ஹால் சூப்பர்வைசர் குலுக்கலில் சீட்டு எடுத்து நம் எக்ஸாம் சென்டர் எது என்று தெரிந்தவுடனேயே ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டு விடுகிறது.
உனக்கு எந்த சென்டர், எனக்கு எந்த சென்டர் என்று ஒவ்வொருவரும் விசாரிப்பதைப் பார்த்தால், ஏதோ வருடக்கணக்கில் அங்கு இருப்பது போல் தான் தோன்றும் புதிதாகப் பார்ப்பவர்களுக்கு. அதிக பட்சம் 10 நாட்கள் தான் டுயூட்டி. தேர்வு நாளன்று காலை 8 மணிக்கே கிளம்பி, எக்சாம் சென்டர் போய், ஹால் எது என்று செலக்ட் செய்து, மொபைல் போனை விவாகரத்து செய்துவிட்டு, அந்த ஹாலுக்கு பையுடன் போகும்போது ஒரு கம்பீரம் மனதுக்குள். மொத்தம் மூன்றரை மணி நேரம் “உள்ளே”. முதல் அரைமணி நேரம் வழக்கமான பரபரப்புடன் சென்று விடுகிறது. அடுத்த மூன்று மணி நேரம் தான் காதலியைப் பிரிந்த காதலன் போல் ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ?ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு விதம். கல்வெட்டை செதுக்குவது போல் எழுதும் மாணவர்கள் ஒரு 2 சதவீதம் தேறுவார்கள். அனேகமாக அவர்கள் தான் இந்த முதல் மதிப்பெண் பெறும் வகையறாக்கள் என்று நினைக்கிறேன். இன்னும் சிலரோ, கோழியின் கால்களில் பேனாவைக் கட்டி விட்டது போலவே அற்புதமாக கிறுக்குகிறார்கள்.(அதையும் திருத்தி மார்க் போடுபவரை நினைத்தால் எனக்கு இப்பவே வயிற்றைப் பிசைகிறது). சிலரோ மேலே ஏதோ எழுதியிருப்பதை பார்த்து எழுதுவது போல் அடிக்கடி நெற்றியை சுருக்கி மேலே பார்த்து பார்த்து எழுதுகிறார்கள்.
மொத்தத்தில் பிரைவேட் ஸ்கூல் மாணவனாக இருந்தால் இரண்டு ஆண்டுகளாக ஜல்லி அடித்ததையும், அரசுப் பள்ளி மாணவனாக இருந்தால் ஆறு மாசமாக அரைத்த மாவையும் மூன்று மணி நேரத்தில் வாந்தி எடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துடன் செயல் படுவதைக் காண முடிகிறது.
சிலர் வேர்க்கும் கையை கர்ச்சீப் கொண்டு துடைத்து எழுதுவதும், சிலர் பேனாவை வாயில் அடிக்கடி கடித்துக் கொண்டு எழுதுவதும்,சிலர் மட்டும் எப்போதும் ஹால் சூப்பர்வைசர் செல்லும் திசையையே பார்த்து கொண்டு இருப்பதும் சுவாரசியமானவை தான். இந்த சூப்பர்வைசரையே பார்த்துக் கொண்டு இருக்கும் ஜாதியினர் தான் சற்று ஆபத்தானவர்கள். அருகில் சென்றால் ஒன்றுமே தெரியாததுபோல் முழிப்பதும் விலகி வந்தால் மீண்டும் கண்களை உருட்டுவதுமாக இருப்பார்கள். பறக்கும் படையினர் இவர்களைத்தான் எவ்வளவு எளிதாக இனம் காண்கின்றனர்.
