Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

3) TNTET - 2017:மாணவர்களை ஸ்டாலின் குழப்புகிறாரா?- அமைச்சர் செங்கோட்டையனுக்கு தங்கம் தென்னரசு பதிலடி.

       ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில் ஸ்டாலின் மாணவர்களை குழப்பவில்லை.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்தான் மாணவர்களை குழப்புகிறார் என்று திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த ஸ்டாலின் வெளியிட்ட விவரங்கள் பொதிந்த அறிக்கைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விரக்தியுடன் பதில் கூறியிருப்பது விந்தையும், வேடிக்கையும் நிறைந்ததாக இருக்கிறது.ஸ்டாலினின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு பல வருடங்களாக ஆசிரியர் பணிக்காக காத்துக் கொண்டிருப்பவர்களின் நலனையும், தேர்வு எழுதுபவர்களுக்கு போதிய கால அவகாசம் அளித்து தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதையும் சார்ந்தவை என்பதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்குப் புரியாமல் போனது ஆச்சர்யமாக இல்லை என்றாலும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவோருக்கு உண்மை நிலை தெரிய வேண்டும் என்பதற்காக சில விளக்கங்களை மட்டும் இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான உச்ச நீதிமன்ற வழக்கை மூன்று வருடங்கள் கவனிப்பாரற்று நிலுவையில் போட்டு வைத்தது அதிமுக அரசுதான். அதற்கு முக்கியக் காரணம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்களை 2011ல் இருந்தே அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்த வினோத நிகழ்வுதான் என்பதை கற்றறிந்த கல்வியாளர்கள் முதல் கடைக்கோடியில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விரும்புவோர் வரை அனைவரும் தெளிவாக அறிந்தே வைத்துள்ளார்கள்.ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அமைச்சர் ஆவதற்கான வாய்ப்பே இல்லாமல் அவதிப்பட்ட கே.ஏ. செங்கோட்டையன் திடீர் விபத்து போல் பள்ளிக் கல்வித்துறைக்கு வந்திருப்பதால் கல்வி இலாகாவில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் அவர் இன்னும் முழுமையாக ஆராய்ந்து தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதற்கு ஸ்டாலின் நிச்சயம் பொறுப்பேற்க முடியாது.உயர் நீதிமன்ற உத்தரவின்படியே ஏப்ரல் 2017-க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துகிறோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஒப்புவித்துள்ளார். நீதிமன்றங்களின் உத்தரவை சிரமேற்கொண்டு நிறைவேற்றி நீதியரசர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையுள்ள கருணாநிதியின் வழி வந்த ஸ்டாலினும் எப்போதும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு மதிப்பு அளிப்பவர் என்பதை அமைச்சர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.அதே நேரத்தில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டும் உதாசீனப்படுத்தியது அதிமுக அரசு; உள்ளாட்சி தேர்தலை 2016 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தும் இன்றுவரை அந்த தேர்தலை நடத்தாமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணை வரும் போதெல்லாம் நீதிமன்ற கண்டனத்தை பெற்றுக் கொண்டிருப்பது இந்த பினாமி அரசு.ஆகவே ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டியிடுவோரின் நலன்களையும், உயர் நீதிமன்ற உத்தரவையும் தேவையில்லாமல் வம்புக்கு இழுத்து பதில் சொல்லும் முன்பு, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத காத்திருக்கும் ஆசிரியர்களின் எதிர்காலத்தை அமைச்சர் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
 கல்வி இறுதியாண்டு முடிந்தவுடன் தேர்வு என்றுவைக்காமல், கால அவகாசம் கொடுத்து தேர்வை நடத்த வேண்டும் என்பதே ஸ்டாலின் அறிக்கையின் சாரம்சம் என்பதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.'மாணவர்களை ஸ்டாலின் குழப்புகிறார்' என்று இன்னொரு விதண்டாவாதத்தை எடுத்து வைத்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர். நேற்றைய தினம் பத்தாம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடத்தில் 'இந்திய திட்டக்குழுவின் தலைவர் யார்' என்று கேட்கப்பட்ட கேள்வியைப் பார்த்து மாணவர்கள் எல்லாம் திடுக்கிட்டுப்போய் விட்டார்கள். ஏனென்றால் திட்டக்குழு 1.1.2015 அன்றே கலைக்கப்பட்டு அதற்கு பதில் 'நிதி அயோக்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது கூட தெரியாமல் பினாமி அரசின் கீழ் உள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் துறை தயாரித்த கேள்வித்தாளில் 'திட்டக்குழு தலைவர்' பற்றி கேள்வி கேட்டிருப்பதுதான் மாணவர்களை ஒட்டுமொத்தமாக குழப்பும் செயல்.ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இரண்டாவது இடத்திற்காவது வருவோமா என்ற குழப்பம், அந்த தேர்தலுக்குப் பிறகு அமைச்சர் பதவியில் நாம் நீடிப்போமா என்ற குழப்பம், ஆட்சியை போனாலும் கட்சி தலைமையை கைப்பற்ற என்ன முயற்சி எடுக்கலாம் என்பதில் குழப்பம்- இப்படி பல்வேறு குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஸ்டாலினைப் பார்த்து 'மாணவர்களை குழப்புகிறார்' என்பது விரக்தி நிறைந்த அறிக்கையாக இருக்கிறது.ஆகவே ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையை நன்கு படித்துப் பார்த்துவிட்டு, , அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல்வேறு குழப்பங்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தீர்வு காண முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பாக ஆசிரியர் தேர்வுக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து, இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை போதிய கால அவகாசம் கொடுத்து நடத்த வேண்டும் என்று மீண்டும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive