கணவன் மனைவி... இந்த உறவுக்குள் நடக்காத கெமிஸ்ட்ரியா? தேடி அலசிப் பார்த்தால் அத்தனை மனைவிகளும்... கணவர்களிடம் பெரும்பாலும் தனது சண்டைக்கோழி முகத்தையே காட்டுகின்றனர். சண்டைக் கோழிகளை கட்டிக் கொண்டு அவஸ்தைப்படும் ஆண்களுக்காக கவலைப்பட யாரும் இல்லை. பெண்ணின் கோபம் எல்லை கடந்து விட்டால் வீடு வீடாகவே இருக்காது. போர்க்களம் போல் மாறிவிடும்.
போர்க்களத்தில் யாரும் நிம்மதியாக இருக்க முடியாதே. பெண் சந்தோஷமாக இருந்தால்தான் அனைவரும் மகிழ்வை உணர முடியும். வீட்டில் சந்தோஷ மனநிலை உள்ளவர்களால்தான் அலுவலகத்திலும் திறம்பட செயல்பட முடியும். மனைவியைச் சமாளிக்க சிரமப்படும் ஆண்களுக்கு இது தற்காப்பாகவும் அமையும். எவ்வளவு பெரிய சண்டைக் கோழியாக இருந்தாலும் அன்பிற்கு இசையாத பெண்ணும் உண்டோ?!
* உங்கள் மனைவிக்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? என்பதில் தெளிவாக இருங்கள். அவர்களுக்கு கோபம் ஏற்படுத்தும் செயல்களை, அவர்கள் கண்பட செய்ய வேண்டாம். உங்களுக்கு உங்கள் தங்கை மீது அதிகபட்ச பாசம் இருக்கலாம். ஆனால் அதை மனைவியின் கண் எதிரில் வெளிப்படுத்தி அவர்களை கடுப்பேற்றுவதாக நினைத்து, மனைவிக்கும் உங்களுக்குமான அன்பின் பாலத்தை சிதைத்து விடாதீர்கள். மனைவிகளைப் பொறுத்தவரை உங்கள் அன்பு முழுவதும் அவர்களுக்கானது என்ற பொசசிவ்னெஸ் இருக்கும்... புரிந்து செயல்படுங்கள். ‘‘இந்த உலகத்தில் என் அன்பு மொத்தமும் உனக்கே என்று உணர வைக்கலாம்.
* உங்கள் மனைவியின் நிறை குறைகள் உங்களுக்கு புரிந்திருக்கும். பலர் இருக்கும் போது அவரின் பிளஸ் பாயிண்டுகளைச் சொல்லி பாராட்ட தயங்க வேண்டாம். ‘‘நீங்கள் பெரிய ஓவியராமே’’ உங்கள் கணவர் அடிக்கடி சொல்வார் என்று உங்கள் நட்பு வட்டத்தில் இருந்து கமெண்ட் வந்தால் சந்தோஷ மழையில் நனையப்போவது நீங்களும் தான். உங்கள் மனைவி பற்றிய பாசிட்டிவ் எண்ணங்களை எங்கும் விதையுங்கள்..அத்தனையும் அன்பாய் திரும்பக் கிடைக்கும்.
* எப்பொழுதும் உங்களுக்குள்ளான சண்டை எங்கிருந்து துவங்குகிறது என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த எல்லைக்கு முன்பாகவே விவாதத்தை நிறுத்தி விடுங்கள். பல வீடுகளில் மனைவியிடம் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும் விஷயம் விவாதமாக மாறி பிறகு, மிகப்பெரிய புயலாய் உருவெடுத்து சண்டையில் முடியும். உங்கள் அறிவை நிரூபிக்கும் இடம் அது இல்லை. விவாதத்தை நிறுத்தி விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் மனைவி சொல்லும் கருத்துகளை மனம் திறந்து கேளுங்கள். அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பதும் புரிதலை மேம்படுத்தும்.
* எதிர்பாராத சந்தர்ப்பத்தில் உங்கள் மனைவி ஏதோ ஒரு விஷயத்தில் கோபமாகி, சண்டை துவங்கிவிட்டது எனில், நீங்கள் வெள்ளைக் கொடி வேந்தராக மாறிவிடுங்கள். பெண்களால் தனியாக சண்டை போட முடியாது. அவர்கள் கோபத்தின் உச்சத்தில் கத்தினாலும் உங்கள் மெளனம் அவர்களை விரைவில் அமைதிப்படுத்திவிடும்.
* நீங்கள் சமாதான வார்த்தை கூறியும் உங்கள் மனைவி கோபத்தை விட்டு வெளியில் வராமல் நெருப்பு வார்த்தைகளைக் கொட்டினால் அந்த இடத்தை விட்டு வெளியில் சென்று விடுங்கள். நீங்கள் எதிர்த்துப் பேசாவிட்டால் உங்கள் மனைவியால் சண்டையைத் தொடர இயலாது.
* உங்கள் மனைவிக்கும் உங்களுக்கும் அன்று ஏதோ ஒரு விஷயம் முரண்பாடாக மாறியிருக்கலாம். இன்னும் சிறிது நேரத்தில் சண்டை வரப் போகிறது என்றால் உடனடியாக அவர்களை வேறு விஷயத்தில் டைவர்ட் செய்யுங்கள். அவர்களுக்கு பிடித்த விஷயம் குறித்து பேசத் தொடங்குங்கள்..அப்போதைக்கு அவர்கள் மனதில் கோப நெருப்பு அணைந்து விடும்.
* உங்கள் மனைவி கோபத்தில் இருப்பது தெரிந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் குழந்தைகள் பற்றியும், அவர்களது எதிர்காலம் அல்லது உங்கள் இருவரின் அடுத்த இலக்கு என்பது பற்றியும் பேசத் தொடங்குங்கள். தன் கோபம் எவ்வளவு அர்த்தமற்றது என்று புரிந்து கொண்டு உங்கள் மனைவி வேறு முக்கிய விஷயங்களில் மனதைத் திருப்புவார்.
* வீட்டில் இருந்தால் தானே சண்டை வரும். மனைவியை உடனடியாக சினிமா, ஹோட்டல், பார்க் என்று உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற இடத்திற்கு அழைத்து செல்லுங்கள். அவர்களது விருப்பத்தைக் கேட்டு நிறைவேற்றுங்கள் மூட் மாறிவிடும். உங்களது வாழ்வின் முக்கிய தருணங்களில் ஆச்சர்ய பரிசுகளால் அசத்த மறந்து விட வேண்டாம். உங்களுக்குள்அன்பின் பிணைப்பு அதிகரிக்கும்.
* அன்றைய காலை கோபத்தில் துவங்கியிருந்தாலும் அதைப் பற்றி கண்டு கொள்ளாமல் உங்கள் மனைவி குறித்த நேரத்துக்கு சாப்பிட்டாரா என்பது போன்ற அக்கரையுள்ள கேள்விகளை பகிர்ந்து கொள்ளுங்கள். அவர் நினைப்பதை பேச வாய்ப்பளித்து அவர் இடத்தில் இருந்து...குடும்ப சூழல் அடிப்படையில் எது நடைமுறையில் சாத்தியம் என்பதை புரிய வையுங்கள். கோபம் குறைந்து அன்பின் மழையால் உங்களை நனைப்பாள் மனைவி.
* உங்கள் மனைவியின் வேலைகளை நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கான தனிமை நேரத்தில் அன்பில் மிச்சமின்றி மூழ்கடித்து விடுங்கள். அவ்ளோ தான் உங்கள் தேவதையின் அன்பு மொத்தமும் உங்களுக்கு மட்டுமே. வாழ்வை ஒவ்வொரு நொடியும் கொண்டாடுங்கள் கணவர்களே!
Super sir
ReplyDelete