இவ்வளவு விசயங்கள் நடந்தாலும் ஹால் சூப்பர்வைசர்களுக்கு நேரம் யுகமாய் தான் கழிகிறது. சிலர் கைகளை பின்னால் கட்டிக் கொண்டு, ஒவ்வொரு அடியாக காலுக்கு வலிக்காமல் நடப்பார்கள். சிலர் முன்புறம் வயிற்றின் பாரத்தை சுமந்தபடி கைகளைக் கட்டி(பெரும்பாலும் தொந்தி சூப்பர்வைசர்கள்) மிக மெதுவாக வாக் போவார்கள். சில ஒல்லி பிச்சான்கள் மட்டும் கையை வீசி வீசி ஹாலுக்குள்ளேயெ ஓடுவார்கள். இன்னும் சிலரோ அவ்வப்போது வாயில் பக்கம் வந்து தலையை மட்டும் வெளியே நுழைத்து பார்ப்பார்கள். அப்போது பக்கத்து ஹாலிலும் இதே போல் எட்டிப் பார்ப்பவர் சில வினாடிகளே தெரிந்தாலும், அந்த சில வினாடிகள் அர்த்தமுள்ளவை.(பிசிக்ஸ் பாடத்தில் ரெசனொன்ஸ் காலம் என்று ஒரு இசைக்கவையைத் தட்டி ஒத்திசைவு காண்பார்களே அது போல).
புத்தருக்கு ஞானம் போதி மரத்தின் அடியில் வந்தது போல் ஹாலுக்குள் தான் ஞானம் பிறக்கிறது.(அடுத்த வருடம் நாம் எப்படி இதில் இருந்து தப்பிப்பது என்று) பலர் மோன நிலை கூட அடைந்து விடுகிறார்கள். டயாபட்டீஸ் உள்ள சூப்பர்வைசர்கள் படும் பாடு சாபக்கேடு.11.30 மணிக்கு கிறுகிறுக்கும்போது, முன்னேற்பாடாக கொண்டு சென்ற பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்து நைசாகப் பிரித்தால் அப்போது தான் 3 வரிசையில் இருக்கும் மாணவர்களும் நம்மையே உற்று நோக்குவார்கள். வாயில் பிஸ்கெட்டை வைத்துக் கடித்தால் அந்த சத்தம் இப்போது மட்டும் கடைசி பென்ச் வரை தெளிவாகக் கேட்கும். சத்தமின்றி பிஸ்கெட் சாப்பிடும் கலையை ஆசிரியர்கள் தேர்வு இல்லாத நாட்களில் வீட்டில் பயிற்சி பெறுவது ஒன்று தான் இதற்கு தீர்வு. தண்ணீர் கூட அளந்து தான் குடிக்க வேண்டும். இல்லை என்றால் சூச்சூவுக்கு செல்ல டிப்பார்ட்மெண்ட் ஆபீசர் வந்து ரிலீவ் செய்யும் வரை “குட்டி போட்ட பூனை” யாக அலைய வேண்டும்.
செல்போனை பிடுங்கி விட்டு உங்களையும் மூன்றரை மணி நேரம் யாருடனும் பேசாமல் இருக்கும்படி சிறை வைத்தால் தான் தெரியும் ஹால் சூப்பர்வைசர் பணி எவ்வளவு கஷ்டம் என்று. விடைத்தாள் கட்டை ரூட் ஆபீசரிடம் ஒப்படைத்து விட்டு கிளம்புவதற்குள் ஒரு நாளின் பெரும்பகுதி முடிந்து விடுகிறது. தேர்வுப் பணி முடிந்து வீட்டுக்கு வந்து பார்ப்பதற்குள் தமிழ்நாட்டின் முதல்வர் மாறி இருக்கிறார், பங்கு மார்க்கெட் சரிந்திருக்கிறது, ”ஏதோ ஒரு வாசல்” போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது.
மூன்றரை மணி நேரத்தில் போதிமர ஞானம் கிடைக்காதவர்களுக்கு கடவுளின் அருள் இருந்தால்(?) கூடுதலாக ஒரு மணி நேரம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை தவறாமல் கோயிலுக்குச் செல்பவர்களுக்கு மட்டும் டிஸ்லக்ஸியா, ஸ்கிரைபர் வைக்கும் மாணவர்கள் நம் ஹாலில் வருமாறு கடவுள் ஏற்பாடு செய்வார்.
இப்படியாக தான் ஒவ்வொரு நாளும் சென்றாலும், நான்காவது நாளில் இருந்து அதுவே பழகி விடுகிறது. இத்தகைய தேர்வு முறைகளை நீக்கி யாராவது வருங்காலத்தில் புது யுக்திகளை வைத்தால், அவர்களுக்கு இந்தக் கட்டுரையை இப்போதே அர்ப்பணம் செய்கிறேன்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...