ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் மற்றும்
தேர்வுக்கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்திய ஜனநாயக
வாலிபர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது
இதுதொடர்பாக அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் எம்.செந்தில், செயலாளர்
எஸ்.பாலா ஆகியோர் கூட்டாக திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ''ஆசிரியர்
தகுதித் தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.50-ம், தேர்வுக் கட்டணமாக
ரூ.500-ம் (எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250)
வசூலிக்கப்படுகிறது. படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும்
இளைஞர்களிடத்தில் தனியார் நிறுவனங்களைப் போல வியாபார நோக்கோடு ஆசிரியர்
தேர்வு வாரியம் செயல்படுவது எந்த விதத்தில் நியாயம்?
கடந்த 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித் தேர்வு மூலம் விண்ணப்பக் கட்டணம்,
தேர்வு கட்டணம் என்ற பெயரில் ரூ.54 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. பணமதிப்பு நீக்க
நடவடிக்கையால் தொழில்கள் முடங்கியுள்ளன. வார்தா புயலால் மக்கள் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய சூழலில் வேலையில்லாத இளைஞர்கள் தேர்வு கட்டணத்தை எப்படி செலுத்த
முடியும்? என்பதை அரசு சிந்தித்துப்பார்க்க வேண்டும். எனவே, தகுதித்
தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணத்தை முழுமையாக
ரத்துசெய்ய வேண்டும். தகுதியுள்ள அனைவரையும் தேர்வெழுத அனுமதிக்க
வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...