நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500
மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் 31–ந் தேதிக்குள்
(நேற்று) மூடுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
தமிழக அரசு மனு
அத்துடன், நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்கு அப்பால் மதுக்கடைகள் உள்ளன என்ற விளம்பரம் எதையும் வைக்கக்கூடாது என்றும், இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா? என 15 நாட்களுக்கு ஒருமுறை மாவட்ட கலெக்டர் மாநில அரசுக்கு அறிக்கை வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.
சமூக நலப்பேரவை சார்பில் வக்கீல் கே.பாலு மற்றும் பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்து கடந்த டிசம்பர் 15–ந் தேதி இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்தது.
ஆனால் இந்த உத்தரவில் சில திருத்தங்கள் செய்யக்கோரி தமிழக அரசும், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மேலும் சில மாநில அரசுகளும் மற்றும் மதுக்கடை உரிமையாளர்களும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
வருவாய் இழப்பு
விசாரணையின் போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி வாதாடுகையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள ஏராளமான மதுக்கடைகளை மூடவேண்டும் என்பதால் அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், மதுக்கடைகளுக்கு வருகிற நவம்பர் 28–ந் தேதி வரை உரிமங்கள் வழங்கி இருப்பதால் அதுவரை மூடும் உத்தரவை நீடிக்க வேண்டும் என்று கூறினார்.
அத்துடன் 500 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் மதுக்கடைகளை மூடவேண்டும் என்ற உத்தரவை 100 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் கடைகளை மூடவேண்டும் என மாற்றி அமைக்கவேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
டாஸ்மாக் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.கே. வேணுகோபால், மதுக்கடை உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், அரிமா சுந்தரம், கபில் சிபல், ராஜீவ் தவான், ராஜூ ராமச்சந்திரன் ஆகியோரும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு மாநிலங்களின் வருவாயை பெருமளவில் பாதிக்கும் என்றும், அந்த உத்தரவு அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் வாதிட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
மனுதாரர்களில் ஒருவரான வக்கீல் கே.பாலு வாதாடுகையில், மதுக்கடைகளில் இருந்து வரும் வருவாயை நம்பி மக்கள் நல பணிகளை செய்வதாக மாநில அரசு கூறுவதை ஏற்க முடியாது என்றும், பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்தபோதிலும் அங்கு மக்கள் நல திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
மனுக்களின் மீதான விசாரணை நேற்று முன்தினம் முடிவடைந்ததை தொடர்ந்து, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை உடனே மூடுமாறு சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டு தீர்ப்பு கூறியது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:–
தமிழகத்துக்கு
விதிவிலக்கு கிடையாது
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்திருக்கும் மதுக்கடைகளை மூடிவிட வேண்டும். அந்த இடங்களில் உள்ள மதுபான கடைகளின் உரிமம் கடந்த டிசம்பர் 15–ந் தேதிக்கு முன்னர் புதுப்பிக்கப்பட்டு இருந்தால், அந்த கடைகளை மட்டும் வருகிற செப்டம்பர் 30–ந் தேதி வரை நடத்திக்கொள்ளலாம். அதன்பின்னர் அங்கு மதுக்கடைகளை நடத்தக்கூடாது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசே மதுக்கடைகளை நடத்தி வருவதால் இந்த விதிவிலக்கை தமிழகத்துக்கு வழங்க முடியாது.
தமிழ்நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் மதுக்கடைகள் நடத்த இன்று (நேற்று) முதல் தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவின் மூலம் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகள் முழுமையாக மூடப்படவேண்டும்.
20 ஆயிரத்துக்கும்
குறைவான மக்கள் தொகை
அதே நேரத்தில் 20 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை உள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை
நடத்துவதற்கான கட்டுப்பாடு 500 மீட்டரில் இருந்து 220
மீட்டராக குறைக்கப்பட்டு
உள்ளது.
தேசிய, மாநில நெடுஞ்
சாலைகளில் உள்ள உணவு விடுதிகள், நட்சத்திர விடுதிகள், மனமகிழ் மன்றங்கள்
ஆகியவற்றுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். எனவே அந்த இடங்களிலும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. அவற்றுக்கு விதிவிலக்கு அளித்தால் இந்த தீர்ப்பின் நோக்கம் பயனற்றதாகிவிடும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.
3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன
தமிழ்நாடு முழுவதும் 5,672 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இவற்றில் சுமார் 3,400 கடைகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் 500 மீட்டர் தொலைவுக்குள் அமைந்து உள்ளன.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து இந்த 3,400 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை உடனே மூடுமாறு நேற்றிரவு டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அந்த கடைகள் மூடப்பட்டன. அந்த கடைகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு அப்பால் மாற்றப்படுகின்றன
மாற்றுப்பணி
மூடப்பட்ட கடைகளில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்பட உள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யு.சி.) பொதுச்செயலாளர் தனசேகரன் நேற்று கூறுகையில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு காலி பணியிடங்களில் மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் வருகிற 9–ந் தேதி டாஸ்மாக் பணியாளர்கள் பாதுகாப்பு பேரணி நடத்த இருப்பதாகவும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு நல்ல விடிவு காலத்தை காட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
This comment has been removed by the author.
ReplyDeleteYEAN PMK VA MENTION PANNALA NEEGALAM NALLAVRAUVINGA
ReplyDelete