கூடாது என சுப்ரீம் கோர்ட்
உத்தரவிட்டது, வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி
விட்டது. அவர்களுடன் சேர்ந்து டீலர்களும் பெரும் பாதிப்பை அனுபவித்து
வருகின்றனர்.
பராத் ஸ்டேஜ் எனப்படும் புகை மாசு கட்டுப்பாடு, 2000ம் ஆண்டில் இந்தியாவில்
அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில், ‛இந்தியா - 2000' என அழைக்கப்பட்டது.
பின்னர் பி.எஸ் - 2, பி. எஸ் - 3 என படிப்படியாக அமல்படுத்தப்பட்டு தற்போது
பி.எஸ் - 4 வந்து விட்டது. இந்த விதிமுறைகளின்படி, சாலையில் ஓடும் ஒரு
வாகனம் வெளியிடும் புகை அளவு குறிப்பிட்ட அளவு தான் இருக்க வேண்டும்.
அதற்கு ஏற்ற எரிபொருளை பயன்படுத்த வேண்டும். அதற்கு ஏற்ப இன்ஜின் உள்ளிட்ட
வாகன உதிரிபாகங்களில் மாற்றம் ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
இப்பிரச்னை குறித்த, 7 முக்கிய அம்சங்கள் வருமாறு:
1. எதனால் இப்பிரச்னை ஏற்பட்டது?
பெருநகர்களில் புகை மாசு ஏற்படுவது, சுற்றுசூழல் ஆர்வலர்களுக்கு பெரும்
கவலையை ஏற்படுத்தியது. இதன் பிறகே பாரத் ஸ்டேஜ் விதிமுறைகள்
அமல்படுத்தப்பட்டன. விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு புகை மாசு ஓரளவுக்கு
கட்டுப்படுத்தப்பட்டது.
2. இந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் சொன்னது என்ன?
பி.எஸ் - 3 வாகனங்களை பதிவு செய்வதை ஏப்ரல், 1ம் தேதி முதல் நிறுத்த
வேண்டும் என, மார்ச், 29ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. பெரும்பாலான
கார் உற்பத்தி நிறுவனங்கள் கடந்த ஆண்டு முதலே பி.எஸ் - 4
தொழில்நுட்பத்திற்கு உட்பட்ட கார்களை தயாரிக்க தொடங்கி விட்டனர். ஆனால்,
இந்த உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டது, இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள்
தான். பி. எஸ் - 4 இரு சக்கர வாகனங்களை தயாரிப்பதில் பஜாஜ் நிறுவனம் தான்
முதலில் ஆர்வம் காட்டியது. இதை வெளிப்படையாக, பிப்.,15ம் தேதி அறிவித்தது.
ஆனால், மற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்த விஷயத்தில் சற்று
அலட்சியம் காட்ட, சுப்ரீம் கோர்ட் உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டன.
விற்பனையாகாமல் இருப்பில் இருந்த வாகனங்களை தள்ளி விட டீலர்கள், விலை
தள்ளுபடி சலுகைகளை அறிவித்தன. இது ஓரளவுக்கு பலன் கொடுத்தது. வாகனங்களை
வாங்க மக்கள் முட்டி மோத, ‛ஸ்டாக் இல்லை' என்ற பலகை வைக்கும் நிலைக்கு
டீலர்கள் தள்ளப்பட்டனர்.
3. தற்போது பி.எஸ் - 3 வாகனங்களை சொந்தமாக வைத்திருப்பர்களின் நிலை என்ன?
பி.எஸ் - 3 வாகனங்களை ஏப்ரல், 1ம் தேதி முதல் விற்பனை செய்யவோ, பதிவு
செய்யவோ கூடாது என்று தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அத்தகைய
வாகனங்களை சாலையில் ஓட்ட கூடாது என சொல்லவில்லை. எனவே, பி.எஸ் - 3
வாகனங்களை தாராளமாக எந்தவித சட்டசிக்கலும் இன்றி, சாலையில் ஓட்டிச்
செல்லலாம்.
4. டீலர்கள் சில நாட்களுக்கு முன் அறிவித்த விலை தள்ளுபடி சலுகையை பயன்படுத்தி, பி.எஸ் - 3 வாகனங்களை வாங்கியவர்கள் நிலை என்ன?
இந்த வாகனங்களின் விற்பனை தேதி, வாகன கடன் வாங்கிய தேதி ஆகியவை, மார்ச்,
31ம் தேதிக்குள்இருக்கும்படி பார்க்க வேண்டும். ஏப்ரல், 1ம் தேதி முதல்
இவ்வகை வாகனங்கள் பதிவு இருக்காது. அப்படியும் மீறி வாங்குபவர்கள்,
கண்டிப்பாக வாகன பதிவு செய்யப்படும் என்ற உறுதியை டீலர்களிடம் இருந்து பெற
வேண்டும்.
5. பி.எஸ் - 3 வாகனங்களை வைத்து இருப்பவர்கள் அவற்றை விற்பனை செய்ய என்ன செய்ய வேண்டும்?
பி.எஸ் - 3 வாகனங்களை பிறரிடம் இருந்து செகன்ட்ஹாண்ட் முறையில்
வாங்குபவர்கள் சற்று யோசிக்க தான் வேண்டும். சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி,
பி.எஸ் - 3 வாகனங்களை பதிவு செய்ய முடியாது என்பதை புரிந்து கொள்ள
வேண்டும்.
6. பழைய வாகனங்கள் விற்பனையில் தற்போது ஏராளமான டீலர்கள், பெரிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நிலை என்ன?
பழைய கார் விற்பனையில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது என்பது தான் உண்மை.
சுப்ரீம் கோர்ட் உத்தரவில், பழைய வாகன விற்பனை குறித்த தெளிவு இல்லை. இதில்
தெளிவு ஏற்பட்ட பின், பழைய வாகனங்கள் விற்பனையில் முன்னேற்றம் ஏற்படும் என
கூறப்படுகிறது.
7. எதிர்காலத்தில் இப்பிரச்னை எப்படி போகும்?
மக்கள் இடபெயர்வு என்பது அதிகளவில் நடந்து வருகிறது. எனவே, பெருநகரங்களில்
வாழ மக்கள் செல்வது அதிகரிக்கவே செய்யும். இதுபோன்ற சூழ்நிலையில், அவர்கள்
பயன்படுத்தும் வாகனங்களால், புகை மாசு பிரச்னை அதிகரிக்க தான் செய்யும்.
எனவே, பேட்டரியில் இயங்கும் வாகனங்கள், ஹைபிரீடு வாகனங்கள் விற்பனையை
அதிகரிக்க வேணடும். பி. எஸ் 6 விதிமுறைகள், 2020ம் ஆண்டில் இருந்து
அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே அந்த
தொழில்நுட்பத்திற்கு உட்பட்ட வாகனங்களை உற்பத்தி செய்யும் முயற்சியில்
நிறுவனங்கள் இறங்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...